மால்ட்டா நாட்டிற்கான திருத்தந்தையின் முதல் உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 2, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்டாவின் வலேட்டா தீவில் அரசுத்தலைவர், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் தூதரகப் படையினரைச் சந்தித்து நிகழ்த்திய உரை.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முன்னோர்கள், உரோமையை நோக்கிய திருத்தூதர் பவுலின் பயணத்தில் மிகுந்த கனிவுடன் நடந்துகொண்டனர். இப்போது அத்தகையதொரு அனுபவத்தை நானும் பெறுகின்றேன். மால்ட்டா அருமையானதொரு புவியியல் இயற்கைச் சூழலைக் கொண்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் செல்வாக்குகளைப் பெற்று, உயிர்ச்சக்தி, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் அழகு ஆகியவற்றின் மையமாக மால்ட்டா திகழ்கிறது
சமுதாயத்தின் இன்றியமையாதத் தூண்கள்
நான்கு திசைகளிலிருந்தும் மால்ட்டா தீவை நோக்கி வீசும் காற்றை மையப்படுத்தி எனது உரையைத் தொடங்குகின்றேன். முதலாவதாக, மால்ட்டா தீவுகளில் காற்று பெரும்பாலும் வடமேற்கிலிருந்து வீசுகிறது. இது வடக்கு ஐரோப்பாவை நினைவுபடுத்துகிறது, குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இல்லமானது, அமைதியைப் பேணுவதில் ஒன்றுபட்ட ஒரு பெரிய குடும்பத்தின் இருப்பிடமாக கட்டப்பட்டுள்ளது என்றார். உங்கள் தேசிய கீதம் பாடப்படும் போதெல்லாம், ஒற்றுமையும் அமைதியுமே நீங்கள் கடவுளிடம் இறைஞ்சும் கொடைகளாக உள்ளன. அமைதி ஒற்றுமையிலிருந்து எழுகிறது, அது நாம் ஒருவருக்கொருவர் இணைந்து வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக்கிறது. நீதி, நேர்மை, கடமை உணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை முதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சமுதாயத்தின் இன்றியமையாதத் தூண்களாக அமைந்துள்ளதால், நீங்கள் எப்போதும் சட்டப்பூர்வ மற்றும் வெளிப்படைத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். காரணம், இதுவே ஊழல் மற்றும் குற்றத்தை ஒழிக்க உதவும் ஒளியின் தூண்களாக செயல்படுகின்றன.
மரியாதை மற்றும் நல்லிணக்கம்
இரண்டாவதாக, வடக்குக் காற்று பெரும்பாலும் மேற்கிலிருந்து வீசும் காற்றுடன் கலக்கிறது. இது சாந்தமான ஒற்றுமை மற்றும் கருத்தியல் காலனித்துவ வடிவங்களுக்கு அடிபணியாமல், கடந்த காலத்தின் நினைவைப் பாதுகாத்து, தலைமுறையினரிடையே மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. அனைத்து உறுதியான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது, ஒவ்வொரு ஆணின் மற்றும் பெண்ணின் வாழ்க்கைக்கும் மனித மாண்பிற்குமான மரியாதை ஆகும். அவ்வித்தில், வாழ்வை அரவணைத்து பாதுகாப்பதில் மால்ட்டா மக்களின் அர்ப்பணிப்பை நான் அறிவேன். ஏற்கனவே, திருத்தூதர்களின் செயல்களில், இந்தத் தீவின் மக்கள் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அறியப்பட்டுள்ளனர். ஆகவே, வாழ்க்கையை அதன் தொடக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்து பாதுகாக்கவும், அதேவேளையில், ஒவ்வொரு கணமும் ஒதுக்கி வைக்கப்படுவதிலிருந்தும், கவனிப்பு மற்றும் அக்கறையின்மையிலிருந்தும் அதைப் பாதுகாக்கவும் உங்களை நான் ஊக்குவிக்கிறேன்.
