திருத்தந்தை: அரசியல், சந்திப்பை ஊக்குவிக்கும் ஒரு கலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
உரையாடலை, குறிப்பாக கருத்துவேறுபாடு கொண்டவர்களோடு அதனை மேற்கொள்ளுமாறும், சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு தங்களையே அர்ப்பணிக்குமாறும், மனித சமுதாயத்தின் நலன்கள் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், பிரான்ஸ் நாட்டு இளையோர் குழு ஒன்றிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
புதிய வழி எனப்படும் “Chemin Neuf” என்ற பிரான்ஸ் நாட்டு குழுமத்தின் “அரசியல் உடன்பிறந்தஉணர்வு” என்ற குழுவின் 82 உறுப்பினர்களை, மே 16, இத்திங்களன்று திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களுக்கு அரசியல் என்றால் என்ன என்பதன் உண்மையான அர்த்தத்தை எடுத்துரைத்தார்.
Chemin Neuf குழுமத்தின் “அரசியல் உடன்பிறந்தஉணர்வு” என்ற பிரிவு, பல்வேறு நாடுகள், மற்றும், அரசியல் கலாச்சாரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் 18க்கும் 35 வயதுக்கும் உட்பட்ட இளையோரை ஒன்று சேர்த்து, அரசியலில் கடவுளின் இதயத்திற்கு ஏற்ற முறையில், பொதுநலனுக்கும், ஏழைகளுக்கும் ஆர்வத்தோடு பணியாற்ற தூண்டிவருகிறது.
அரசியல் என்பது, சந்திப்பு, சிந்தித்தல், செயல்படுதல் என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கியது என்றுரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவர்களுக்கு அரசியல் என்பது, முதலில் சந்திப்பை ஊக்குவிப்பதாகும் எனவும், இது மற்றவருக்குத் திறந்தமனதாய் இருப்பது, மற்றும், மதிப்புடன்கூடிய உரையாடலின் ஒரு பகுதியாக, மற்றவரின் வேறுபாடுகளை ஏற்பதாகும் என்று கூறியுள்ளார்.
இதைவிட இன்னும் அதிகமாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, நம் பகைவர்களை நாம் அன்புகூரவேண்டும், அதாவது, அரசியலில் இடம்பெறும் சந்திப்புக்களை, உடன்பிறந்த உணர்வுகொண்ட, குறிப்பாக நம்மோடு கருத்துவேறுபாடு கொண்டவர்களோடு மேற்கொள்பவைகளாக நோக்கவேண்டும் என்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, நாம் மற்றவரை பார்க்கின்ற, ஏற்கின்ற, மற்றும், மதிக்கின்ற மனநிலையில், மாற்றம் தேவைப்படுகிறது என்றும், மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தால், தங்களின் சொந்த கருத்தியல்களைத் திணிக்க முயற்சிக்கும் மக்களின் வன்முறையாக அரசியல் மாறிவிடும் என்றும் திருத்தந்தை எச்சரிக்கை விடுத்தார்.
சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வது கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அரசியலுக்கு முக்கியமானது என்றும், பொதுவான திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நற்செய்தியே நமது வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
செயல்பாடுகள் பற்றி உரைக்கையில், கருத்தியல்களைவிட எதார்த்தங்களும், உண்மைகளும் மிக முக்கியம் என்பதை மறக்கக்கூடாது எனவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு, இந்தக் குழுமத்தின் உறுப்பினர்கள் தங்களை அர்ப்பணித்திருப்பதற்கு பாராட்டுவதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்