தேடுதல்

உக்ரேனிய வீரர்களின் மனைவியர் திருத்தந்தையிடம் உதவி வேண்டல் உக்ரேனிய வீரர்களின் மனைவியர் திருத்தந்தையிடம் உதவி வேண்டல்  

உக்ரேனிய வீரர்களின் மனைவியர் திருத்தந்தையிடம் உதவி வேண்டல்

எஃகு ஆலையில் போராடும் உக்ரேனிய வீரர்களின் 500-க்கும் மேற்பட்ட மனைவியரின் பிரதிநிதிகள் என்ற முறையில் கேத்தரினாவும் யூலியாவும் திருத்தந்தையைச் சந்தித்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மாரியுப்போலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடிவரும் உக்ரேனிய படை வீரர் இருவரின் மனைவியர், திருத்தந்தையிடம் தங்கள் கணவர்களின் அவலநிலையை விவரித்துள்ளனர்.  

மே 11, இப்புதனன்று நடைபெற்ற திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு, கேத்தரினா ப்ரோகோபென்கோ மற்றும் யூலியா ஃபெடோசியுக் ஆகிய இரு பெண்களும் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினர். அவர்கள் திருத்தந்தையை சிறிது நேரமே சந்தித்த போதிலும் இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று பின்னர்   செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

மாரியுப்போலில் நிலைமை பயங்கரமாக இருக்கிறது என்பதை தாங்கள் உணர்வதாகவும், ஒவ்வொரு நாளும் அவர்களின் கணவர்களிடமிருந்து பயங்கரமான செய்திகளைப் பெறுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாரியுப்போலில் தங்கியிருப்பவர்களை விரைவில் வெளியேற்ற மனிதாபிமான உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேத்தரினாவும் யூலியாவும் திருத்தந்தையிடம் விண்ணப்பித்தபோது, அவர் அவர்களிடம் தான் இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்துள்ளார்.  

மேலும் இவ்விருப் பெண்களும் திருத்தந்தையை உக்ரைனுக்கு வருமாறும், இந்தக் கொடிய போரை முடிவுக்குக் கொண்டுவர இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் வேண்டுகோள் விடுத்ததுடன், மாரியுப்போலில் சிக்கியுள்ள பொதுமக்களையும் படைவீரர்களையும் மீட்க உதவுமாறு உலகத் தலைவர்களிடமும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மாரியுப்போல் நகரில் சிறிதளவு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருள்களுடன், பொருள்கள் பற்றாக்குறையை படை வீரர்கள் வெகுவாக எதிர்கொள்கின்றனர் என்பதும், துறைமுக நகரமான இதன்மீது இரஷ்யாவின்  வெடிகுண்டி தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதால் இங்கு மருத்துவமனைகளும் செயல்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 May 2022, 15:35