தேடுதல்

திருத்தந்தையின் 36வது வெளிநாட்டு திருத்தூதுப் பயண நிறைவு

மத்தியதரைக் கடலின் மத்தியில், மின்னிக்கொண்டிருக்கும் சிறிய தீவு நாடான மால்ட்டாவின் மக்கள், சிறந்த மனிதநேயத்தைக் கொண்டிருக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள இரு தீவுக் குடியரசுகளில் ஒன்று சைப்ரஸ், மற்றொன்று மால்ட்டா. ஏப்ரல் 02, 03, அதாவது இச்சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை,  மால்ட்டா குடியரசில் மேற்கொண்டு வத்திக்கான் திரும்பியுள்ளார். “அவர்கள், எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்” (காண்க.தி.பணி.28:2) என்ற தலைப்பில் நடைபெற்ற இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகளில், வரவேற்பு, பாதுகாப்பு, ஊக்குவிப்பு, புலம்பெயர்ந்தோர் ஒருங்கிணைப்பு போன்ற சொல்லாடல்களை அடிக்கடி பயன்படுத்தி, அவை குறித்த தன் எண்ணங்களை திருத்தந்தை வெளிப்படுத்தினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு நாள்களிலும் உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் அனைத்துவிதமான போர்களுக்கு எதிராகப் பேசினார், உலகின் அமைதிக்காக இறைவேண்டல் செய்தார், உலக நாடுகள், புலம்பெயர்ந்தோரை வரவேற்குமாறு கேட்டுக்கொண்டார், மற்றும், இயேசு நம் மத்தியில் வியத்தகு செயல்களை ஆற்றுகிறார் என்பதை மால்ட்டா மக்களுக்கு நினைவுபடுத்தி அவர்களை ஆசீர்வதித்தார். மத்தியதரைக் கடலின் மத்தியில், மின்னிக்கொண்டிருக்கும் குட்டித் தீவு நாடான மால்ட்டாவின் மக்கள், சிறந்த மனிதநேயத்தைக் கொண்டிருக்கின்றனர், அம்மக்கள், கத்தோலிக்கத் திருஅவையின் கருவூலம், சொத்து என்றெல்லாம் திருத்தந்தை அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தார்.

மால்ட்டாவிற்குப் பிரியாவிடை
மால்ட்டாவிற்குப் பிரியாவிடை

ஏப்ரல் 03, இஞ்ஞாயிறு மாலை ஆறு மணியளவில், இப்பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, மால்ட்டா குடியரசின் தலைநகர் வலேட்டாவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மால்ட்டா விமானத்தில் உரோம் நகருக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மால்ட்டா குடியரசின் அரசுத்தலைவர் ஜார்ஜ் வில்லியம் வெல்லா அவர்கள் உட்பட முக்கிய அரசு மற்றும், தலத்திருஅவை அதிகாரிகள், நன்றியோடு வழியனுப்பி வைத்தனர். ஞாயிறு இரவு ஏறத்தாழ 8.45 மணிக்கு உரோம் வந்துசேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில் உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவுக்கு நன்றி மலர்கள் சூடிச் செபித்தார்.

மேரி மேஜர் பெருங்கோவிலில் நன்றி இறைவேண்டல்
மேரி மேஜர் பெருங்கோவிலில் நன்றி இறைவேண்டல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2022, 15:49