தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 280922 புதன் மறைக்கல்வியுரை 280922 

திருத்தந்தை: உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்

குழுமமாகவும், குடும்பமாகவும் செபமாலை செபிக்கும்போது உங்கள் கவலைகள், மற்றும், உலகின் தேவைகளை, அன்னை மரியாவிடம் அர்ப்பணியுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற அக்டோபர் மாதத்தில் நாம் செபிக்கும் செபமாலையை உலகில் அமைதி நிலவ அர்ப்பணிப்போம் என்று, செப்டம்பர் 28, இப்புதன் பொது மறைக்கல்வியுரையின்போது அனைவரையும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலையில் 9.30 மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் ஆற்றிய பொது மறைக்கல்வியுரையில் போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தியபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகிற்கு அமைதி அவசியம் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

இன்னும், சில நாள்களில் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தைத் தொடங்கவுள்ளோம். எனவே குழுமமாகவும், குடும்பமாகவும் செபமாலை செபிக்கும்போது உங்கள் கவலைகள், மற்றும், உலகின் தேவைகளை, குறிப்பாக, உலகில் அமைதி குறித்த தேவையை அன்னை மரியாவிடம் அர்ப்பணியுங்கள் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

உக்ரைனுக்காக செபம்

உக்ரைனில் ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ள பகுதி
உக்ரைனில் ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ள பகுதி

மேலும், ஏழு மாதங்களாக இடம்பெற்றுவரும் போரினால் மிகக் கடுமையாய்த் துன்புறும் உக்ரைன் மக்களை நினைத்து அவர்களுக்காகச் செபிப்போம் என்றும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனுக்கு தனது பிரதிநிதியாக, நான்காவது முறையாகச் சென்று திரும்பியுள்ள, பிறரன்பு திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் Konrad Krajewski அவர்களோடு பேசியபோது, அந்நாட்டின் பயங்கரமான நிலைமை குறித்து கேட்டறிந்தேன் என்று திருப்பயணிகளிடம் கூறியத் திருத்தந்தை, அம்மக்கள் மிகவும் துயருறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.  

வத்திக்கான் காவல்துறைக்காக செபம்

செப்டம்பர் 29, இவ்வியாழனன்று நாம் திருநாள் கொண்டாடும் புனித மிக்கேல் முதன்மை வானதூதரைத் தங்களின் பாதுகாவலராகக் கொண்டிருக்கும் வத்திக்கான் காவல்துறைக்காகவும் செபித்த திருத்தந்தை, இவர்கள் இவ்வானதூதரின் முன்மாதிரிகையை எப்போதும் பின்பற்றி நடக்கவும் செபிப்போம் என்று கூறியதோடு, அவர்களின் நற்பணிகளை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக என்றும் கூறியுள்ளார்.

உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் சந்திப்பு

மேலும், இப்புதன் காலையில் தெளிந்துதேர்தல் பற்றிய பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குமுன், காலை 8.15 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கிலுள்ள அறை ஒன்றில், உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் António Vitorino அவர்களையும், அவரோடு வந்திருந்த இருவரையும் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 11:34