தேடுதல்

 புனித தேவசகாயம் புனித தேவசகாயம்  

புனித தேவசகாயம் உட்பட புதிய 10 புனிதர்களின் வரலாறு

33வது வயதில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய நீலகண்டன், திருமுழுக்கில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார்.

மேரி தெரேசா - வத்திக்கான்  

அருளாளர் லாசருஸ் எனப்படும் தேவசகாயம் அவர்கள், தென் இந்தியாவின் திருவிதாங்கூர் மன்னராட்சியின்போது 1712ம் ஆண்டில் பிறந்தவர். அவரது இந்துமதப் பெற்றோர்களாகிய வாசுதேவன் நம்பூதிரி, தேவிகா அம்மா தம்பதியர், அவருக்கு நீலகண்டன் என்ற பெயரைச் சூட்டினர். இவர் அரண்மனையில் கருவூலத்திற்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். தனது 33வது வயதில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய இவர், திருமுழுக்கில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றார். இப்பெயர் லாசர் என்ற விவிலியப் பெயரோடு ஒத்துச்செல்வதாகும். இவரது மதமாற்றம் அரசத் துரோகம் மற்றும், அரசின் நிலையான தன்மைக்கு ஆபத்து எனக் கருதப்பட்டது. தேவசகாயம் அவர்கள் தவறாமல் அருளடையாளங்களைப் பெற்றார், பிற்படுத்தப்பட்ட சாதியினரோடு உணவருந்தினார், மிகவும் தாழ்மைப் பண்பைக் கடைப்பிடித்தார். நற்செய்தியை அறிவித்தார். மூடநம்பிக்கைகள்,  மற்றும், அநீதிக்கு எதிராகக் குரல்கொடுத்தார். இவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 1749ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி அரசர் இவரைக் கைதுசெய்ய ஆணையிட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். கரங்கள் கட்டப்பட்டு எருமை மீது பின்புறமாக அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பொதுவில் இரக்கமின்றி முள்சாட்டையால் அடிக்கப்பட்டார். அவரது காயங்களில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டது. எல்லாத் துன்பங்களையும் பொறுமையோடும் மனமகிழ்வோடும் ஏற்றார் மறைசாட்சி தேவசகாயம். பல்வேறு கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், உட்காரவோ படுக்கவோ முடியாதபடி, ஏழு மாதங்கள் ஒரு மரத்தில் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டார். 1752ம் ஆண்டு சனவரி 14ம் தேதியன்று நள்ளிரவில் படைவீரர்கள் அவரை எழுப்பி காற்றாடி மலைக்குக் கூட்டிச்சென்றனர். அவர் படைவீரர்கள் முன்னிலையில் தனது இறுதி செபத்தைச் சொன்னார். ஐந்து துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் மறைசாட்சி தேவசகாயம். இயேசு மரி என்ற இனிய பெயர்களை உச்சரித்து உயிர்துறந்தார். கொலைகாரர்கள், இவரது உடலை அடக்கம் செய்யாமல், காட்டில் வனவிலங்குகளுக்கு உணவாகப் போட்டார்கள். தேவசகாயம் அவர்களின் வீர மரணம் பற்றிய செய்தி மூன்று நாள்களுக்குப்பின் அப்பகுதியில் பரவத் தொடங்கியது. ஐந்து நாள்களுக்குப்பின் மக்கள் அவரது எஞ்சிய உடலைக் கண்டுபிடித்து, அவற்றை மிகப் புகழ்பெற்ற கோட்டாறு புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தின் பலிபீடத்திற்கு முன்பாக நல்லடக்கம் செய்தனர். அன்றிலிருந்து, தேவசகாயம் அவர்கள், திருமணமான முதல் பொதுநிலையினர் புனிதராகவும். மறைசாட்சியாகவும் கருதப்பட்டார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி அவரை அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் டைட்டஸ் பிரான்ட்ஸ்மா அவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் தக்காவோ வதைமுகாமில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவர். 1881ம் ஆண்டில் நெதர்லாந்தில் பிறந்த இவர், கார்மேல் சபைத் துறவியும் அருள்பணியாளருமாவார். இவர், உரோம் பாப்பிறை கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில், முனைவர் பட்டம் பெற்றவர், மற்றும், சமூகவியல் படிப்பையும் முடித்தவர். மெய்யியல் மற்றும், தியானயோகிகள் ஆழ்நிலை வரலாறு கல்வியைக் கற்றுக்கொடுத்தவர். நெதர்லாந்து ஆயர்கள், இவரை கத்தோலிக்கப் பத்திரிகையாளர்களின் பேச்சாளராக நியமித்து, நாத்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து விளம்பரங்கள் செய்யுமாறு பணிக்கப்பட்டார். இதன் விளைவாக, நாத்சி