தேடுதல்

பல்லுயிர்கள் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்குகொண்டவர்கள் சந்திப்பு பல்லுயிர்கள் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்குகொண்டவர்கள் சந்திப்பு 

மனிதர் மத்தியிலும், படைப்போடும், உடன்பிறந்த உணர்வில் வாழுங்கள்

கடவுள் நமக்கு வழங்கியுள்ள படைப்பு எனும் கொடையை பாதுகாப்பதற்கு, பெரிய அளவில் வீரத்துவம் தேவையில்லை, மாறாக, நம் மத்தியிலும், படைப்போடும், தாழ்மையும் பொறுமையும் நிறைந்த உடன்பிறந்த உணர்வுநிலையே போதுமானது

மேரி தெரேசா: வத்திக்கான்

புறக்கணிப்பு, வன்முறை, உண்மையிலிருந்து பிறழ்தல் போன்ற அனைத்து முறைகளைப்  புறந்தள்ளும் மனித உறவுகளை உருவாக்குவதற்கும், உலகளாவிய கிராமமாகிய இப்பூமிக்கோளத்தைப் பராமரிப்பதற்கும் நம் திறமைகளைப் பயன்படுத்த அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காவல்துறை அமைப்பு ஒன்றிடம் கூறினார்.

மே 21, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் தன்னைச் சந்திக்க வந்திருந்த, “மனதின் இயல்பு: பல்லுயிர்கள் பாதுகாப்புக்கு இயற்கையின் ஒரு புதிய கலாச்சாரம்” என்ற தலைப்பில், காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்குகொண்ட ஏறத்தாழ 200 பேருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நம் உலகில் மக்களிடையேயும், மதங்களிடையேயும் உடன்பிறந்த உணர்வையும், அமைதியையும் உருவாக்குபவர்களாகச் செயல்படுவதற்கு கல்வி உதவுகிறது என்றுரைத்த திருத்தந்தை, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, காவல்துறையினர் ஆற்றிவரும் பங்கை ஊக்கப்படுத்தியதோடு, அப்பணியைத் தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

கடவுள், மனிதர், படைப்பு

இக்காலக்கட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு நம் அனைவருக்கும் சவாலாக இருப்பதால், பூமிக்கோளத்தின் வருங்காலம் குறித்த பொறுப்புள்ள மற்றும், உடனடியாகத் தேவைப்படும் உரையாடலை, இக்காவல்துறையினர் ஆற்றி வருகின்றனர் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Bagnoregioவின் புனித பொனவெந்தார், இயற்கையின் அழகைத் தியானித்ததன் வழியாக எல்லாவற்றையும் கடந்த கடவுள் பற்றிக் கண்டுணர பல நேரங்களில் நமக்கு அழைப்புவிடுத்திருப்பதை, "மனதின் இயல்பு" என்ற இக்கருத்தரங்கின் தலைப்பு நினைவுபடுத்துகின்றது எனவும், இது மனம் மற்றும், ஆன்மாவின் பயணம் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

விண்ணையும், விண்மீன்களையும், அல்லது நீர்வீழ்ச்சியின் தெளிந்த தண்ணீரையும் நாம் வியப்போடு பார்க்கும்போது, இவ்வளவு அழகைப் படைத்த படைப்பாளி பற்றி நாம் தியானிக்கிறோம் என்றும், இவற்றைப் பேணி பாதுகாக்குமாறு கடவுளால் மனித இனத்திற்கு கொடுக்கப்பட்ட கொடை என்றும், திருவிவிலியத்தில், அழகும், நன்மைத்தனமும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதவையாக உள்ளன என்றும், திருத்தந்தை எடுத்தியம்பினார்.

பராமரிப்புக் கலாச்சாரம்

கடவுள், மனித குலத்திற்கு வழங்கியுள்ள அவரது படைப்பைப் பாதுகாப்பதற்கு, பெரிய அளவில் வீரத்துவம் தேவையில்லை, மாறாக, நம் மத்தியிலும், படைப்போடும், தாழ்மையும் பொறுமையும் நிறைந்த உடன்பிறந்த உணர்வுநிலை போதுமானது எனவும், உண்மையில், மற்றவரின் துணையின்றி நம்மால் வாழ முடியாது, நாம் ஒருவர் ஒருவரோடு ஆழமான தொடர்புகொண்டிருக்கிறோம் என்பதை வாழ்வும் வரலாறும் காட்டியுள்ளன எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அறிவுக்கும், பராமரிப்புக் கலாச்சாரத்தின் வளரச்சிக்கு உதவுவதற்கும் இடையே உரையாடல் இடம்பெறுவதற்கு, கல்வித் திட்டத்தில் புதிய கற்றல்முறை ஊக்குவிக்கப்படவேண்டியுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2022, 16:50