தேடுதல்

இரஷ்யப் படைகளால் தாக்கப்பட்ட மாரியுப்போல் நகரம் இரஷ்யப் படைகளால் தாக்கப்பட்ட மாரியுப்போல் நகரம்  (AFP or licensors)

மனிதரை, வன்முறை இயல்பிலிருந்து குணமாக்க திருஅவை உதவ...

1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், உளவியல் கல்வி நிறுவனத்தின் ஏறத்தாழ 600 முன்னாள் மாணவர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்குனர்கள் மற்றும், கல்வியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மனித இயல்பில் வேரூன்றியுள்ள போர் மற்றும், கலவரங்களைத் தூண்டும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு, திருஅவை தகுதியான உருவாக்குனர்களை உலகிற்கு வழங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் உளவியல் வல்லுனர்களைக் கேட்டுக்கொண்டார்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் உளவியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, மே 19 இவ்வியாழனன்று, அந்நிறுவனம் நடத்திய உலகளாவிய கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் உளவியல் கல்வி நிறுவனம், கடந்த அரை நூற்றாண்டளவாக, திருஅவைக்கு ஆற்றியுள்ள நற்பணிகள் குறித்த தன் எண்ணங்களை அச்செய்தியில் பகிர்ந்துகொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருங்கிணைந்த மனிதரின் வளர்ச்சியில் அக்கறை என்ற புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் கொள்கையின்படி, ஆன்மீகத்தையும் உளவியலையும் ஒருங்கிணைக்கும், திருஅவையின் பல்வேறு புவியியல் மற்றும், கலாச்சாரச் சூழல்களைக்கொண்ட திறமைபடைத்த வல்லுனர்களை இந்நிறுவனம் உருவாக்குகிறது என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை வாழ்வில் உருவாக்குதல்

இந்நிறுவனம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களை எடுத்துக்கொண்டு, பல்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும், பெண்கள், மற்றவரை நம்பிக்கை வாழ்வில் போதுமான அளவில் பக்குவமடைய உதவுவதற்குப் பயிற்சியளித்து வருகின்றது என்றும் திருத்தந்தை பாராட்டியுள்ளார்.   

மனித இதயங்களிலிருந்து வன்முறைகளைக் களைவது

மாரியுப்போல் இரும்பு ஆலையிலிருந்து வெளியே வரும் படைவீரர்
மாரியுப்போல் இரும்பு ஆலையிலிருந்து வெளியே வரும் படைவீரர்

 “ஆதாம், நீ எங்கே இருக்கிறாய்?” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, கடந்தகாலத்தின் தன் மகிமையை மையப்படுத்தாமல், வருங்காலத்தின் சவால்களோடு விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் மீது கட்டியெழுப்புதல் என்பதை மையப்படுத்தி நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்தத் தலைப்பு, இன்றைய உலகின் நடவடிக்கைகள் குறித்து சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

இந்தத் தலைப்பு, மனச்சான்று மற்றும் மனமாற்றம் பெறுவது குறித்து ஆழமாகப் பரிசோதனை செய்யவும் அழைப்புவிடுக்கின்றது என்றும், இன்று உலகம் மனிதயியல் குறித்த ஓர் ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுவரும்வேளை, இதற்கு திருஅவை தகுதியான மற்றும், திறமையான முறையில் பதிலளிக்கவேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.   

உளவியல் கல்வி நிறுவனம்

இந்த உளவியல் கல்வி நிறுவனத்தோடு தொடர்புடைய ஏறத்தாழ 15 சிறப்பு உளவியல் மையங்கள், ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும், ஐரோப்பாவில் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், 1971ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உளவியல் கல்வி நிறுவனம், குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளில் ஆன்மீக வழிகாட்டிகள், இறையழைத்தல் ஊக்குனர்கள், மற்றும், கல்வியாளர்களுக்கு, மிகப்பெரிய அளவில் உளவியல் கல்வி வழங்கி வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 16:43