திருத்தந்தை: இளையோர், இயேசுவுக்கு நம்பிக்கையின் ஊற்று
மேரி தெரேசா: வத்திக்கான்
ஒவ்வோர் இளையோரும் இயேசுவுக்கும், திருஅவைக்கும் நம்பிக்கையின் ஊற்றாக இருக்கின்றார் என்று, Équipes Notre-Dame என்ற இயக்கம் இளையோருக்கு நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெறும் உறுப்பினர்களிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 06, இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், இக்கருத்தரங்கில் பங்குபெறும் 250 உறுப்பினர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, ஒவ்வோர் இளையோரும், இயேசுவுக்கு, நம்பிக்கையின் ஊற்றாகவும், நட்பின், ஒன்றிணைந்த பயணத்தின், மற்றும், ஒன்றிணைந்த மறைப்பணியைத் தொடங்குவதன் நம்பிக்கையாகவும் இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.
இளையோரோடு உடன்பயணிக்கும் வயதுவந்தோர், திருமணமான தம்பதியர், ஆன்மிக வழிகாட்டிகள் ஆகிய அனைவரும், கிறிஸ்து மற்றும் திருஅவை மீது கொண்டிருக்கும் அன்பிற்கும், செவிமடுத்தல், உரையாடல், தாராளமிக்க சேவை, இறைவேண்டல் ஆகியவற்றுக்குத் தயாராக இருப்பதற்கும் வெளிப்படையான சான்றுகளாக விளங்குமாறு கேட்டுக்கொண்டார்.
Équipe, Notre-Dame, இளையோர் ஆகிய இந்த இயக்கம் கொண்டிருக்கும் மூன்று சொல்லாடல்கள் ஒவ்வொன்றும் குறித்த தன் சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, équipe அதாவது ஒரு குழுவாக இருப்பது, ஒரு கொடை என்றும், ஒரு குழுமத்தின், குடும்பங்களின் ஒரு குடும்பத்தின், மற்றும், நம்பிக்கையை வாழ்ந்துகாட்டும் ஒரு குழுமத்தின் உறுப்பினராக இருப்பது மிகப்பெரும் கொடை என்றும் தெரிவித்துள்ளார்.
சவால்களுக்குத் திறந்தமனம் கொண்டிருப்பதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும், மற்றவருக்கும் அஞ்சவேண்டாம், ஏனெனில் இளையோர் ஒரு குழுமத்தோடு இருக்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, ஒரு குழுவாக, தொடர்ந்து முன்னோக்கி நடங்கள், பாலங்களைக் கட்டுங்கள், மற்றும், இணைந்து பணியாற்றுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறு பிள்ளைக்குரிய நம்பிக்கையோடு, நமதன்னையிடம் தினசரி வாழ்வை அர்ப்பணித்து வாழுமாறு ஊக்கப்படுத்திய திருத்தந்தை, அன்னை மரியா குழுவாக வாழ்வதற்கும், தாராளமனதோடு தொண்டாற்றவும் உதவுகிறார் என்று கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் போர்த்துக்கல் நாட்டு இளையோரைப் பார்த்தபோது, லிஸ்பனில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளுக்கு அவர்கள் தயாரித்துவருவது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலம் இளையோரைச் சார்ந்துள்ளது என்றும், அவர்கள் வெற்றிபெறுவதற்கு முதியோரின் ஞானத்திலிருந்து கற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.
1938ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் திருமணமான தம்பதியரின் ஆன்மிக வாழ்வுக்கென Équipes Notre-Dame என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்