தேடுதல்

திருத்தந்தை, TÉLAM செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கிறார் திருத்தந்தை, TÉLAM செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கிறார் 

TÉLAM நிறுவனத்திற்கு திருத்தந்தை வழங்கியுள்ள நேர்காணல்

“ஒரு பிரச்சனையிலிருந்து நம் சொந்த முயற்சியினால் வெளிவருவதில்லை, அதற்கு நாம் சவால்களை மேற்கொள்ளவேண்டிருக்கும், மற்றவரின் உதவியையும் நாடவேண்டியிருக்கும்” - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

“ஒரு பிரச்சனையிலிருந்து நம் சொந்த முயற்சியினால் நாம் வெளிவருவதில்லை, அதற்கு நாம் சவால்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும், மற்றும், மற்றவரின் உதவியையும் நாடவேண்டியிருக்கும்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TÉLAM எனப்படும் அர்ஜென்டீனாவின் தேசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த நீண்டதொரு பேட்டியில் கூறியுள்ளார்.

உலகின் சூழல் குறித்த பல்வேறு விவகாரங்கள், போர்களை நிறுத்துவதில் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு, அரசியலில் இளையோரின் முக்கியத்துவம், சமுதாயப் பிரச்சனைகள், அரசுகளின் பொறுப்பு, ஊடகத்திற்கும், அதிகாரத்திற்கும் இடையேயுள்ள உறவு, கத்தோலிக்கத் திருஅவையில் தனது தலைமைத்துவம் என பல்வேறு  தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அர்ஜென்டீனா நாட்டில் பேராயராகப் பணியாற்றியபோது ஹோர்கே பெர்கோலியோ என தான் அழைக்கப்பட்டதையும் பேட்டியில் அவ்வப்போது நினைவுகூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் போர்

இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்திருப்பது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள திருத்தந்தை, இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்மீது நிறைய நம்பிக்கை இருந்தது, இந்நேரத்தில் நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை, அந்நிறுவனத்தில் பணியாற்றுவோரில் மிக நல்ல மனிதர்கள் உள்ளனர், ஆயினும், இன்றைய உலகின் சூழலில், அவர்கள் உறுதியுடன் கடமையை ஆற்ற அதிகாரமற்று உள்ளனர் என்று கூறியுள்ளார். 

அந்நிறுவனம், ஐரோப்பாவில் தற்போது இடம்பெற்றுவருவது போன்ற போர்களை நிறுத்துவதற்கு அதிகாரமற்று இருக்கிறது, அரசியலமைப்பு அதற்கு அதிகாரமளிக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, இந்நேரத்தில், நமக்குத் துணிவும், படைப்பாற்றலும் தேவைப்படுகின்றன, இவையிரண்டுமின்றி, மரணத்தை வருவிக்கும் கடுமையான போர்களை நிறுத்துவதற்கு, பன்னாட்டு நிறுவனங்களால் எதுவும் நமக்கு உதவ இயலாது என்றும் கூறியுள்ளார்.

தனித்து நின்று எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண இயலாது, அவ்வாறு நெருக்கடியிலிருந்து ஒரு குழு வெளிவந்தால், அது, பொருளாதார, அரசியல் அல்லது, அதிகாரத்தின் சில பிரிவுகளின் ஒரு பகுதியாகவே இருக்கும், முழுமையானதாக இருக்காது எனவும், ஒருவர் தான் தேர்ந்துகொண்ட அதிகாரத்திலிருந்து வெளிவர இயலாதவராக இருப்பார் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அரசியலில் இளையோர்

திருத்தந்தை பிரான்சிஸ்,  TÉLAM  செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்
திருத்தந்தை பிரான்சிஸ், TÉLAM செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர்

அரசியலில் இளையோரின் பங்கு குறித்து கூறியுள்ள திருத்தந்தை, இளையோரே, உலகளாவிய அரசியலுக்கு விடிவுகாலத்தைப் பரிந்துரைப்பவர்கள் என்றும், இளையோரின் சமூக-அரசியல் அர்ப்பணத்தில் அவர்களுக்கு உதவுவது முக்கியம் என்றும், அவர்கள் ஒரு அஞ்சல்பெட்டியில் விற்கப்படக்கூடாது, இக்காலத்தில் அவர்கள் மிகவும் உயிர்த்துடிப்புடன் உள்ளனர் என நினைக்கின்றேன், எனது காலத்தில் அவர்கள் ஒரு அஞ்சல் பெட்டியில் அல்ல, ஆனால் மத்திய அஞ்சல் அலுவலகத்தில் நம்மை விற்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2022, 14:22