காப்டிக் ஆலயத் தீ விபத்து குறித்து திருத்தந்தை கவலை
மேரி தெரேசா: வத்திக்கான்
எகிப்து நாட்டின் Giza நகரிலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்களின் ஆன்மா நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வதாகவும், அதில் காயமடைந்தோர் மற்றும், அவர்களின் குடும்பத்தினர் அனைவரோடும் தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
Giza நகரின் Abu Sefein ஆலயத்தில் ஆயர் Abdul Bahkit அவர்கள் ஞாயிறு திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று இடம்பெற்ற தீ விபத்தில் அந்த ஆயர் உட்பட குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், காப்டிக் சபையின் தலைவர் திருத்தந்தை 2ம் Tawadros அவர்களுக்கு இரங்கல் தந்திச் செய்தி ஒன்றை, ஆகஸ்ட் 18, இவ்வியாழனன்று அனுப்பியுள்ளார்.
இவ்விபத்து குறித்து மிகுந்த கவலைகொண்டுள்ள திருத்தந்தை, இதில் பலியானவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களை, எல்லாம்வல்ல கடவுளின் இரக்கத்தில் அர்ப்பணிப்பதாகவும், அக்குடும்பங்களுக்கு ஆண்டவர் ஆறுதலையும், துன்பத்தைத் தாங்கக்கூடிய சக்தியையும் தரும்படியாகச் செபிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, ஞாயிறன்று எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான Gizaவின் Abu Sefein ஆலயத்தில், ஆயர் Bahkit அவர்கள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று இடம்பெற்ற தீ விபத்தால் அந்த ஆயர் உட்பட குறைந்தது 41 பேர் இறந்தனர். இறந்தவர்களில் பலர் சிறார் என்றும், இத்தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆலயத்தின் முக்கிய நுழைவாயிலை தீச்சுடர் நிரப்பியிருந்ததால் மக்கள் உள்ளேயிருந்து வெளியே வர இயலாமல், புகையில் மூச்சுத்திணறி இறந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்