தேடுதல்

அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ் அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ்  

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” நிகழ்விற்கு திருத்தந்தை

செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற நிகழ்வில் இளம் பொருளாதார வல்லநர்கள், இளம் தொழில்முனைவோர், மற்றும், மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 22, இவ்வியாழனன்று, இத்தாலியின் அசிசி நகரில் தொடங்கியுள்ள 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று அசிசி நகர் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சனிக்கிழமை இத்தாலி நேரம் காலை 9 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, 9.30 மணியளவில் அசிசி நகரின் தூதர்களின் புனித மரியா பசிலிக்காவுக்கு அருகிலுள்ள வளாகத்தில் சென்றிறங்குவார்.

மூன்று இளையோர் பிரதிநிதிகள் உட்பட அரசு மற்றும், தலத்திருஅவைப் பிரதிநிதிகள் திருத்தந்தையை வரவேற்பர். அந்நகரில் நடைபெறும் 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வில் பங்குபெறும் பன்னாட்டு இளம் தொழில்முனைவோருக்கு உரையாற்றும் திருத்தந்தை, அந்நிகழ்வின் இறுதியில் வெளியிடப்படும் அறிக்கை ஒன்றிலும் கையெழுத்திடுவார்.  

பின்னர் இச்சனிக்கிழமை பகல் 11.45 மணியளவில் அசிசியிலிருந்து புறப்பட்டு பகல் 12.15 மணியளவில் வத்திக்கானுக்கு வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 22, இவ்வியாழனன்று, இத்தாலியின் அசிசி நகரில் தொடங்கிய 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற மூன்று நாள் நிகழ்வில், உலகெங்கிலுமிருந்து இளம் தொழில்முனைவோர் பலர் கலந்துகொண்டு வருகின்றனர்.

பொருளாதாரப் புதுப்பித்தலுக்கு வழியமைக்கும்

மேலும், இந்நிகழ்வு பற்றி வத்திக்கான் செய்திகளிடம் விளக்கிய அசிசி பேராயர் Domenico Sorrentino அவர்கள், இளம் பொருளாதார நிபுணர்கள், அசிசி நகர் புனித பிரான்சிசின் பாணியில் பொருளாதாரப் புதுப்பித்தலை நோக்கிய ஒரு பாதையை உருவாக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுப்பார் என்று தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் ஏதோ ஒன்று சிக்கலாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், இன்றைய உலகில் பலர் மேலும் மேலும் செல்வந்தராகிவரும்வேளை, வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும் பேராயர் Sorrentino அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இந்நிகழ்வில் இளம் பொருளாதார வல்லநர்கள், இளம் தொழில்முனைவோர், மற்றும், மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2022, 12:21