தேடுதல்

உலகின் உணவு மேஜைகளில், அது பகிர்ந்துகொள்ளப்படவேண்டும்

நம்மை நாமே வழிபடுவதைவிட கடவுளை வணங்கவேண்டும் என்று திருநற்கருணை நமக்கு கற்பிக்கிறது – இத்தாலிய 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஏழைகள் மீது இரக்கம் காட்டாமல், திருநற்கருணை வழிபாடு நடைபெற முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 25, இஞ்ஞாயிறன்று மத்தேராவின் செப்டம்பர் 21 என்ற மாநகராட்சி வளாகத்தில், இத்தாலியின் 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலியில் கூறியுள்ளார்.

உலகில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துவரும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகவும், மக்கள் வாழ்ந்த பழங்காலக் குகைகளுக்கும் பெயர்போன “ரொட்டியின் நகரம்” என அழைக்கப்படும், மத்தேராவில் (Matera) நடைபெற்ற தேசிய மாநாட்டின் நிறைவாக, திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

ரொட்டி தயாரிக்கும் பாரம்பரிய முறை குறித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நூற்றாண்டுகளாக வழங்கிவரும் மத்தேராவில் ஆற்றிய மறையுரையில்,   திருநற்கருணை ஆராதனையில் பொருளுள்ள விதத்தில் பங்குகொள்ளும் முறை குறித்து மீண்டும் கண்டுணர அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, நம் அன்பு மற்றும், நம்பிக்கைக்காகப் பசியை எதிர்கொள்ளும்வேளையில், அல்லது, வாழ்வின் சோதனைகள் மற்றும் துன்பங்களால் உடைக்கப்பட்டிருக்கும்வேளையில், ரொட்டியின் சுவையான இயேசுவிடம் திரும்புவோம், ஏனெனில், இயேசு, நமக்கு உணவளிக்கின்ற மற்றும், குணமாக்குகின்ற உணவாக மாறுகின்றார் என, ரொட்டியின் நகரமான இந்த மத்தேராவிலிருந்து கூற விரும்புகிறேன் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலாசரும் செல்வரும்

இலாசரும் செல்வரும் (லூக். 16,19-31) என்ற உவமை பற்றிக் கூறும் லூக்கா நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, உலகின் மேஜைகளில் உணவு எப்போதும் பரிமாறப்படுவதில்லை, இது குழும உணர்வின் சுவையை எப்போதும் வெளிப்படுத்துவதில்லை, மற்றும் நீதியில் எப்போதும் பகிரப்படுவதில்லை என்பதை என்பதை, இஞ்ஞாயிறு இந்நற்செய்திப் பகுதி நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

இலாசரும் செல்வரும் என்ற உவமையில், ஒரு பக்கம் செல்வர், விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார், மறுபுறம் உடல் முழுவதும் புண்ணாய், அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்த இலாசர், அவருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார் என்றுரைத்த திருத்தந்தை, இந்த முரண்பாட்டை எதிர்கொள்ளும் நாம், திருநற்கருணை அருளடையாளம் கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், சிகரமுமாக இருக்கின்றதா? என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம் என்று உரைத்துள்ளார்.

கடவுளுக்கு முதன்மை

27வது தேசிய திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி
27வது தேசிய திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி

எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் கடவுளுக்கு முதன்மை இடமளிக்கவேண்டும் என்பதை திருநற்கருணை நினைவுபடுத்துகிறது என்றும், இவ்வுவமையில் வருகின்ற செல்வர், தனது நலம் மற்றும், தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே சிந்தித்தார், அவ் தன்னை மட்டுமே வழிபட்டதால், அவரது வாழ்வில் கடவுளுக்கு இடமில்லை, கடவுளோடுள்ள உறவுக்கும் திறந்தமனதாய் இல்லை என்று திருத்தந்தை கூறினார்.

இவ்வுவமையில் செல்வர் கொண்டிருக்கும் பொருள்களை வைத்து அவர் சுட்டிக்காட்டப்படுகிறார், அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும், ஒருவர் எப்படியிருக்கிறார், எவற்றைக் கொண்டிருக்கிறார் என்பதோடு அவரின் தனித்துவத்தைக் கணிக்கும் கவலைக்குரிய நிலை இன்றும் தொடர்கிறது என்றுரைத்த திருத்தந்தை, இந்நிலை இறுதியில் வெறுமையில் நம்மை விட்டுச்செல்கிறது என்றார்.

இதற்கு முரணாக, கடவுள் உதவுவார் என்று பொருள்படும் இலாசர் என ஏழை மனிதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஏழ்மை மற்றும், புறக்கணிப்பு ஆகிய அவரது நிலைகளையும் தவிர்த்து, அவரது மாண்பு மாறாமல் உள்ளது, ஏனெனில் அவர் கடவுளோடு உறவில் வாழ்கிறார் என்றும், அவரது பெயரிலேயே கடவுளின் ஏதோ ஒன்று உள்ளது என்றும், அவரது வாழ்வில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக கடவுள் இருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒருவர் தன்னை அல்ல, ஆனால் கடவுளை வணங்கவேண்டும் என திருநற்கருணை சவால் விடுக்கின்றது என்றும், கடவுளை நம் வாழ்வின் மையமாக வைக்கவேண்டும் என நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, செல்வத்தை நாம் வழிபட்டால், அது நம்மை அடிமைகளாக்கிவிடும், மாறாக திருநற்கருணையில் இருக்கும் ஆண்டவராம் இயேசுவை வழிபட்டால், நம் வாழ்வை புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கவைக்கும்   என்று கூறியுள்ளார்.

சகோதரர் சகோதரிகளை அன்புகூர

திருநற்கருணை, நம் சகோதரர் சகோதரிகளை அன்புகூர அழைப்புவிடுக்கிறது எனவும், திருநற்கருணை, அன்பின் அருளடையாளம் எனவும், நமக்காகத் தம்மையே பிட்டு வழங்கும் கிறிஸ்து, அதேபோல் நாமும் செய்யுமாறு கேட்கிறார் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2022, 12:30