தேடுதல்

திருத்தந்தையை வரவேற்கும்  கனடா நாட்டின் ஆளுனர் Mary Simon திருத்தந்தையை வரவேற்கும் கனடா நாட்டின் ஆளுனர் Mary Simon 

கனடாவின் ஆளுனர் Mary Simonனின் வரவேற்புரை

கனடா மேற்கொண்டுவரும் ஒப்புரவு, குணப்படுத்தல், நம்பிக்கை மற்றும், புதுப்பித்தல் பாதையில் கத்தோலிக்கத் திருஅவை இணைவதை திருத்தந்தையின் பயணம் உலகிற்கு உணர்த்தியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

கியூபெக் நகரின் ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வோர் மற்றும், கனடா மக்கள் சார்பில் திருத்தந்தையே, தங்களை வரவேற்கிறேன். இந்நிலப்பகுதியில் எனக்கு வரவேற்பளித்த First Nations பூர்வீக இனத்தவருக்கு முதலில் நன்றி. இம்மக்கள் இப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். திருத்தந்தையே, தாங்கள் மேற்கொண்டுள்ள கனடா திருத்தூதுப் பயணத்தை, ஒரு “தவத் திருப்பயணம்” என்று கூறியுள்ளீர்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்நகரில் பல கருத்தியல்கள் பகிரப்பட்டுள்ளன.

 எமது நாடு மேற்கொண்டுவரும் ஒப்புரவு, குணப்படுத்தல், நம்பிக்கை மற்றும், புதுப்பித்தல் பாதையில் தாங்களும், கத்தோலிக்கத் திருஅவையும் இணைவதை இப்பயணத்தின் வழியாக உலகத்திற்கு உணர்த்தியுள்ளீர்கள். இது முதலில் மஸ்குவாசிஸ்ஸில் தொடங்கியது. அக்காலத்தில் பூர்வீக இனத்தவருக்கு இழைக்கப்பட்ட வேதனைகளை அனுபவித்தவர்களில் இப்போதும் வாழ்ந்து வருபவர்களைச் சந்தித்தீர்கள். அவர்கள், இன்றும் தங்களின் மொழிக்காக, கலாச்சாரத்திற்காகப் போராடி வருகின்றனர். இதனால் வருங்காலத் தலைமுறைகளில் அவை தொடர்ந்து நிலைத்திருக்கும்.

கலைஞர்களாகிய இம்மக்கள், இசை, நடனம், கலாச்சாரம், மொழி ஆகியவை வழியாக, தங்களின் கதைகளை எடுத்துரைக்கின்றனர். அவர்கள் அனைவரும் இப்போதும் உறுதியாக இருக்கின்றனர், தங்களை நினைத்து பெருமிதம் கொள்கின்றனர். அவர்கள் சமுதாயத்திற்கு அளித்துள்ள பங்களிப்புக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் முயற்சிகள், கனடாவை வலுவான நாடாக மாற்றி வருகிறது. அவர்கள் தங்களின் முயற்சிகளை ஒருபோதும் கைவிடமாட்டார்கள். அவர்களின் துணிச்சலை நாம் நினைவில் வைக்கவேண்டும். கனடாவில் ஒப்புரவுக்கு விடப்படும் அழைப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு ஆளுனர் Mary Simon அவர்கள், கனடாவில் பூர்வீக இனங்களின் மக்கள் பற்றியும், அம்மக்களோடு இடம்பெறும் ஒப்புரவு நடவடிக்கைகள் பற்றியும் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார். பூர்வீக இனத்தவரின் மொழிகளில் திருத்தந்தைக்கு வாழ்வத்தும் நன்றியும் தெரிவித்தார் ஆளுனர் சைமன்.

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2022, 14:41