தேடுதல்

கஜகஸ்தானின் தலை நகரான நூர் சுல்தான்.  கஜகஸ்தானின் தலை நகரான நூர் சுல்தான்.  

கஜகஸ்தான் திருத்தூதுப்பயணம் ஒரு முன்னோட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 13 உள்ளூர் நேரம் காலை 7.15 மணிக்கு ரோம் பியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய இலங்கை நேரப்படி மாலை 5.15 மணியளவில் கஜகஸ்தானின் நூர் சுல்தான் சென்றடைவார்.

மெரினா ராஜ் -வத்திக்கான்

தனது 38 வது திருத்தூதுப்பயணத்தை  செப்டம்பர் 13 இச்செவ்வாயன்று தான் தங்கியிருக்கும்  சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 6.25 க்கு தொடங்க இருக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாதம்,14, 15 ஆகிய இரு நாள்களில், கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் நடைபெறவிருக்கும் ஏழாவது உலகப் பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில்  கலந்துகொண்டு அதை நல்லமுறையில் நிறைவு செய்ய இருக்கின்றார் திருத்தந்தை.  இத்தாலிய விமானம் ITA A 330  ல் உள்ளூர் நேரம் காலை 7.15  மணிக்கு  தன் தவத்திருப் பயணத்தை  உரோம் பிஃயூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தொடங்க இருக்கின்றார். 6 மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்ட இப்பயணத்தில்  திருத்தந்தை இத்தாலி, க்ரோவேஷியா, போஸ்னியா, செர்பியா, பல்கேரி, துருக்கி ஜோர்ஜியா, அசர்பைஜான் போன்ற நாடுகளைக் கடந்து செல்ல இருக்கின்றார் எனவும், உடனுக்குடன் செய்திகளை வழங்க தன்னுடன் விமானத்தில்  செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், அடங்கிய குழுவை அழைத்துச் செல்கின்றார். எனவும்  விமான நிலையத்தில் porto santa rufina மறைமாவட்ட ஆயரை சந்திப்பார் எனவும்  திருப்பீட செய்தியகம் தெரிவிக்கின்றது.

நூர் சுல்தான் பன்னாட்டு விமான நிலையத்தினை இந்திய இலங்கை நேரம் மாலை 5.15க்கு சென்றடைந்து அங்குள்ள வரவேற்பறையில் அந்த நாட்டு தலைவர்கள் மற்றும்  திருத்தந்தையின் அரசுத்தூதர் francis assisi chullikatt  அவர்களின் அதிகாரப் பூர்வ வரவேற்பினைப் பெறுவார் என்றும், இரண்டு இளையோர் பாரம்பரிய உடையுடன் திருத்தந்தைக்கு மலர்கள் கொடுத்து  தங்களது வரவேற்பினைத் தெரிவிப்பர் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  அதன்பின் காரில் கஜகஸ்தான் அரச அரண்மையான palace ak orda  என்று அழைக்கப்படும் வெள்ளை உயர்மாளிகைக்கு சென்று அவருக்கு அளிக்கப்பட இருக்கும் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உள்ளூர் நேரம் மாலை 05.30 க்கு கஜகஸ்தான் அரசியல் சமூக பொருளாதார பொறுப்பில் பணியாற்றும் தலைவர்களை QAZAQ இசை அரங்கில் சந்திக்கின்றார்  திருத்தந்தை. மறு நாள் உள்ளூர் நேரம் காலை  10.00 மணிக்கு Palazzo dell’Indipendenza எனப்படும் சுதந்திர மாளிகையில் நடைபெறும் அனைத்துலக  மதத்தலைவர்களின் அமைதி வழிபாட்டில் பங்கேற்று உலக பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கின்றார். மேலும்  மாலை 04.45 மணிக்கு எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறும் திருப்பலியிலும் பங்கேற்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு

