தேடுதல்

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுடன் திருத்தந்தை

"வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே பாலங்கள் அமைத்தல்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைந்த சந்திப்பு" என்ற தலைப்பில், பிப்ரவரி 24ல் மெய்நிகர் கூட்டம்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க நாடுகளில் கல்விபயிலும் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுடன், பிப்ரவரி 24, வருகிற வியாழனன்று முதன்முறையாக நேரடியாக உரையாடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்காகோ இலொயோலா பல்கலைக்கழகமும், திருப்பீடத்தில் பணியாற்றும், இலத்தீன் அமெரிக்க பாப்பிறை அமைப்பும் இணைந்து நடத்தும் மெய்நிகர் கலந்துரையாடல் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடம், திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம்பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வார். 

"வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே பாலங்கள் அமைத்தல்: திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைந்த சந்திப்பு" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மெய்நிகர் கலந்துரையாடல், திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தின் முக்கியத்துவத்தை, இளையோர் புரிந்துகொள்வதற்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்துள்ள மக்கள், மற்றும், சிறார் ஆகியோரின் நிலைகளை எடுத்துரைத்து, சமுதாயத்தின் விளிம்புநிலையில் வாழ்வோருக்கு சமுதாய நீதி கிடைக்கும் வழிகளைத் தேடுமாறும், பொதுநலனுக்காக உழைக்குமாறும் பல்கலைக்கழக மாணவர்களை, திருத்தந்தை ஊக்கப்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24, வருகிற வியாழனன்று அமெரிக்க நேரம் பகல் 12 மணிக்கு அதாவது, இந்திய நேரம், இரவு 11.30 மணிக்கு, இணையம்வழி நடைபெறும் இந்த மெய்நிகர் நிகழ்வு ஆரம்பமாகும். இந்நிகழ்வு, இஸ்பானியம், ஆங்கிலம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளில் நேரடியாக மொழிபெயர்க்கப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 February 2022, 14:06