கொள்கையாளர்களால் கைதுசெய்யப்பட்டு வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டார். இவர் 1942ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நஞ்சு ஊசி ஏற்றி கொலைசெய்யப்பட்டார். திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், டைட்டஸ் பிரான்ட்ஸ்மா அவர்களை, 1985ம் ஆண்டில் அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் சீசர் தெ புஸ் அவர்கள், 1544ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் புரோவென்சாவில் பிறந்தவர். இயேசு சபையினரின் பள்ளியில் பயின்ற இவர் திருத்தூதுப் பணி மற்றும் மறைக்கல்வியில் தணியாத் தாகம் கொண்டு, 1592ம் ஆண்டில் கிறிஸ்தவக் கோட்பாட்டுத் தந்தையர் சபையைத் தோற்றுவித்தார். இறைவேண்டல், படிப்பு இவற்றில் நாள்களைச் செலவழித்து புனித வாழ்வு வாழ்ந்தார். 1607ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நாள் காலையில் அவிஞ்ஞோனில் இறைபதம் சேர்ந்தார் இவர். 1975ம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், சீசர் தெ புஸ் அவர்களை அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ அவர்கள், 1827ம் ஆண்டில் இத்தாலியின் பெர்கமோவில் பிறந்தவர். 1850ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இளையோரை வழிநடத்துவதிலும் அவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதிலும் ஆர்வம் காட்டியவர். வணக்கத்துக்குரிய மரிய தெரேசா கபிரியேலியுடன் சேர்ந்து ஏழைகளின் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். இச்சபையினர், குடும்பங்கள் இல்லாத, மிக வறுமையிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கும், துன்பத்தில் உழலும் குடும்பங்களுக்கும் பெற்றோரை இழந்த சிறாருக்கும் ஆதரவளித்து வருகின்றனர். இவர் 1886ம் ஆண்டில் தனது 58வது வயதில் இறைபதம் சேர்ந்தார்., 1963ம் ஆண்டில் திருத்தந்தை புனித 23ம் ஜான் அவர்கள், லூயிஜி மரியா பலாஸ்ஸோலோ அவர்களை அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ அவர்கள், இறையழைத்தல்களை ஊக்குவிப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதனால், உலகளாவிய புனிதத்துவத்திற்காக ஓர் அருள்பணியாளர் சபை, ஒரு பெண் துறவு சபை மற்றும், பொதுநிலையினர் நிறுவனம் ஆகியவற்றைத் தோற்றுவித்தார். 1891ம் ஆண்டில் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரின் பியநூராவில் பிறந்த இவர் 1913ம் ஆண்டில் அருள்பணியாளரானார். திருநற்கருணை மீது மிகுந்த பக்தியை ஊக்குவித்த  இவர், 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி இறைவனடி சேர்ந்தார். 2011ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜூஸ்தீனோ மரியா ருசோலில்லோ அவர்களை  அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் சார்ல்ஸ் து புக்கு அவர்கள், 1858ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சு இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், புவியியல் ஆய்வாளர் மற்றும், நாடுகாண் பயணியாக இருந்தார் பின்னர் இவருக்கு ஏற்பட்ட ஆழமான ஆன்மீக அனுபவம் மற்றும், மனமாற்றத்தால் பக்குவப்பட்டு, தன் வாழ்வை முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணிக்கத் தீர்மானித்தார். 1901ம் ஆண்டில் அருள்பணியாளரான இவர், இயேசுவைப் பின்பற்றி மௌனத்திலும், மறைந்த வாழ்விலும் ஆழ்நிலைத் தியானத் துறவியாக வாழத் துணிந்தார். இவரது பணியும் எழுத்துக்களும் இயேசுவின் சிறிய சகோதரர்கள் சபையை ஆரம்பிக்க வைத்தன. ஆப்ரிக்காவின் அல்ஜீரியா நாட்டின்  சஹாராப் பகுதியின் திருத்தூது அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய இவர், சிறிய சகோதரர் என்று அழைக்கப்பட்டார். சஹாரா பாலைவனத்தின் மையப் பகுதியில் ஏழைகளின் ஏழையாக, செபம், தியானம், ஆராதனை ஆகியவற்றில் வாழ்வை செலவழித்த இவர், 1916ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று மாலையில் கொள்ளைக் கூட்டத்தினரால் கொலைசெய்யப்பட்டார். 2005ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சார்ல்ஸ் து புக்கு அவர்களை அருளாளராக அறிவித்தார்.

