தேடுதல்

அருள்பணியாளர் Richard Masivi அருள்பணியாளர் Richard Masivi  

காங்கோ குடியரசில் கொல்லப்பட்ட பணியாளருக்காக செபித்த திருத்தந்தை

பிப்ரவரி 16, புதன்கிழமையன்று, தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு காங்கோ குடியரசில் கொல்லப்பட்ட அருள்பணியாளர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 16, புதன்கிழமையன்று, தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு பிப்ரவரி 2ம் தேதி காங்கோ குடியரசில் கொல்லப்பட்ட Clerics Regular Minor துறவு சபையைச் சார்ந்த அருள்பணியாளர் Richard Masivi, அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு Order of Clerics Regular Minor  ​​துறவு சபையினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தத்துடன், அருள்பணியாளர் Richard Masivi, பிப்ரவரி 2 அன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில், அர்ப்பண வாழ்வு நினைவு தினத் திருப்பலியைக் கொண்டாடிய பிறகு கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணியாளர் Richard ஒரு கொடூரமான மற்றும் இழிவான வன்முறைச் செயலுக்கு பலியாகியுள்ளார் என்றும், மேலும், அவரது மரணத்தால், இத்தேசத்திலுள்ள அவர் சார்ந்த துறவு சபையினரும், கிறிஸ்தவச் சமூகமும்  மனம் தளர்ந்துவிடவேண்டாம் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ், இத்தகைய துயரத்தின் மத்தியிலும் நல்ல மேய்ப்பரான இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நன்மை மற்றும் சகோதரத்துவத்தின் பணியாளர்களாகவும், சாட்சிகளாகவும் விளங்கிடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.   

36 வயது நிரம்பிய அருள்பணியாளர் Masivi அவர்கள், பிப்ரவரி 2, திங்கள்கிழமையன்று Vusesa எனுமிடத்தில் Kirumbaவுக்கும் Mighobweக்கும் இடையே ஆயுதமேந்திய நபர்களால் சுடப்பட்டு இறந்தார்.

Kanyaboyonga. என்னுமிடத்தில் அர்ப்பண வாழ்வு தினத் திருப்பலியை நிறைவேற்றிவிட்டு தனது பங்குத் தளத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவர் பணியாற்றிக் கொண்டிருந்த Butombo-Beni மறைமாவட்டத்தின் ஆயரான Melchisédec Sikuli Paluku அவர்களும் இப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், நீதி விசாரணை வேண்டி அந்நாட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2022, 15:39