தேடுதல்

உடன்பிறந்த உணர்வுடன் வரவேற்கும் மால்ட்டா மக்களுக்கு நன்றி

அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால் அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர் (தி.ப.28,1-2).

மேரி தெரேசா: வத்திக்கான்

ஏப்ரல் 06, இப்புதன் காலையில் உரோம் பெருநகரத்தில் மிதமான குளிரோடு கதிரவன் தன் கரங்களைப் பளிச்சென்று வீசிக்கொண்டிருந்தான். இந்த இதமான காலநிலையில், இப்புதன் காலையில் வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வியுரையைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு, இம்மாதம் 2,3 ஆகிய இரு தேதிகளில், மால்ட்டா தீவு நாட்டில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றி எடுத்துரைத்தார் திருத்தந்தை. இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையை முதலில் இத்தாலியத்தில் துவக்குவதற்குமுன், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து இரு வசனங்கள் வாசிக்கப்பட்டன. நாங்கள் தப்பிக் கரை சேர்ந்த பின், அந்தத் தீவின் பெயர் மால்தா என்று அறிந்துகொண்டோம். அத்தீவினர் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராயிருந்த காரணத்தால் அவர்கள் தீ மூட்டி எங்கள் அனைவரையும் அருகே அழைத்துச் சென்றனர் (தி.ப.28,1-2). அதற்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையை ஆரம்பித்தார்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில், திருத்தூதுப் பயணமாக மால்ட்டாவுக்குச் சென்றேன். இப்பயணம், சில காலத்திற்குமுன்னர் திட்டமிடப்பட்டது. மால்ட்டா, மத்தியதரைக் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு தீவாக இருந்தபோதிலும், பலர் இந்நாடு பற்றி அறிந்திருக்கவில்லை. இத்தீவு மக்கள், மிகப் பழங்காலத்திலேயே நற்செய்தியைப் பெற்றனர். ஏனெனில், திருத்தூதர் பவுல், இத்தீவின் கடற்கரைகளுக்கு அருகில் கப்பல் சேதத்தில் சிக்கியபோது, அவரும், அவரோடு கப்பலில் பயணம் மேற்கொண்ட 270க்கும் மேற்பட்ட மக்களும் அற்புதமாய் காப்பாற்றப்பட்டனர். மால்ட்டா மக்கள், இவர்கள் அனைவரையும் “மிகுந்த மனிதநேயத்துடன்” (28:2) வரவேற்றனர் என்று திருத்தூதர் பணிகள் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. “மிகுந்த மனிதநேயத்துடன்” என்பதையே, எனது திருத்தூதுப் பயணத்தின் தலைப்பாகவும் தெரிவுசெய்தேன். புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய பாதையை மட்டுமல்ல, இந்த உலகம், உடன்பிறந்த உணர்வை மிகத்தாராளமாக வெளிப்படுத்தி, அவ்வுணர்வு கொண்டதாக அது அதிகமதிகமாக மாறவேண்டும் என்பதற்காகவும், அனைவரையும் அச்சுறுத்துகின்ற ஒரு “கப்பல் சேதத்திலிருந்து” நாம் காப்பாற்றப்படும்படியாகவும் இத்தலைப்பைத் தேர்ந்துகொண்டேன். இந்நேரத்தில், மால்ட்டாவில், மிகுந்த மனத்தாராளத்தோடு எனக்கு இனிய வரவேற்பளித்த அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், ஆயர்கள், கத்தோலிக்கர், மற்றும், ஏராளமான தன்னார்வலர்களுக்கு மீண்டும் நன்றி சொல்கிறேன். திருத்தூதர் பவுல், மற்றும், அவரோடு கப்பல் பயணம் மேற்கொண்டவர்களுக்கு, மால்ட்டா மக்கள் காட்டிய வரவேற்பு, மற்றும், பிறரன்பு ஆகிய உணர்வுகள், இன்று நிலவும் சிக்கலான புலம்பெயர்ந்தோர் விவகாரத்திற்குப் பதிலுறுக்க நம்மைத் தூண்டவேண்டும். இது வெறும் அவசரகால விவகாரம் மட்டுமல்ல, நம் காலத்தின் ஓர் அடையாளமும் ஆகும். புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதில் மால்ட்டா முன்னிடத்தில் உள்ளது என்பதை, “23ம் யோவான் அமைதிக் கூடம்” என்ற மையத்தில் பார்த்தேன். புலம்பெயர்ந்தோர், தங்களோடு தனித்துவமிக்க கதைகளைக் கொணர்கின்றனர், மற்றும், மற்றவருக்கு வழங்கவல்ல கொடைகளின் வளத்தையும் கொண்டிருக்கின்றனர் என்பது, அம்மையம் நமக்கு நினைவுபடுத்துகிறது. மால்ட்டாவில் எப்போதும் தனித்து விளங்கும், மறைப்பணி உணர்வு புதுப்பிக்கப்படவேண்டும் என்று, புனித பவுலின் அடிநிலக் கெபியில் செபித்தேன். கோசோவில், Ta’ Pinu அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் நடைபெற்ற திருவழிபாடு, அன்னை மரியாவிடம் மால்ட்டா மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த பக்தியைப் பிரதிபலித்தது. இவ்வன்னை, வாழ்க்கைக்கு முக்கியமானவற்றுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். அதாவது, சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்துவிடமும், நம் மனிதக் குடும்பத்திற்குத் தேவையான கடவுளின் இரக்கம்நிறை அன்பின் மீட்பளிக்கும் செய்தியோடு நற்செய்தியின் மகிழ்ச்சிக்கும், அன்னை மரியா நம்மை இட்டுச் செல்கிறார். மால்ட்டாவையும், அம்மக்களையும், வளமை மற்றும், அமைதியால் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.    

புதன் மறைக்கல்வியுரை 060422
புதன் மறைக்கல்வியுரை 060422

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையை மால்ட்டா திருத்தூதுப் பயணத்திற்கு அர்ப்பணித்து அந்நாட்டிற்காக இறைவனை வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், உக்ரைன் நாட்டின் புச்சா நகரிலிருந்து வந்த உக்ரைன் தேசியக் கொடியைத் தூக்கிக் காண்பித்தபடி பேசிய திருத்தந்தை, அந்நகரில் இடம்பெற்றுள்ள படுகொலைகள் குறித்த ஆழ்ந்த வேதனையை வெளியிட்டு, அந்நாட்டில் போர் முடிவுக்கு வரவேண்டும், மற்றும், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்தார். மேலும், உக்ரைன் புலம்பெயர்ந்தோரை மனத்தாராளத்தோடு வரவேற்று, மிகச்சிறந்த முறையில் உதவுகின்ற போலந்து நாட்டு மக்களுக்கு திருத்தந்தை நன்றி கூறினார். அதற்குப் பின்னர், நம் தவக்காலப் பயணம், தூய ஆவியாரின் அருளால் தூய்மைப்படுத்தப்பட்ட, மற்றும், புதுப்பிக்கப்பட்ட இதயங்களோடு உயிர்ப்பைக் கொண்டாடுவதற்கு நம்மை அழைத்துச் செல்வதாக.என்றுரைத்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2022, 14:01