தேடுதல்

திருத்தந்தையைச் சந்திக்கும் யூதக்குழுப் பிரதிநிதிகள் திருத்தந்தையைச் சந்திக்கும் யூதக்குழுப் பிரதிநிதிகள் 

திருத்தந்தைக்கு நன்றி கூறிய பிரிட்டனின் யூதக்குழுப் பிரதிநிதிகள்

பிப்ரவரி 16, புதன்கிழமையன்று, புதன் மறைக்கல்வி உரைக்குப் பின் பிரிட்டனின் யூதப் பிரதிநிதிகள் இருவர் திருத்தந்தையை சந்தித்து நன்றி கூறினர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 16, புதன்கிழமையன்று, திருத்தந்தை வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில் கலந்துகொண்ட பிரிட்டனின் யூதப் பிரதிநிதிகள் இருவர் திருத்தந்தையை சந்தித்து நன்றி கூறினர்.  

வத்திக்கான் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த விசுவாசிகளுக்குப் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய பின், பிரிட்டன் நாட்டின் யூதப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் Marie van der Zyl,  மற்றும் தலைமை நிர்வாகி Michael Wegier இருவரும் திருத்தந்தையை சந்தித்தனர்.   

இந்தச் சந்திப்பின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு பரிசுப் பொருள் ஒன்றை அவர்கள் வழங்கியதோடு, மதங்களுக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்துவதற்கும், யூத விரோதப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கும் அவர் ஆற்றிவரும் நற்பணிகளுக்காக உளம்நிறைந்த பாராட்டுக்களையும் தெரிவித்தனர் என்று வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

உலக உடன்பிறந்த உணர்வுநிலை குறித்த திருத்தந்தையின் செய்திக்காகவும், கத்தோலிக்கக் கிறித்தவர், மற்றும் யூத இன மக்களின் நல்லுறவுக்கான அவரது முயற்சிகளுக்காகவும், புகழ்பெற்ற பிரிட்டன் யூத வரலாற்றாசிரியர் Cecil Roth எழுதி, முதல் கையெழுத்திட்ட “History of the Great Synagogue” என்ற நூலை திருத்தந்தைக்கு நினைவு பரிசாக இருவரும் வழங்கினர் என்றும் வத்திக்கான் செய்திதுறை மேலும் தெரிவிக்கிறது.  

தாங்கள் பணியாற்றுகின்ற யூத அமைப்பின் செயல்பாடுகள், குறிப்பாக யூத வெறுப்பினைக் களைந்து எல்லா மக்களுடனும் இணக்கமாக வாழ்வதற்காக அவர்கள் ஆற்றிவரும் பணிகள், மற்றும் எடுக்கும் புதிய முயற்சிகள் குறித்தும்  தாங்கள் வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 27 வியாழனன்று, அனைத்துலக நாத்சி படுகொலைகள் நினைவு தினத்தை முன்னிட்டு செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மில்லியன் கணக்கான யூதர்கள், பல்வேறு நாட்டவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்கள் கொன்றழிக்கப்பட்டதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும்,  ஐரோப்பாவின் ஏறத்தாழ 6 மில்லியன் யூதர்கள், அல்லது கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு யூத மக்கள், நாத்சி ஆட்சியின் கைகளில் இனப்படுகொலை செய்யப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2022, 15:09