அருளாளர் மரிய ரிவியெர் அவர்கள், பிரான்ஸ் நாட்டில் 1768ம் ஆண்டில் பிறந்தவர். பிரெஞ்சு புரட்சி நடந்த காலக்கட்டத்தில், கல்வி கற்பிக்கவேண்டுமென்ற ஆவலில், காணிக்கை அன்னை அருள்சகோதரிகள் சபையை உருவாக்கினார். மக்களின் சமய நம்பிக்கை வாழ்வு செழிப்பதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த இவர், 1838ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி இறைபதம் சேர்ந்தார். 1982ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய ரிவியெர் அவர்களை அருளாளராக அறிவித்தார்.

 அருளாளர் மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ அவர்கள், 1844ம் ஆண்டில் இத்தாலியின் பியெமொந்தேயில் பிறந்தவர். தூரின் நகரில் ஏழைகள், நோயாளிகளுக்குப் பணியாற்ற அர்ப்பணித்திருந்த இவர், மறைக்கல்வியையும் போதித்து வந்தார். இப்பணியினால் உள்தூண்டுதல் பெற்று, லொவானோவின் கப்புச்சின் மூன்றாம் அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். உருகுவாய் நாட்டின் மொந்தேவிதேயோவில் தன் சபையின் குழுமத்தைப் பார்வையிடச் சென்றபோது, 1904ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி காலமானார். 1993ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய இயேசுவின் பிரான்செஸ்கா ருபாத்தோ அவர்களை அருளாளராக அறிவித்தார்    

அருளாளர் இயேசுவின் மரிய சாந்தோகனாலே அவர்கள், லூர்தின் அமலமரி கப்புச்சின் அருள்சகோதரிகள் சபையை நிறுவியவர். இவர், இத்தாலியின் பலேர்மோவில் 1852ம் ஆண்டில் பிறந்தார். மிகவும் வறிய நிலையில் இருந்தவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்த இவர், இளையோருக்கு கல்வி வழங்குவதிலும் ஆர்வம் காட்டினார். நாள் முழுவதும் கடுமையாக வேலைசெய்தபின்னர், 1923ம் ஆண்டு சனவரி 27ம் தேதி இவர் இறைபதம் சேர்ந்தார். 2016ம் ஆண்டில் இவர் அருளாளர் பட்டியலில் இணைக்கப்பட்டார்.

அருளாளர் மரிய தொமேனிக்கோ மாந்தோவானி அவர்கள், 1862ம் ஆண்டு இத்தாலியின் கார்தா ஏரிக்கரையில் அமைந்துள்ள காஸ்தெலெத்தோவில் பிறந்தவர். இவர், அருளாளர் ஜூசப்பே நாஷிம்பேனி அவர்களோடு இணைந்து திருக்குடும்ப சிறிய அருள்சகோதரிகள் சபையை நிறுவினார். தகான் இறக்கும்வரை தன் சபையை வழிநடத்திய இவர், 1934ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இறைபதம் அடைந்தார். 2003ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், மரிய தொமேனிக்கோ மாந்தோவானி அவர்களை அருளாளராக அறிவித்தார்      

இந்த பத்து அருளாளர்களில் ஏழு பேர் துறவு சபைகளை நிறுவியவர்கள். மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஐவர் இத்தாலி நாட்டவர். ஒருவர் நெதர்லாந்தையும் ஒருவர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2022, 13:45