திருத்தந்தை: நம் கவலைகளை ஆண்டவரிடம் பகிர்ந்துகொள்வோம்
மேரி தெரேசா: வத்திக்கான்
வாழ்வில் எதிர்கொள்ளும் துயரச் சூழல்கள் குறித்த கவலைகளிலிருந்து வெளிவருவதற்கு, உயிருள்ள உணவாகிய இயேசுவிடம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 17, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
நம் கவலைகளிலிருந்து நம்மைக் குணமாக்குவதற்கு, உயிருள்ள உணவாகிய இயேசுவை அனுமதிப்போம், கவலைகளை அவரிடம் பகிர்ந்துகொள்ள அவர் நம் இதயங்களைத் திறப்பாராக, இறுக்கமான நிலையிலிருந்து நம்மைக் குணமாக்குவாராக, அவர் நம்மை இட்டுச்செல்ல விரும்பும் இடங்களுக்கு அவரைப் பின்செல்ல நம்மைத் தூண்டுவாராக என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
உக்ரைன் நாட்டிற்கு பேராயர் காலகர்
மேலும், உக்ரைன் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், மே 18, இப்புதனன்று அந்நாட்டிற்குச் செல்லவுள்ளார்,
உக்ரைன் நாட்டின் விவ், கீவ் மற்றும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லவிருக்கும் பேராயர் காலகர் அவர்கள், கடுமையான போரினால் துன்புற்றுவரும் உக்ரைன் மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடமும் உடனிருப்பதைத் தெரிவிப்பார் என்றும், அமைதியை உருவாக்குவதற்கு உரையாடலின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்