தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை: தெளிந்துதேர்தலுக்கு, செபம் இன்றியமையாதது

ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் பேசுவதுபோல், ஆண்டவரோடு நட்புறவில் வாழ அவரது அருளை இறைஞ்சுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலியில் குளிர்காலம் தொடங்குவதன் அறிகுறிகள் தெரிகின்றன. நாட்டின் சில இடங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதேநேரம், உரோம் பெருநகரில் திருப்பயணிகள், மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் பெருமளவில் காணமுடிகின்றது. செப்டம்பர் 28, இப்புதன் காலை 9.30 மணியளவில்  வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த மக்களுக்கு, தெளிந்துதேர்தல் பற்றிய பொது மறைக்கல்வியுரையை வழங்குவதற்குமுன், காலை 8.15 மணியளவில் வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கிலுள்ள அறை ஒன்றில் உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் António Vitorino அவர்களையும், அவரோடு வந்திருந்த இருவரையும் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் புனித பேதுரு வளாகத்தில், தெளிந்துதேர்தலுக்கு உதவும் தவிர்க்கமுடியாத கருவிகளில் ஒன்றாகிய இறைவேண்டல் பற்றி பொது மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சகோதரர்களே, உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள்…. ஆகவே, அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்.... தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். (எபே.5:15,17-20)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, காலை வணக்கம். தெளிந்துதேர்தல் குறித்த நம் மறைக்கல்விப் பகுதியை மீண்டும் இன்று தொடங்குகிறோம். நம் வாழ்வின் அர்த்தம் மற்றும், வாழும் முறை குறித்து கடவுள் காட்டும் வழிகளில் நல்ல தீர்மானங்கள் எடுக்கும் வழிமுறையாகிய தெளிந்துதேர்தலுக்கு மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகிய இறைவேண்டல் பற்றி இன்று சிந்திப்போம். புனித பவுலடிகளார் சொல்வதுபோல, நாம் என்ன செய்யவேண்டும் என்று அறிந்திருந்தாலும், எப்போதும் அவ்வாறு செய்வதில்லை.

இறைவேண்டல் என்பது, முற்றிலும் அறிவுப்பூர்வமாகச் செய்வது அல்ல. மாறாக., அது இதயத்தையும், உணர்வுகளையும் ஈடுபடுத்துவதாகும். இறைவேண்டல் வழியாக, ஆண்டவரோடு உள்ள நம் உறவை ஆழப்படுத்துகிறோம், நம்பிக்கையில் வளர்கிறோம் மற்றும், அவரது திருவுளத்தைப் புரிந்துகொண்டு, அதை ஏற்கும்போது நமது உண்மையான மகிழ்வைக் கண்டுகொள்வதை உணரத் தொடங்குகிறோம். கடவுளின் திட்டத்திற்குப் பிரமாணிக்கமாய் இருப்பது, நம்மை கவலைக்கு அல்லது நிறைவுறாத மனநிலைக்கு உட்படுத்தும் என்ற அச்சம், ஆன்மிக வாழ்வில் வருகின்ற பெரிய சோதனைகளில் ஒன்றாகும். இத்தகைய வெற்று அச்சங்களை அகற்ற இறைவேண்டல் நமக்கு உதவுகிறது. அதோடு, இறைவேண்டல்,  சோதனைகள் மற்றும், துன்பங்கள் மத்தியிலும் ஓர் ஆழமான ஆன்மிக மகிழ்ச்சியைக் கொணர்கிறது. இறைவேண்டலின் பயனாக, தெளிந்துதேர்தல், நம் மனங்களையும் இதயங்களையும் தெளிவடையச்செய்து, கடவுளின் இரக்கமுள்ள ஒளியை எளிதில் உணரக்கூடியவர்களாக நம்மை ஆக்குகிறது. இறைவேண்டலில், ஆண்டவரோடு ஏற்படும் ஒருவித இயல்பான பிணைப்பால், ஒவ்வொரு நாளும் அவருக்கு நெருக்கமாகச் சென்று, நம் வாழ்வில் அவரது திருவுளத்தை முழுமையாக ஏற்கும் நிலைக்கு வருகிறோம். அந்த அவரது திருவுளத்தில் நம் அமைதி மற்றும், உண்மையான நிறைவைக் கண்டுகொள்கிறோம். மேலும் இறைவேண்டல் என்பது, கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வது அல்ல, மாறாக, அது, கடவுளோடு நட்புறவுகொண்டு, அவரில் நம்பிக்கை வைப்பதாகும். எனவே ஒரு நண்பர் மற்றொரு நண்பரிடம் பேசுவதுபோல், ஆண்டவரோடு நட்புறவில் வாழ அவரது அருளை இறைஞ்சுவோம். ஏதோ ஒன்றைக்கூறி மிரட்டுபவராக இல்லாமல், எல்லாவற்றுக்கும் மேலாக, அவரிடமிருந்து நாம் விலகிச்செல்லும்போதுகூட நம்மை ஒருபோதும் கைவிடாமல் இருக்கின்ற இயேசுவை, நமது மிகப்பெரிய மற்றும், மிகவும் பிரமாணிக்கமுள்ள நண்பராகப் பார்ப்பதற்குரிய அருளை அவரிடம் வேண்டுவோம்.

புதன் மறைக்கல்வியுரை 280922
புதன் மறைக்கல்வியுரை 280922

இவ்வாறு தெளிந்துதேர்தலுக்கு இறைவேண்டல் மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி,  இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், இன்னும், சில நாள்களில் செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தைத் தொடங்கவுள்ளோம், எனவே குழுமமாகவும், குடும்பமாகவும் செபமாலை செபிக்கும்போது உங்கள் கவலைகள், உலகின் தேவைகள், குறிப்பாக, உலகில் அமைதி குறித்த தேவையை மரியாவிடம் அர்ப்பணியுங்கள். போரினால் மிகக் கடுமையாய்த் துன்புறும் உக்ரைன் மக்களுக்காகவும் செபியுங்கள் என்று  கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக என்று கூறி, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2022, 10:21