தேடுதல்

அனைத்து புனிதர்கள் அனைத்து புனிதர்கள்   (BAV Vat.sir. 559, f. 93v)

திருத்தந்தை: புனிதர்கள் விலைமதிப்பற்ற முத்துக்கள்

இறை மக்களின் தினசரி வாழ்வில் புனிதத்துவம் இருப்பதை ஏற்பது முக்கியம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நற்செய்தியை முழுமையாய் வாழ்தல் இயலக்கூடியதே மற்றும், அது பலனளிக்கவல்லது என்பதை, புனிதர்கள் நம் அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 06, இவ்வியாழனன்று “புனிதத்துவம் இன்று” என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டோரிடம் கூறியுள்ளார்.  

அக்டோபர் 3 இத்திங்கள் முதல், 6 இவ்வியாழன் வரை, அருளாளர் மற்றும், புனிதர் நிலைகளுக்கு உயர்த்தும் படிநிலைகளைக் கண்காணிக்கும் பேராயம், “புனிதத்துவம் இன்று” என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறக்குறைய முன்னூறு பேரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இவ்வியாழனன்று சந்தித்த திருத்தந்தை, புனிதர்கள் விலைமதிப்பற்ற முத்துக்கள் என்று கூறியுள்ளார்.

புனிதத்துவத்திற்கு பரிந்துரைகள்

Gaudete et exsultate அதாவது அகமகிழ்ந்து அக்களி என்ற திருத்தூது அறிக்கை குறித்து சிந்திக்கும் ஆவலில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு, இக்காலத்தில் புனிதத்துவத்திற்கான அழைப்பை அன்றாடம் எவ்வாறு வாழ்வது என்பது குறித்த பரிந்துரைகளை எடுத்துரைக்கும் நோக்கத்தில் இதன் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

புனிதத்துவத்திற்கு உலகளாவிய அழைப்பு என்பதே, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் மையப் போதனையாகும் எனவும், கடவுளின் புனித மக்களின் தினசரி வாழ்வில் புனிதத்துவம் இருப்பதை ஏற்பது முக்கியம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அருளாளர்கள், மற்றும், புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களை, எடுத்துக்காட்டுகளாய், பரிந்துரையாளர்களாய் மற்றும், ஆசிரியர்களாக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ள திருஅவை, நற்செய்தியை முழுமையாய் வாழ்வது இயலக்கூடியது மட்டுமல்ல, அது பலனளிக்கவல்லது என்பதையும் புனிதர்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளது என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதத்துவம் என்பது, நாம் கடவுளால் அன்புகூரப்படுபவர்கள் மற்றும், அவரது அன்பையும் இரக்கத்தையும் இலவசமாகப் பெறுகின்றவர்கள் என்ற உண்மையை உணர்வதே முதலும், முக்கியமானதுமாகும் என்று எடுத்தியம்பியுள்ள திருத்தந்தை, இதனை திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், கார்லோஸ் அக்கூட்டிஸ், அசிசி நகர் புனித பிரான் போன்ற அருளாளர்கள் மற்றும் புனிதர்களின் வாழ்வின் வழியாக அறிகிறோம் என்று கூறியுள்ளார்.

புனிதத்துவத்தின் நன்மதிப்பை ஏற்றல்

புனிதத்துவம், கிறிஸ்தவ சமூகங்களின் வெளிப்படையான வாழ்விலிருந்து மிளிர்கிறது எனவும், இது இறை மக்களால் அங்கீகரிக்கப்படுகின்றது என்றும், இது, புனிதர்கள் என்பதை ஏற்பதற்கு முக்கியமான கூறு என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, புனிதர்கள் எப்போதும் விலைமதிப்பற்ற முத்துக்கள் என்று கூறியுள்ளார்.

புனிதர்கள், எப்போதும் உயிர்த்துடிப்புள்ளவர்கள் மற்றும், காலத்திற்கேற்றவர்கள் என்றும், அவர்கள் தங்களின் முக்கியத்துவத்தை ஒருபோதும் இழப்பதில்லை என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, அவர்களின் முன்மாதிரிகை, நம் காலத்து ஆண்கள் மற்றும் பெண்களின் மனங்களை ஒளிர்விக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

புனிதத்துவத்திற்கு இறை மக்கள் மத்தியில் நன்மதிப்புக்களைப் பெறுகின்ற நம்பிக்கையாளர்கள், புனிதர் நிலைக்கு எவ்வாறு உயர்த்தப்படுகின்றனர் மற்றும், அத்தகையோர் யார் என்பதை விளக்கும் நோக்கத்தில் இம்மூன்று நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:30