தேவையில் இருப்போருக்குப் பணி
மூன்றாவதாக, தெற்கிலிருந்து வீசும் காற்றை மையப்படுத்தி எனது சிந்தனைகளைத் தொடர்கிறேன். மால்டா என்றால் "பாதுகாப்பான துறைமுகம்" என்று பொருள்படுகிறது. இப்போது புலம்பெயர்தல் பிரச்சனை பெரிதாக உருவெடுத்து வருகிறது. புலம்பெயர்தல் பிரச்சினையின் சிக்கலான தன்மையை சரியாகக் கையாள வேண்டும். புலம்பெயர்தல் நிகழ்வு என்பது ஒரு தற்காலிக சூழ்நிலை அல்ல, ஆனால், அது நம் காலத்தின் அடையாளம். கடந்தகால அநீதி, சுரண்டல், காலநிலை மாற்றங்கள் மற்றும் துயரமான மோதல்கள் ஆகியவற்றின் சுமையை அது கொண்டு வருகிறது, அதன் விளைவுகள் இப்போது உங்களை உணர வைக்கின்றன. கப்பல் விபத்திலிருந்து தப்பிய திருத்தூதர் பவுலின் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த நாடு, மனிதநேயம் முதன்மையானது என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. பவுல் வாழ்ந்து அதனை பறைசாற்றிய நற்செய்தியின் பெயரால், நம் இதயங்களைத் திறந்து, தேவையில் இருக்கும் அடுத்திருப்போருக்குப் பணியாற்றுவதன் வழியாக அதன் அழகை மீண்டும் கண்டுபிடிப்போம்.
போரினால் சிதைந்து வரும் மனிதகுலத்தை மீட்பது
இறுதியாக, கிழக்கிலிருந்து வீசும் காற்றை மையப்படுத்திய எனது சிந்தனைகளைக் கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து, அதாவது சூரியன் உதிக்கும் நிலத்திலிருந்து, இப்போது போரின் இருண்ட நிழல்கள் பரவியுள்ளன. மரணம், அழிவு மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டு வரும் இந்தப் போர்க் காற்று, பல மக்களின் வாழ்க்கையின் மீது சக்திவாய்ந்ததாக வீசி நம் அனைவரையும் பாதித்துள்ளது. இருப்பினும், இப்போது மனிதகுலத்தின் மீது வீழ்ந்திருக்கும் இந்த இருளானப் போரில், அமைதியின் கனவை மங்க விடாமல் பாதுகாப்போம். மத்தியதரைக் கடலின் இதயத்தில் அற்புதமாக ஒளிரும் மால்டா, பிறர்நலப் பணியாற்றுவதில் எங்களுக்கு ஒரு உட்தூண்டுதலாக அமைய முடியும், ஏனென்றால், போரினால் சிதைந்த மனிதகுலத்தின் முகத்தில் அழகை மீட்டெடுப்பது இன்று அவசரமானத் தேவையாக இருக்கின்றது.
ஆகவே, அமைதிக்கான மக்களின் ஏக்கத்தை உணர ஒருவருக்கொருவர் உதவுவோம். இன்னும் விரிவுபடுத்தப்பட்ட உரையாடலுக்கு அடித்தளமிட பணியாற்றுவோம், ஆயுதக்குறைப்பு என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைதியை ஏற்படுத்த அழைப்புவிடுக்கும் அனைத்துலக கருதரங்கங்களுக்கு மீண்டும் செல்வோம். மேலும் ஆயுதங்களுக்கு ஒதுக்கப்படும் அதிகமான நிதியை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படும் மேலான நிலையை உருவாக்கும் முனேற்றப் பாதையை நோக்கிப் பயணிப்போம்.
அமைதியின் பெயராக விளங்கும் கடவுளின் துணையில், மத்தியதரைக் கடலின் இதயமாக விளங்கும் மால்ட்டா, நம்பிக்கையின் இதயத் துடிப்பாகச் செயல்படுவதிலும், வாழ்க்கையில் அக்கறை மற்றும் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதிலும், அமைதிக்காக ஏங்குவதிலும் தொடர்ந்து வளரட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்