உலக மற்றும் பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு  2003 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் முதன் முதலில் கஜகஸ்தானின் அஸ்தானா மாவட்டத்தில் உள்ள நூர் சுல்தான் என்னும் இடத்தில் அந்நாட்டின்  முதல் குடியரசுத்தலைவர் அபிஷெவிக் நாசர்பயாவ் என்பவரால் தொடங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டமானது 2003, 2006, 2009, 2012, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் முறையாக நடைபெற்று வந்தது 2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய கூட்டம் கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இவ்வாண்டு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. இஸ்லாமியம், கிறிஸ்தவம், யூதம், புத்தம், ஷிண்டோ, தாவோயிசம் மற்றும் ஏனைய பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் திருத்தந்தையும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். இக்கூட்டங்கள் முடிந்த உடன் இது தொடர்பான பதிவுகளை கோரிக்கைகளை தீர்மானங்களை உலக நாடுகளின் அரசிற்கும், நாட்டு மக்களுக்கும் வெளியிடுவதை தங்களின் வழக்கமாக இம்மாநாடு கொண்டுள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றாக கூடி  நிரந்தர பன்னாட்டு அமைப்புக்களை உருவாக்குதல், பல்சமய உரையாடல், ஒன்றிணைந்து முடிவுகளை எடுத்தல் போன்றவற்றைப் பற்றிக் கலந்துரையாட இம்மாநாடு உதவுகின்றது. தொற்று நோயின் தாக்கத்திற்குப் பிறகு இவ்வாண்டு உலக மக்களின் சமூக மற்றும் ஆன்மீக வளர்சியில் அனைத்து மதத்தலைவர்களின் பங்கு என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறுகின்றது பல்சமயக் கலந்துரையாடல்களில் முன்னிலை வகிப்பது  உலக அமைதி, மற்றும் வளர்ச்சி, பன்னாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதில் உலக மதத்தலைவர்களின் பங்கு போன்றவை பற்றி இம்மாநாட்டில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கஜகஸ்தான் ஆசியாவின் மையத்தில் கடல் நீரே இல்லாத அதிக அளவு நிலப்பரப்பால் சூழ்ந்த பகுதி, இதன் வடக்கு மற்றும் மேற்கு பகுதி இரஷ்ய எல்லைகளாகவும், கிழக்கில் சைனாவும் தெற்குப் பகுதியில்  உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற பகுதிகளும் உள்ளன. பெரும்பாலான மேற்குப் பகுதிகள் அனைத்தும் ஐரோப்பிய கண்டத்திற்குள் அடங்குகின்றது. கிழக்கிலிருந்து மேற்காக 3000 கிலோ மீட்டரும், வடக்கு தெற்காக 1700 கிலோ மீட்டரும் நிலப்பரப்பு கொண்டது. 2.97 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் ஒன்பதாவது பெரிய நாடாக திகழும் இந்நாடு குதிரை வளர்ப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றது. மிகப்பெரிய அளவு சமவெளிகளைக் கொண்டிருப்பதால் இப்பகுதி மக்கள் குதிரைகளை வீட்டு விலங்காகவும் குதிரை சவாரி செய்வதை தங்களின் பழக்கவழக்கமாகவும் கொண்டவர்கள். 

நூர் சுல்தான் எக்ஸ்போ மைதானம்
நூர் சுல்தான் எக்ஸ்போ மைதானம்

எக்ஸ்போ மைதானம்.

நூர் சுல்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் தலைநகரின் பன்னாட்டு பொருட்காட்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு FUTURE HUNGRY என்ற தலைப்பில் ஜூன் 10 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற்ற எக்ஸ்போ ஆற்றல் திறன், நிலைத்த தன்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காலநிலை மாற்றம், போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நடைபெற்றது.  115 மாநிலங்களில் இருந்தும் 22 பன்னாட்டு அமைப்புகளிலிருந்தும் ஏறக்குறைய 40 இலட்சம் மக்கள் வந்து பார்வையிட்டனர் எனவும் இதில் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளி நாடுகளிலிருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது நலனிற்கான ஆற்றல்,  பொதுவான வீட்டைக் காத்தல் என்ற தலைப்பில் திருப்பீடத்தின் திருஅவை செய்தியும் இந்த எக்ஸ்போவில் ஒரு அரங்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 25 ஹெக்டேர்  நிலப்பரப்பில் உள்ள எக்ஸ்போவில் வெளி நாடுகளுக்கான அரங்கத்தில் பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பப்பூங்கா பொருளாதர மற்றும் பொருள்காட்சி மையங்கள் உள்ளன. அறிவியல் முன்னேற்றம், வளர்ச்சி, தகவல்தொழில்நுட்பம் பொருளாதாரம் மட்டுமன்றி, பொழுதுபோக்கு நிறுவனமாகவும் செயல்படுகின்றது. இதன் மையத்தில் இருப்பது நூர் அலெம் FUTURE ENERGY MUSEUM எனப்படும் எதிர்கால ஆற்றல்  அருங்காட்சியகமானது பந்து வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 10000 பேர் இருக்கக்கூடிய அளவில் இம்மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை சொல்லும் அளவிற்கு, உருவாக்கப்பட்டுள்ள இந்த எக்ஸ்போ எட்டுஅடுக்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடமாக உள்ளது.

கஜகஸ்தானில் கிறிஸ்தவம்.

