கப்புச்சின் சபை சகோதரிகளுக்கு, திருக்குடும்பம் தூண்டுதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கடவுளின் குரலுக்கு அமைதியாகச் செவிசாய்த்ததன் வழியாக மிகப்பெரும் நல்தாக்கத்தைக் கொண்டிருந்த மற்றும், தாழ்ச்சியுடன் வாழ்ந்த திருக்குடும்பத்திடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு, திருக்குடும்பத்தின் கப்புச்சின் மூன்றாம் சபை அருள்சகோதரிகளிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அச்சபையின் 23வது பொதுப் பேரவையில் பங்குபெறும் முப்பது பிரதிநிதிகளை, செப்டம்பர் 26, இத்திங்கள் காலையில், வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிசெபத்தில் ஆழமான பற்றுக்கொள்ளவும், ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கையை அழகாக ஒன்றுசேர்ந்து வாழ்வும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடவுளின் குரலுக்குச் தாழ்ச்சியோடு செவிமடுப்பதன் வழியாக வல்லமைமிக்க இறைவாக்கினர்களாக வாழுமாறு அச்சகோதரிகளுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, இவ்வாறு செவிசாய்ப்பதன் வழியாக இக்காலத்திய இரைச்சல் நிறைந்த போக்கை எதிர்த்து நிற்கவும், வேறுபாடின்றி அனைவருக்கும் கடவுளின் அன்பைக் கொணரவும் முடியும் என்று கூறியுள்ளார்.
திருக்குடும்பத்தோடு சிறப்பு உறவு
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள இச்சகோதரிகளைப் பார்ப்பது அழகாக இருக்கின்றது என்றும், இது, திருக்குடும்பத்தோடு கொண்டுள்ள சிறப்பான உறவை வெளிப்படுத்தும் உலகளாவிய உடன்பிறந்த உணர்வு மற்றும், வரவேற்கும் பண்பை உண்மையிலேயே வாழ்வதைக் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
ஒரு குடும்பச் சூழலை அறிவிக்கும் இந்த வாழ்வு, தாழ்மையோடு செவிமடுத்தல் மற்றும், ஒருங்கிணைந்த பயணம் என்ற இப்பொதுப் பேரவையின் தலைப்பை வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த திருத்தந்தை, துறவு வாழ்வுக்கு முக்கியமான மூன்று கூறுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கடவுளின் குரல், அளவில்லாமல் அன்புகூர நம்மை உந்தித்தள்ளுகிறது என்றும், அவரது குரலைச் செவிமடுப்பதற்கு முதலில், மிக ஆழ்ந்த அக அமைதி தேவை என்றும், இக்குரலுக்குச் செவிமடுப்பதன் வழியாக, இறைவாக்கினர்களாக இருங்கள் என்றும் அச்சகோதரிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனை திருக்குடும்பத்திடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
திருக்குடும்பத்தின் கப்புச்சின் அருள்சகோதரிகள் மூன்றாம் சபை, இஸ்பெயினின் வலென்சியாவில் Montiel திருத்தலத்தில் 1885ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1902ஆம் ஆண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது நான்கு கண்டங்களில் 34 நாடுகளில் இச்சபையினர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்