தேடுதல்

ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்  

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்

ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 2008ம் ஆண்டில் மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, இந்நாள்வரை மீரட் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் (Francis Kalist) அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 19, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

1957ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, தமிழகத்தின், கோட்டாறு மறைமாவட்டம் ரீத்தாபுரம் என்ற ஊரில் பிறந்த ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள், 1982ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

2008ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மீரட் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார், ஆயர் பிரான்சிஸ் கலிஸ்ட்.

1776ம் ஆண்டில் பாண்டிச்சேரி மறைத்தளம் உருவானது. பின்னர், அது 1836ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று, கிழக்கு கடற்கரை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவானது. 1886ம் ஆண்டில், பாண்டிச்சேரி மறைவட்டம், உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1953ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, இது, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891ஆக இருந்தது.

பாண்டிச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக, 17 ஆண்டுகள் பணியாற்றி 2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் ஓய்வுபெற்ற பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், 2021ம் ஆண்டு மே 4ம் தேதி, கோவிட்-19 பெருந்தொற்றினால் இறையடி சேர்ந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 March 2022, 15:41