தேடுதல்

எதிர்ப்புக்கு மத்தியில் நன்மைசெய்ய உறுதியான தீர்மானம் எடுங்கள்

எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போது, இயேசுவைப் போன்று பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நன்மை செய்யவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

எதிர்ப்புகளுக்கு, கோபம் மற்றும், கசப்புணர்வால் பதிலளிக்காமல், எருசலேமில் தனக்குக் காத்திருந்த புறக்கணிப்பு மற்றும், மரணத்தை அறிந்தவராய், அந்நகர் நோக்கித் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள உறுதியான தீர்மானம் எடுத்த இயேசுவைப் பின்பற்றி நடங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 26, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

இயேசு எருசலேமுக்குச் செல்வதற்கு எடுத்த தீர்மானம் திருப்புமுனையாக இருந்தது, ஏனென்றால் அந்நகரில் புறக்கணிப்பு, துன்பம் மற்றும், மரணத்தை, தான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தார் என்று, திருத்தந்தை மேலும் கூறியுள்ளார்.

இயேசு எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால், அவரை ஏற்க மறுத்த சமாரியருடைய ஓர் ஊரை, வானத்திலிருந்து தீ வந்து அழிக்குமாறு செய்யவா? என, திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம் கேட்டது பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக்.9,51-62) மையப்படுத்தி ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம், உண்மையான கிறிஸ்தவர்களாக, இயேசுவை நாம் பின்செல்ல விரும்பினால், நம் வாழ்வுக்காக உறுதியான தீர்மானம் எடுப்பதற்கு அழைக்கப்படுகிறோம் எனவும், இத்தீர்மானம் எதை உள்ளடக்கியுள்ளது என்பதை அறிவதற்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் நமக்கு உதவுகிறது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

எதிர்ப்புகளின்போது கடவுளிடம் திரும்பவேண்டும்

திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும் பரிந்துரைத்ததை இயேசு புறக்கணித்தார், மற்றும், அவர்களைக் கடிந்துகொண்டார், ஏனென்றால், அவர் இவ்வுலகத்திற்கு கொணர விரும்பிய தீ, இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பாகும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

திருத்தூதர்கள் யாக்கோபும் யோவானும், கோபம் தங்களை ஆட்கொள்ள அனுமதித்தது போன்று, நன்மைகள் செய்யும்போதுகூட நம் திட்டப்படி அனைத்தும் நடக்காவிடில், கோபப்படுகிறோம், இத்தகைய சூழலில் இயேசு மாறுபட்ட ஒரு பாதையைத் தெரிவுசெய்தார் என்றுரைத்த திருத்தந்தை, கடுகடுப்புடன் நடந்துகொள்வதிலிருந்து மாறுபட்ட ஒரு தீர்மானம் எடுப்பது என்பது, பொறுமை, நிதானம், நன்மைசெய்வதில் மனந்தளராமை, கடினவாழ்வை ஏற்றல் ஆகியவற்றில் வாழ்வதாகும் என்று கூறியுள்ளார்.  

எதிர்ப்புகளை நன்மையால் வெல்க

எதிர்ப்புக்களைச் சந்திக்கும்போது, இயேசுவைப் போன்று பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் நன்மை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்ப்புகள், புரிந்துகொள்ளாமை போன்றவற்றை சந்திக்கும்போது ஆண்டவரிடம் திரும்புகிறோமா? அவரது உதவியை நாடுகிறோமா, நம் முயற்சிகள் பாராட்டுக்களைப் பெறாதபோது கசப்புணர்வில் உள்ளோமா? என்ற கேள்விகளையும் எழுப்பினார். 

நன்மை செய்வதற்கான ஆர்வம், நீதிக்கான உணர்வில் ஏற்படுகிறது என சிலநேரங்களில் நினைக்கின்றோம், உண்மையில், பல நேரங்களில் அது தற்பெருமை, பொறுமையிழப்பு, பலவீனம் போன்றவையே என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் போல, உறுதியான தீர்மானத்தோடு அவரைப் பின்செல்வதற்கு அவரிடமே சக்தியைக் கேட்டு இறைஞ்சுவோம் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2022, 12:30