தேடுதல்

ஒலிவ மரத்திற்கு உரமிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் ஒலிவ மரத்திற்கு உரமிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

பூமி அழிவுறுவதை தடுப்பதற்கு உடன்பிறந்த உணர்வில் செயல்படுங்கள்

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதியன்று உலக அன்னை பூமி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுள் நமக்கு வழங்கியுள்ள பொதுவான இல்லமாகிய இப்பூமியில் வாழ்கின்ற நாம் எல்லாரும், அதனை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு, உடன்பிறப்புக்களாக, ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட 52வது உலக அன்னை பூமி நாளை மையப்படுத்தி, பூமிநாள் (#EarthDay) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி அழிக்கப்படுவதை நிறுத்துவதற்கும், இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அரசுகள், தொழிலதிபர்கள், குடிமக்கள் என எல்லாரும் தங்களின் பங்கை ஆற்றவேண்டும் என்றும், திருத்தந்தை அக்குறுஞ்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

உலக அன்னை பூமி நாளுக்கு திருத்தந்தை செய்தி (2021)

உலக அன்னை பூமி நாள்

பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதியன்று உலக அன்னை பூமி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த உலக நாளை 193 நாடுகள் சிறப்பித்து வருகின்றன. ஏப்ரல் 22, இவ்வெள்ளியன்று, “இயற்கையோடு நல்லிணக்கம்” என்ற தலைப்பில் 52வது உலக அன்னை பூமி நாள் சிறப்பிக்கப்பட்டது.  

1969ம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ நிறுவனம் நடத்திய கருத்தரங்கத்தில், உலக அன்னை பூமி நாள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

2வது டுவிட்டர் செய்தி

மேலும், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள மற்றொரு குறுஞ்செய்தியில், “அனைவருக்கும் நற்செய்தியின் மகிழ்வை எடுத்துச்செல்லும் ஆவலோடு நம் உலகின் தெருக்கள் வழியாகச் செல்கின்ற ஒரு திருஅவை எத்துணை அழகானது, உலகில் உயிர்த்த ஆண்டவரின் மகிழ்வை அறிவிக்கும்வண்ணம், பலநேரங்களில் நாம் அவரை அடைத்துவைத்திருக்கும் கல்லறையிலிருந்து கல்லைப் புரட்டுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2022, 15:02