தேடுதல்

சாந்தா மார்த்தாவில் உக்ரைன்  புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தாவில் உக்ரைன் புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

பலனுள்ள திருத்தூதுப் பயணத்திற்கு புலம்பெயர்ந்தோர் வாழ்த்து

திருத்தந்தையைச் சந்தித்த 15 உக்ரைன் நாட்டுப் புலம்பெயர்ந்தோரில், 5 மற்றும், 7 வயது நிரம்பிய இரு பெண் குழந்தைகளைக் கொண்டிருக்கும் இளம் தாயும் ஒருவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஏப்ரல் 02, இச்சனிக்கிழமை உரோம் நேரம் காலை 7.40 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து தனது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். பல்வேறு நெருக்கடிகளால் தங்கள் சொந்த நாடுகளைவிட்டுப் புலம்பெயரும் மக்கள் மீது மிகுந்த கனிவும் அக்கறையும் காட்டிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மைக் காலமாக, தன் வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களைத் துவக்குவதற்குமுன், சாந்தா மார்த்தா இல்லத்தில் புலம்பெயர்ந்தோர் சிலரைச் சந்தித்து அவர்களின் நல்வாழ்த்தையும் ஆசிரையும் பெற்று வருகிறார். அதேபோல், இச்சனிக்கிழமை காலையில், மத்தியதரைக்கடல் பகுதி தீவு நாடான மால்ட்டாவுக்குப் புறப்படுவதற்குமுன், உக்ரைன் நாட்டிலிருந்து இத்தாலிக்குப் புலம்பெயர்ந்துள்ள 15 பேரைச் சந்தித்தார். புனித எஜிதியோ அறக்கட்டளை மற்றும், திருத்தந்தையின் தரம்ச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski ஆகியோரின் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்த இந்த 15 புலம்பெயர்ந்தோரில், 5 மற்றும், 7 வயது நிரம்பிய இரு பெண் குழந்தைகளைக் கொண்டிருக்கும் இளம் தாயும் ஒருவர். இத்தாய், ஏறத்தாழ இருபது நாள்களுக்குமுன், தன் மகள்களில் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக, உக்ரைன் நாட்டின், விவ் நகரிலிருந்து உரோம் நகருக்கு வந்தவர். மேலும் இரு தாய்மார், 10க்கும் 17 வயதுக்கும் உட்பட நான்கு பிள்ளைகளோடு, ஏறத்தாழ இருபது நாள்களுக்குமுன், உக்ரைன் நாட்டின் தெர்நோபில் நகரிலிருந்து உரோம் நகருக்கு வந்தவர்கள். மற்றொரு குடும்பம், தங்களின் வயது முதிர்ந்த தாய் மற்றும் பிள்ளைகளோடு, மூன்று நாள்களுக்குமுன் விவ் நகரிலிருந்து போலந்து வழியாக உரோம் நகருக்கு வந்தது ஆகும்.  இவர்கள் எல்லாரும், தற்போது இரு இத்தாலியப் பெண்மணிகள் வழங்கியுள்ள வீடுகளில் தங்கியிருக்கின்றனர். உக்ரைன் நாட்டின் போரினால் துன்புறும் இப்புலம்பெயர்ந்தோரின் நல்வாழ்த்துக்களுடன், வத்திக்கானிலிருந்து உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குச் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி மேஜர் பெருங்கோவிலில் செபம்

மேரி மேஜர் பெருங்கோவிலில் செபம்
மேரி மேஜர் பெருங்கோவிலில் செபம்

மேலும், அன்னை மரியா பக்தரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஒவ்வொரு வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்குவதற்கு முன்னும், அப்பயணத்தை நிறைவுசெய்து  வத்திக்கானுக்குத் திரும்பும் வழியிலும், உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, உரோம் மக்களுக்கு குணமளிக்கும் Salus populi Romani அன்னை மரியாவிடம் வேண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இச்சனிக்கிழமை காலையில், தனது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, மால்ட்டா நாட்டுக்குச் செல்லவிருந்ததைமுன்னிட்டும், ஏப்ரல் 01 இவ்வெள்ளி மாலையில், அந்த அன்னை மரியாவிடம் இத்திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்து செபித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2022, 17:03