தேடுதல்

விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு 

விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு

ஒவ்வொரு போரும், எப்போதும் ஓர் அநீதியிலிருந்து துளிர்விடுகின்றது. ஆயுதங்களை வாங்குவதற்காக முதலீடு செய்பவர்கள், தங்களின் பாதுகாப்புக்காக இவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்ட்டாவிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய ஒன்றரை மணிநேர விமானப் பயணத்தின்போது, தன்னோடு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு ஊடகவியலாளர்கள் 74 பேரின் பணிகளுக்கு நன்றி கூறியதோடு, அவர்களில் சிலரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். மால்ட்டாவில், இஞ்ஞாயிறன்று, புனித ஜார்ஜ் பிரேகா அவர்களின் கல்லறை அமைந்துள்ள சிற்றாலயம் சென்று செபித்து மால்ட்டா மக்களை வியப்பில் ஆழ்த்தியது, இத்திருத்தூதுப் பயணம் பற்றிய நினைவுகள், திருத்தந்தையின் உடல்நலம் போன்ற கேள்விகளை, மால்ட்டா தொலைக்காட்சி ஊடகவியலாளர் Andrea Rossitto என்பவர் முதலில் திருத்தந்தையிடம் கேட்டார்.

திருத்தந்தையின் உடல்நலம், புலம்பெயர்ந்தோர்  

எனது உடல்நலம் அவ்வப்போது மாறுபடுகிறது. முழங்காலில் வலி. இரு வாரங்களுக்குமுன் ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தேன், இப்போது பரவாயில்லை, எனினும், இந்த வயதில் உடல்நிலையில் நிலவும் இந்த விளையாட்டு எப்படிப்போய் முடியும் என்று தெரியவில்லை, நன்றாக இருக்கும் என நம்புவோம். மேலும், இத்திருத்துப் பயணத்தில் மால்ட்டா மற்றும், கோசோ தீவுகளின் மக்களின் மிகுந்த ஆர்வம் என்னை மகிழச்செய்தது.  மொத்தத்தில் இப்பயணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது, அதேநேரம், புலம்பெயர்ந்தோர் பிரச்சனையையும் பார்த்தேன் கிரேக்கம், சைப்ரஸ், மால்ட்டா, இத்தாலி மற்றும் இஸ்பெயின் ஆகிய நாடுகள், என்று ஆப்ரிக்கா மற்றும், மத்தியக் கிழக்குக்கு அருகில் உள்ளன. ஆதலால் இவர்கள், இந்நாடுகளுக்கு வருகின்றனர். இதில் பிரச்சனை என்னவெனில், இவர்களில் எத்தனை பேர் இந்நாடுகளில் தங்கவேண்டும் என்பதை ஒவ்வொரு நாடும் கூறவேண்டியுள்ளது. ஐரோப்பா, புலம்பெயர்ந்தோரால் அமைக்கப்பட்டுள்ள கண்டம் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். இம்மக்கள் குறித்த அனைத்துப் பிரச்சனைகளையும், இவர்களை மிகத் தாராளமாக வரவேற்கும் மால்ட்டா உள்ளிட்ட அருகாமை நாடுகளிடம் சுமத்தக்கூடாது.  புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படவேண்டும். மால்ட்டாவில் புலம்பெயர்ந்தோர் மையத்தில் அவர்களைச் சந்தித்தபோது, அம்மக்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான துன்பங்கள் பற்றி அறிந்தேன். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்தார்.

விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு
விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு

உக்ரைன் திருத்தூதுப் பயணம் குறித்து திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், உக்ரைனின் கீவ் நகருக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்குள்ள வாய்ப்பு குறித்து Jorge Antelo Barcia என்பவர் (RNA) கேள்வி கேட்டார். கீவ் நகருக்கு அருகிலுள்ள Bucha கிராமத்திலிருந்து இரஷ்யப் படைகள் சென்றபின்னர், அங்குத் தெருக்களில் பல மனித உடல்கள் கிடந்தன. அவற்றில் சில உடல்கள் தூக்கிலிடப்பட்டதுபோன்று கைகள் கட்டப்பட்டுக்கிடந்தன என்று இஞ்ஞாயிறு செய்திகள் வெளியாகியுள்ளன என்று கூறியதைக் கேட்ட திருத்தந்தை, இத்தகவலை அளித்ததற்கு நன்றி, போர் எப்போதுமே, மனிதமற்ற கொடூரமான ஒரு செயலாகும். இது மனித உணர்விற்கு முரணானது. கிறிஸ்தவர் என்ற முறையில் அல்ல, மாறாக, மனிதர் என்ற வகையில் இதைச் சொல்கிறேன். இது காயினின் உணர்வாகும். போரை நிறுத்துவதற்கு ஆற்ற இயன்ற அனைத்தையும் திருப்பீடம், குறிப்பாக தூதரக வழிகளில், கர்தினால் பரோலின் அவர்களும், பேராயர் காலகர் அவர்களும் செய்துவருகின்றனர். விவேகம், இரகசியம் போன்ற காரணங்களுக்காக, இவை அனைத்தையும் பொதுப்படையாகக் கூற இயலாது. மேலும், கீவ் நகருக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்குரிய அழைப்பிதழ் எனது மேஜையில் உள்ளது. உக்ரைனுக்கு கர்தினால் Krajewski அவர்களை அனுப்புமாறு, போலந்து அரசுத்தலைவர் என்னிடம்கேட்டபோது அவரை அனுப்பினேன். அவர் என்னையும் வருமாறு கூறினார். ஆனால் எனது உக்ரைன் பயணம் நடைபெறுமா? சரியானதுதானா, அங்கு நான் போகவேண்டுமா என்பதுதான் தெரியவில்லை என்று திருத்தந்தை கூறினார்.

