தேடுதல்

Ta' Pinu அன்னை மரியா தேசிய திருத்தலம் Ta' Pinu அன்னை மரியா தேசிய திருத்தலம்  (AFP or licensors)

Ta' Pinu அன்னை மரியா தேசிய திருத்தலம்

Ta' Pinu அன்னை மரியா திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள், 1922ம் ஆண்டில் தொடங்கி, 1932ம் ஆண்டில் முடிக்கப்பட்டு, ஆலயமும் அர்ச்சிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான்

கோசோ தீவின் Għarb கிராமத்திலிருந்து ஏறத்தாழ 700 மீட்டர் தூரத்திலுள்ள Ta' Pinu அன்னை மரியா தேசிய திருத்தலம், முதலில் சிறிய ஆலயமாக, "கிறிஸ்தவரல்லாத அதாவது புறவினத்தைச் சேர்ந்த" ஒரு பிரபுக் குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்துள்ளது. எனவே இது, "புறவினத்தாரின்" ஆலயம் என அழைக்கப்பட்டது. 1575ம் ஆண்டில், திருத்தந்தை 13ம் கிரகரி அவர்களின் பிரதிநிதியாக மால்ட்டா தீவுகளைப் பார்வையிட்ட பியெத்ரோ துசினா என்பவர், இந்த ஆலயத்தின் மிக மோசமான நிலைமையைக் கண்டு அதை இடித்துவிடுமாறு கட்டளையிட்டார். இந்தப் பொறுப்பை, இப்போதைய கோசோ விண்ணேற்பு அன்னை மரியா பேராலயமாக விளங்கும், அப்போதைய பங்கு ஆலயப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். அப்பணியாளர்கள் அவ்வாலயத்தை இடிக்கத்தொடங்கியவுடனேயே, அவர்களில் ஒருவரின் கை முறிந்தது. இது அன்னை மரியாவின் தண்டனை என உணர்ந்து, அப்பணி நிறுத்தப்பட்டது. ஆதலால் கோசோ தீவில் துனிசா அவர்களின் கட்டளையின்பேரில் இடிக்கப்பட்ட ஆலயங்களில், இடிக்கப்படாமல் இருந்த ஒரே ஆலயம் இதுவாகும். 1598ம் ஆண்டில் Pinu Gauci என்பவர், இவ்வாலயத்தின் பரிபாலகர் ஆனார். அப்போது அவர் அவ்வாலயத்தின் பெயரை, "Ta` Pinu", அதாவது "பிலிப்பின்" ஆலயம் என மாற்றினார். 1611ம் ஆண்டில் Gauci அவர்கள், இவ்வாலயத்தின் சீரமைப்பிற்கு நிதி வழங்கியதோடு, பலிபீடக் கல், திருவழிபாடு ஆடைகள் போன்ற எல்லாவற்றிற்கும் உதவினார். Gauci அவர்கள், பீடத்தின் நடுவில் விண்ணேற்பு அன்னை மரியா ஓவியம் வைக்கப்படவும் உத்தரவிட்டார். இப்பணி 1619ம் ஆண்டில் Amadeo Perugino என்பவரால் முடிக்கப்பட்டது. 1833ம் ஆண்டில் அவ்வாலயம் வழியாகச் சென்ற Karmni Grima என்பவர், அருள்மிகப் பெற்ற மரியே என்ற செபத்தை மூன்று முறை சொல் என்ற குரலைக் கேட்டார். Francis Portelli என்பவர், விண்ணேற்பு அன்னை மரியா ஓவியத்திலிருந்து குரலைக் கேட்டுள்ளார். இவ்வாறு அவ்வாலயத்தில் தொடர்ந்து புதுமைகள் பல நடைபெற்றன. இப்போதைய திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள், 1922ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி தொடங்கி, 1932ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி முடிக்கப்பட்டு, ஆலயமும் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வாலயம், 61 மீட்டர் உயரமான மணிக் கோபுரத்தையும், 76 வண்ண ஜன்னல்களையும் கொண்டிருக்கிறது. இவ்வன்னை மரியா திருத்தலத்திற்கு, 1990ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், 2010ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரும் சென்று செபித்துள்ளனர். தற்போது இத்திருத்தலம், மால்ட்டா மக்களின் கலாச்சார கருவூலமாகவும் உள்ளது.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2022, 15:54