கஜகஸ்தான் கிறிஸ்தவர்களின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. 1253 ஆம் ஆண்டு பிரான்சு  நாட்டின் அரசராக இருந்த புனித லூயிஸ், மொங்கோலியா பகுதியை அடைவதற்காக கிறிஸ்தவ மறைப்போதகர்களை அனுப்பினார். அதன்பின் 25 வருடங்களுக்குப் பின் 1278 ல் திருத்தந்தை மூன்றாம் நிக்கோலாஸ் மத்திய ஆசியப் பகுதிகளில் கிறிஸ்தவத்தை அதிகப்படுத்த விரும்பி பிரான்சிஸ்கன் சபையினரிடம் அதனை ஒப்படைத்தார். 14 நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத்துறவறத்தார், அல்மாலிக் என்னும் நகரில் தங்களுக்கான இல்லத்தையும் பேராலயத்தையும் கட்டினர். அக்காலத்தில் சிகட்டய் மன்னர் ஆட்சியின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு அம்மன்னர் காட்டும் அன்பையும் கனிவையும் குறித்து திருத்தந்தை 12ஆம் பவுல் அம்மன்னருக்கு கடிதம் ஒன்று அனுப்பி தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். அதன்பின் ஆட்சி மாறி 1340 ஆம் ஆண்டு முதல்  கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படலாயினர்.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அதாவது இரஷ்யப்பேரரசின் கீழ் இருந்தது வரை அங்குள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குழுக்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை.  20 நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் அனைவரும் இரஷ்யப் படையின் இராணுவ வீரர்களாக, சிறைக்கைதிகளாக, அகதிகளாக உலகத்திற்கு அறிமுகமாயினர். முதல் உலகப் போரின் போது கஜகஸ்தானின்  பியத்ரோபவுலோ பங்கு 5000 கிறிஸ்தவர்களைக் கொண்டதாகவும், குஸ்தானை 6000 கிறிஸ்தவர்களைக் கொண்டதாகவும் இருந்தது. 1991 ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் பெற்ற நாடாக கஜகஸ்தான் செயல்பட தொடங்கியது. அதன் முதல்படியாக 1992 முதல் திருப்பீடத்துடன் ஒப்பந்தமாகி 1998 வரை செயல்பட்டுவந்தது. அன்றுமுதல் கல்வி,சமூகம்,உடல்நலம் போன்றவற்றில் கவனம் செலுத்தி மக்களை ஆன்மீக காரியங்களில் ஈடுபடுத்தி பணிபுணிய மறைப்போதகர்களும் துறவிகளும் அழைக்கப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை ஆன்மீக பணிகள் பல செய்து கிறிஸ்தவத்தை நிலைநாட்டி வருகின்றது. மிகக்குறைவான அளவே கிறிஸ்தவர்கள் இருந்தாலும்  அன்பிலும் அருட்பணிகளிலும் சிறந்து விளங்கும் இம்மக்களை திருத்தந்தை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியே.

உலக பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு நடைபெற இருக்கும் இடம்
உலக பாரம்பரிய மதத்தலைவர்களின் மாநாடு நடைபெற இருக்கும் இடம்

புனித சகாய அன்னை பேராலயம்.

அஸ்தானா உயர் மறைமாவட்டத்தின் தூய சகாய அன்னையின் ஆலயமாக திகழும் இப்பேராலயத்தின் வரலாறு 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தினால் பாதிக்கப்பட்ட மேற்கு உக்ரேனியகுழு, பெலருஸ், வோல்காகுழு போன்றவைகள், கஜகஸ்தானில் இணைந்தன. இங்கு வாழ்ந்த கிறிஸ்தவ குழுக்கள் பத்தாண்டுகளாக சோவியத் ஒன்றியத்தின் கொடுமைகளினால் துன்புற்று மறைமுகமாக ஒன்றுகூடி செபித்து வந்தனர். அதன்பின் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, பல்வேறு துன்பங்களுக்கு பின்,  அனுமதிபெற்று வெளியேறி அதேஆண்டு அலுவலக ரீதியாக, அக்டோபர் 4ம் தேதி, சிறிய செப இல்லம் ஒன்றை நகரத்தின் வெளிப்புறம் சகாய அன்னை பெயரில் ஆரம்பித்தனர். அதன்பின் படிப்படியாக வளர்ந்து 1994 ஆம் ஆண்டு கஜகஸ்தான் திருஅவையின் திருத்தூதரால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜுன் 27 1999 திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களின் பிரதிநிதியான ரஷ்யா  பேராயர் அந்தோனியோ மென்னினி என்பவரால் இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது. 2006 ஜுன் 25 அன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் இவ்வாலயத்திற்கு தன்னுடைய தவத்திருப்பயணத்தை மேற்கொண்டார். அவரை தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்நாட்டிற்கு வருகைதர இருப்பது ஆயன் தன் மந்தையை தேடிச் செல்வதைக் குறிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2022, 13:54