தேடுதல்

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு

கனடா, பூர்வீக இனங்களின் மக்களால் மிகவும் சிறப்படைந்துள்ளது என்ற நல்லுணர்வோடு இந்நாட்டிலிருந்து உரோம் செல்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

“ஒன்றிணைந்து பயணம்” என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24 கடந்த ஞாயிறன்று, ஓர் ஆன்மிக தவத் திருப்பயணமாக, கனடா நாட்டிற்கு மேற்கொண்ட தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து ஜூலை 30, இச்சனிக்கிழமை இத்தாலி நேரம் காலை 8 மணி 6 நிமிடங்களுக்கு உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமானத்தளம் வந்திறங்கினார். வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, இப்பயணம் சிறப்பான முறையில் நடைபெற்றதற்கு அன்னை மரியாவுக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜூலை 29, இவ்வெள்ளி மாலை உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியளவில் கனடா நாட்டின் Iqaluit நகரின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த திருத்தந்தையை உரோம் நகருக்கு வழியனுப்புவதற்காக, கனடாவின் தலைமை ஆளுனர் மேரி சைமன் அவர்கள் உட்பட பல முக்கிய அரசு மற்றும் தலத்திருஅவை பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவ்விமானத்தளத்தின் முக்கிய விருந்தினர் அறையில் திருத்தந்தையும் ஆளுனர் சைமன் அவர்களும் சிறிதுநேரம் தனியே உரையாடினர். பின்னர் அங்கிருந்த அனைத்துப் பிரதிநிதிகளையும் வாழ்த்திய திருத்தந்தை, கனடா, பூர்வீக இனங்களின் மக்களால் மிகவும் சிறப்படைந்துள்ளது என்ற நல்லுணர்வோடு இங்கிருந்து செல்கிறேன் என்றுரைத்து, ITA A330 இத்தாலிய விமானத்தில் ஏறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அரசு மரியாதையுடன் திருத்தந்தைக்கு பிரியாவிடையும் வழங்கப்பட்டது.

திருத்தந்தை பயணம் மேற்கொண்ட விமானம், உள்ளூர் நேரம் சரியாக இரவு 8 மணி 14 நிமிடங்களுக்கு உரோம் நகருக்குப் புறப்பட்டது. 7 மணி 5 நிமிடங்கள் கொண்ட இவ்விமானப் பயணத்தில், தான் கடந்துவந்த, டென்மார்க்கின் கிரீன்லாந்து, பிரித்தானியா, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு தன் ஆசிரும் வாழ்த்தும் கலந்த தந்திச் செய்திகளை அனுப்பினார் திருத்தந்தை. விமானம் புறப்பட்டவுடன் கனடா நாட்டு ஆளுனருக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், கடந்த சில நாள்களில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து விருந்தோம்பல் பண்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை, அந்நாட்டினர் மேற்கொண்டுவரும் ஒப்புரவு, மற்றும், அமைதி நடவடிக்கைகளுக்காக தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்துள்ளார். டென்மார்க்கின் அரசி 2ம் மார்கிரேட், அயர்லாந்து அரசுத்தலைவர் MICHAEL D. HIGGINS, பிரித்தானிய அரசி 2ம் எலிசபெத், பிரான்ஸ் அரசுத்தலைவர் EMMANUEL MACRON, ஜெர்மனியின் அரசுத்தலைவர் FRANK-WALTER STEINMEIER, சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் அரசுத்தலைவர் IGNAZIO CASSIS, இத்தாலி அரசுத்தலைவர் SERGIO MATTARELLA ஆகியோருக்கு அனுப்பிய தந்திச் செய்திகளில், திருத்தந்தை, நாடுகளில் அமைதி மற்றும் வளமை நிரம்ப தான் செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2022, 15:08