தேடுதல்

பல்மதத் தலைவர்கள் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பல்மதத் தலைவர்கள் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

நல்லிணக்க விதைகளை விதைக்க முயல்வோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுளின் திருப்பெயர் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் ஆசீர்வதிக்க முடியாது: திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மதங்களைப் போருக்குப்  பயன்படுத்த முடியாது. அமைதி மட்டுமே புனிதமானது என்றும், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் ஆசீர்வதிக்க யாரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றும், பல்மதத் தலைவர்கள் கூட்டம் ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 25, இச்செவ்வாயன்று, உரோம் நகரின் EUR பகுதிலுள்ள “Nuvola” என்னும் கருத்தரங்கு மையத்தில் ‘அமைதிக்கான அழுகுரல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடல் என்ற ஆயுதத்தின் வழியாக மோதல்களைத் தணிக்க உலநாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நாம் ஒருபோதும் போருக்கு அடிமையாகிவிடாமல், நல்லிணக்க விதைகளை விதைக்க முயல்வோம் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான நமது வேண்டுகோளை இன்று விண்ணைநோக்கி எழுப்புவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அணு ஆயுத அச்சுறுத்தல்கள் தரும் துயரங்களை எதிர்கொண்டு, எல்லாநிலைகளிலும் அதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க நாம் அனைவரையும் அழைக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, அசிசியில் புனித இரண்டாம் ஜான் பால் விரும்பிய வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் மாநாட்டை ஊக்கப்படுத்திய அதே உடன்பிறந்த உணர்வில் எங்களுடன் இணைந்த கிறிஸ்தவ தலைவர்களுக்கும் பிற மதத்தினருக்கும் சிறப்பான விதத்தில் நன்றி கூறுகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதிக்கான வேண்டுகோள், விரோதமான சொல்லாட்சிகளால் மட்டுமல்ல, அலட்சியத்தாலும் அடிக்கடி முடக்கப்படுகிறது என்று கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெறுப்பால் அமைதி மௌனமாக்கப்படுகிறது என்றும் போர் தொடரும்போது இவ்வெறுப்பு பரவுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

போர் என்ற விபரீதமான பகுத்தறிவு நம்மைத் தொற்றிக் கொள்ளாமல் இருக்கச் செய்வோம் என்றும், எதிரியின் மீதான வெறுப்பின் வலையில் நாம் சிக்காமல் இருப்போம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது தனிப்பட்ட நோக்கத்தின் முதன்மையான குறிக்கோளாக, அமைதியை நிலைநிறுத்துவோம் என்றும் ஒவ்வொரு நிலையிலும் சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் வளர்ச்சியை கொணர்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2022, 13:51