தேடுதல்

திருத்தந்தையுடன் அருள்சகோதரி Raffaella Petrini திருத்தந்தையுடன் அருள்சகோதரி Raffaella Petrini 

திருப்பீட அலுவலகப் பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

"திருப்பீட அலுவலகப் பணிகளில் பெண்களுக்கான வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்பட நான் திறந்த மனதுடன் இருக்கின்றேன்": திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், புதிய ஆயர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆயர்கள் பேராயத்திற்கு இரண்டு பெண்களை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஜூன் மாதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் Philip Pullela மேற்கொண்ட நேர்காணலில், திருப்பீடத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்து அவர் கேள்வி எழுப்பியபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்தில், சில திருப்பீடத்துறைகளை வழிநடத்தும் பொறுப்பு, பொதுநிலையினரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தான் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது, நிர்வாகத் தலைமையகத்திற்கு துணைத் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றும், இப்போது, ஆயர்கள் பேராயத்தின், ​​ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் ஆணையத்திற்கு, இரண்டு பெண்கள் செல்கிறார்கள் என்றும், இந்த வழியில் அவர்களுக்கான வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, கலாச்சாரத் திருப்பீட அவை, கத்தோலிக்க கல்வி பேராயம், வத்திக்கான் நூலகம் போன்ற சில திருப்பீடத் துறைகளை வழிநடத்துவதற்கு வருங்காலத்தில் பொதுநிலையினர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, வத்திக்கான் நகர் நிர்வாகத் தலைமையகத்தில் இரண்டாவது இடத்தில் அருள்சகோதரி ரஃபேலா பெட்ரினியை நியமித்து, அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த நேர்காணலின்போது நினைவு கூர்ந்துள்ளார்.

அருள்சகோதரிகள் Francesca di Giovanni , Nathalie Becquart, Alessandra Smerilli, மற்றும் பொதுநிலையினரான Barbara Jatta, Nataša Govekar, Cristiane Murray ஆகிய பெண்களும் திருஅவைச் சார்ந்த பல்வேறு பொறுப்புகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2022, 14:39