உக்ரைனில் போரை நிறுத்துவது குறித்து திருத்தந்தை

திருத்தந்தை உக்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு ஆவலாக இருப்பதைக் கூறியவுடன், அமெரிக்க இதழின் Gerry O'Connell  என்பவர் திருத்தந்தையிடம், மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில் பலநேரங்களில் போர் பற்றிக் கூறினீர்கள், போர் தொடங்கியதற்குப்பின், இரஷ்ய அரசுத்தலைவர் புடினிடம் பேசியுள்ளீர்கள், இன்று அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று கேட்டார். அக்கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, இருதரப்பு அதிகாரிகளிடம் நான் பேசியிருப்பதில் எதுவுமே இரகசியம் கிடையாது. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களுடன் நான் பேசியபிறகு, நாங்கள் உரையாடியது குறித்து, நல்லதோர் அறிக்கையை அவர் வெளியிட்டார். இரஷ்ய அரசுத்தலைவர் கடந்த ஆண்டு இறுதியில் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது அவரிடம் பேசினேன். உக்ரைன் அரசுத்தலைவரிடம் இருமுறை பேசியுள்ளேன். போர் தொடங்கிய முதல் நாளன்று உரோம் நகரிலுள்ள இரஷ்யத் தூதரகம் சென்று அதிகாரிகளிடம் பேசி, போர் குறித்த எனது உணர்வுகளை வெளிப்படுத்தினேன். உக்ரைனின் கீவ் பேராயர் Shevchuk அவர்களிடமும் பேசியுள்ளேன். கீவ் நகரில் இருந்து இப்போது Odessaவில் இருக்கும் உங்களைப் போன்ற செய்தியாளர் Elisabetta Piqué என்பவரிடம், இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை பேசி வருகிறேன். போரில் பலியாகியுள்ள பத்திரிகையாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். துணிச்சலோடு பணியாற்றும் அவர்களை நாம் மறக்கக் கூடாது. மேலும், புடின் அவர்களோடு பேசுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தால், எல்லா அதிகாரிகளிடமும் கூறியதையே அவரிடமும் கூறுவேன், இதில் இரட்டைவேடம் என்பது கிடையாது, நான் எப்போதும் ஒரே மாதிரியாகவே பேசுவேன். உங்களது கேள்வியில், நியாயமான மற்றும், அநீதியான போர்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக உணர்கிறேன். இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் தொடர்ந்து பேசினார்.   

போர் குறித்த சிந்தனைகள்

விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு
விமானப் பயணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு

ஒவ்வொரு போரும், எப்போதும் ஓர் அநீதியிலிருந்து துளிர்விடுகின்றது. இது அமைதி ஏற்படுவதற்குரிய வழிமுறை அல்ல. எடுத்துக்காட்டாக, ஆயுதங்களை வாங்குவதற்காக முதலீடுகள் செய்வது. தங்களின் பாதுகாப்புக்காக இவ்வாறு செய்வதாக சிலர் கூறுகின்றனர். இதுவே போரின் வழிமுறை. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றபோது, இனிமேல் ஒருபோதும் போர் வேண்டாம், அமைதியே வேண்டும் என்றே எல்லாரும் கூறினர். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டபின், அமைதியை உருவாக்க, ஆயுதங்களைக் களைவது குறித்த நன்மனம் அதிகம் உருவானது. இப்போர் முடிவுற்று எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள இவ்வேளையில், அனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். காந்தி போன்ற மாமனிதர்களும், மற்றவர்களும் அமைதியை நிலைநாட்டும் முறைகளைக் கூறியுள்ளனர். ஆனால், மனித சமுதாயமாகிய நாம், பிடிவாதமாக இருக்கிறோம். காயின் உணர்வுகளோடு, போர்கள் மீது நாம் காதல்கொண்டுள்ளோம். 2014ம் ஆண்டில் Redipugliaவுக்குச் சென்றபோது இறந்தவர்களின் பெயர்களைப் பார்த்து உண்மையிலேயே மனகசப்பால் அழுதேன். அதற்குப்பின்னர் இறந்தோர் நினைவு நாளின்போது Anzioவில் திருப்பலி நிறைவேற்றினேன். அங்கு கல்லறைகளில் இறந்தவர்களின் பெயர்களை வாசித்தபோது, அவர்கள் எல்லாரும் இளையோர் என அறிந்து அங்கும் கண்ணீர் வடித்தேன். நாம் இக்கல்லறைகளை நினைத்து கண்ணீர் சிந்தவேண்டும். பிரான்சின் வடமேற்கிலுள்ள நார்மாண்டியில் உலகப் போர் நினைவுகூரப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு அரசுத்தலைவர்களில் எவரும், அக்கடற்கரைகளில் இறந்த ஏறத்தாழ முப்பதாயிரம் இளையோர் பற்றிப் பேசியதாக நினைவில்லை. அது எனக்கு வியப்பைத் தந்தது. நாம் ஒருபோதும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதில்லை. நாம் எல்லாருமே குற்றவாளிகள். ஆண்டவரே எம்மீது இரக்கம் வையும். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 36வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாகிய மால்ட்டா நாட்டுத் பயணத்தை முடித்துத் திரும்பும் விமானப் பயணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில்களை அளித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2022, 15:39