தேடுதல்

திருத்தந்தை:கடவுள், விரித்த கரங்களோடு நமக்காகக் காத்திருக்கிறார்

கடவுள் நம்மீது காட்டுகின்ற பரிவன்பு, கனிவு, மற்றும், அருகாமையை, மற்றவருக்கும் நாம் காட்டவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

தம்மைவிட்டு நாம் விலகிச்செல்லும்போதெல்லாம் நம்மைத் தேடுகின்ற தந்தையாம் கடவுள், விரித்த கரங்களோடு நமக்காகக் காத்திருக்கிறார், அதேநேரம், அவர் நம்மீது காட்டுகின்ற அருகாமை, பரிவன்பு மற்றும், கனிவை, மற்றவருக்கும் நாம் காட்டவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறியுள்ளார். 

செப்டம்பர் 11, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் மூவேளை செபத்திற்காக கூடியிருந்த ஏறத்தாழ 18 ஆயிரம் திருப்பயணிகளை வாழ்த்தி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தி வாசகமான, இரக்கத்தின் மூன்று உவமைகள் (லூக்.15:4-32) பற்றி எடுத்துரைத்தார்.

இயேசு பாவிகளை வரவேற்கிறார், மற்றும், அவர்களோடு உணவருந்துகிறார் என பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவர் மீது புகார் கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக, இயேசு இரக்கத்தின் இந்த மூன்று உவமைகளையும் கூறுகிறார் என்று கூறியத் திருத்தந்தை, இவ்வுவமைகள், நற்செய்தியின் மையமாக உள்ளன என்று தெரிவித்தார்.

கடவுள், காணாமற்போனதை எப்போதும் தேடுகிறவர்

இவ்வுவமைகளில் முக்கிய நபர்களாக இருக்கின்ற, காணாமற்போன ஆட்டைத் தேடிய ஆயர், காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண், காணாமற்போன மகனின் தந்தை ஆகிய மூவரும், காணாமற்போனதற்காக அடைந்த கவலையை இவ்வுவமைகள் எடுத்துரைக்கின்றன என திருத்தந்தை கூறினார்.

கடவுள் நம் தந்தை, அவர் யாரையும் ஒதுக்குவதில்லை, நாம் வாழ்வில் தடம்மாறிச் செல்கையில் அவர் நம்மைத் தேடுகிறார், தமது விருந்தில் அனைவரும் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஏனெனில், அவர் அனைவரையும் தம் பிள்ளைகளாக அன்புகூர்கிறார் என்பதை, இம்மூன்று உவமைகளும் வெளிப்படுத்துகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள், விரித்த கரங்களோடு நமக்காகக் காத்திருக்கிறார்

காணாமற்போனது மீது அன்புகூர்கின்றவர், அதை இழந்தது குறித்து கலங்கி, அதைக் கண்டுபிடிக்கும்வரை தேடுகிறார், ஏனெனில் எதுவுமே காணாமற்போகக் கூடாது என அவர் விரும்புகிறார் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையில், கடவுளிடமிருந்து நாம் விலகிச்செல்லும்போதெல்லாம் அதற்காக அவர் துயருறுகிறார், மற்றும், தம் கரங்களால் அணைத்துக்கொள்ளும்வரை நம்மைத் தேடுகிறார் என்று கூறினார்.

ஆண்டவர், இழந்தவற்றை ஒருபோதும் கணக்கிடுவதில்லை, மாறாக, ஒரு தந்தை மற்றும், ஒரு தாயின் இதயத்தைக் கொண்டிருக்கும் அவர், காணாமற்போன தம் அன்புப் பிள்ளைகளுக்காகத் துன்புறுகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

பரிவன்பு காட்ட அழைப்பு

தம்மிடமிருந்து விலகிச்சென்றவர்கள் மீது ஆண்டவர் காட்டும் அக்கறையை நாம் பின்பற்றுகிறோமா என, ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்ளுமாறு கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவ வாழ்விலிருந்து திசை மாறுகிறவர்களைத் தேடி ஆண்டவர் பக்கம் அவர்களைச் சேர்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

கடவுளின் அருகாமை, பரிவன்பு மற்றும், கனிவை நம்பிக்கையற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், அவர்களுக்காகச் செபிக்கவும், கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தையாம் கடவுளுக்கு நாம் எல்லாருமே முக்கியமானவர்கள் என்றும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2022, 13:00