தேடுதல்

திருத்தந்தையுடன்  Deloitte உலகளாவிய அமைப்பினர்  Punit Renjen திருத்தந்தையுடன் Deloitte உலகளாவிய அமைப்பினர் Punit Renjen  

திருத்தந்தை: தொழில், நெருக்கடிகளைக் களைய உதவ முடியும்

தொழில்துறை ஆலோசகர்கள், புதிய சவால்களுக்கு புதிய வழிகளைப் பரிந்துரைக்க அழைக்கப்பட்டுள்ளனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்த உலகம் கடந்த 15 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும்வேளை, உலக அளவில் நிலவும் பிரச்சனைகளைக் களைவதற்கு தொழில் முக்கிய பங்காற்ற முடியும் என்று, Deloitte உலகளாவிய அமைப்பு நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 600 பேரிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தொழில்துறைகளில் ஆலோசனை கூறுபவர்களைக்கொண்ட இந்த அமைப்பு நடத்தும் இக்கூட்டத்தில் பங்குபெறும் பிரதிநிதிகளை, செப்டம்பர் 22, இவ்வியாழனன்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அனைத்து மக்களின் நல்வாழ்வை ஊக்குவிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

துன்புறும் மக்களுக்கும், பெருந்தொற்று மற்றும், போர் உட்பட உலக அளவில் இடம்பெறும் பிரச்சனைகளைக் களைவதற்கும், தொழில்துறை சக்தியைக் கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, Deloitte உலகளாவிய அமைப்பில், ஏறத்தாழ மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் வேலைசெய்வதையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

Deloitte உலகளாவிய அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி கூறியதோடு, நீதி, மனிதம், மற்றும், உடன்பிறந்த உணர்வு நிறைந்த ஓர் உலகு, பேணி வளர்க்கப்படுவதற்கு மூன்று பரிந்துரைகளையும் திருத்தந்தை முன்வைத்தார்.

தொழில்துறைகளில் ஆலோசனை கூறுபவர்கள், எப்போதும் தங்கள் பணியில் ஒரு தடத்தை விட்டுச்செல்வதை எப்போதும் உணர்ந்திருக்குமாறு கூறியத் திருத்தந்தை, இந்த தடமானது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை வளர்க்கும் நல்நோக்கத்தைக் கொண்டதாய் இருக்கவேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

உங்களின் சக்தியை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள், இந்த சக்தியானது, ஒருங்கிணைந்த சூழலியலுக்கு முன்வைக்கும் பரிந்துரைகளோடு ஒத்திணங்கி இருக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்கள் தங்களின் கலாச்சார கடமையையும் நிறைவேற்றவேண்டும், இது அவர்களின் அறிவு மற்றும் தொடர்புகளிலிருந்து வெளிப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மூன்றாவதாக, பன்மைத்தன்மையும் போற்றி வளர்க்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தொழில்துறை ஆலோசகர்கள், புதிய சவால்களுக்கு புதிய வழிகளைப் பரிந்துரைக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

'Big Four' என அழைக்கப்படும், தொழில்துறைகளில் ஆலோசனை கூறுபவர்களைக்கொண்ட நான்கு முக்கிய அமைப்புக்களில் பெரியதான Deloitte அமைப்பு, வருவாயிலும், பணியாளர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் உள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2022, 15:28