தேடுதல்

கனடா நாட்டுப் பூர்வீக இனக்குழுக்களின் நிலத்தில் திருத்தந்தை கனடா நாட்டுப் பூர்வீக இனக்குழுக்களின் நிலத்தில் திருத்தந்தை  

கனடாவில் திருத்தந்தை- கண்ணீரின் கொடை

கனடா நாட்டுப் பூர்வீக இனக்குழுக்களின் நிலத்தில் திருத்தந்தை மேற்கொண்ட தவத் திருப்பயணம், துன்புற்ற மக்களுக்கு ஒப்புரவு மற்றும் குணப்படுத்துதலுக்கு, புதிய பாதையை அமைப்பதாக அமைந்திருந்தது

மெரினா ராஜ்- வத்திக்கான்

கனடாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட ஆறு நாள் தவத் திருப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாம் பார்க்கையில், துன்பம், வலி, கண்ணீர், அமைதி போன்றவற்றோடு நம்பிக்கை, சந்திப்பு, இணக்கம், உறவு ஆகியவற்றையும் நம் மனதில் பதியவைத்துவிட்டன என்று, வத்திக்கான் வானொலி செய்தியாளர் Massimiliano Menichetti அவர்கள் கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் 30 வரை ,கனடாவின் பூர்வீக இனக்குழுக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்காக மன்னிப்பு வேண்டுவதற்காக மேற்கொண்ட திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம்,  உண்மைக்கு அஞ்சாது, மன்னிப்புக் கேட்கத் தயங்காது, மற்றும், கிறிஸ்துவின் ஒளியைத்தாங்கி, அன்புகூர்ந்து செவிமடுத்து வாழ்வது ஆகிய திருஅவையின் பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார் Menichetti.

திருத்தந்தையின் உடனிருப்பு எங்களுக்கு ஆசீர்வாதம் நிறைந்த கொடையாக இருந்தது என்று பூர்வீக இனக்குழுத்தலைவர் WILTON LITTLECHILD அவர்கள், BEAR பூங்காவில் திருத்தந்தையைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்துள்ளார் Menichetti.

மேலும், நீளமான சிவப்பு நிறத் துணியில், குடியிருப்புப் பள்ளிகளில் இறந்த குழந்தைகளின் பெயர்களை எழுதி திருத்தந்தைக்கு அம்மக்கள் காண்பித்தபோது எழுப்பிய இசைக் கருவிகளின் ஒலிகள், அங்கிருந்த ஒவ்வொருவரின் இதயத்துடிப்போடும் கலந்து உடலினை சிலிர்க்கவைத்தது எனவும், துன்பம், பெருமை, வலி, அடையாளம், கடமை, அமைதி, செபம், கண்ணீர் என எல்லாம் கலந்த மறக்க முடியாத நிகழ்வாகவும் அது அமைந்தது எனவும் எடுத்துரைத்துள்ளார் Menichetti

திருத்தந்தையின் இந்தத் தவத் திருப்பயணம், திருஅவையின் புதிய கண்ணோட்டத்திற்கும், பகிர்வு, உடன்பிறந்த உணர்வுநிலை ஆகியவை ஏற்படவும், மனிதருக்கும் இயற்கைக்கும் செவிசாய்த்து நாம் ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்வதற்கும் வழிவகுத்தது எனவும் தெரிவித்துள்ளார் Menichetti

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2022, 14:26