தேடுதல்

மூன்று ஞானியர் வழிபடுவதைக் காட்டும் ஓவியம் மூன்று ஞானியர் வழிபடுவதைக் காட்டும் ஓவியம்  

கிறிஸ்தவ தொல்லியல் துறையை ஊக்குவிக்கும் திருத்தந்தை

வத்திக்கானின் திருப்பீடக் கல்விக் கழகம் நடத்திய அவற்றின் 25வது பொது அமர்விற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

செல்வராஜ் சூசைமாணிக்கம்

பிப்ரவரி 1, செவ்வாயன்று, வத்திக்கானின் திருப்பீடக் கல்விக் கழகம் நடத்திய அதன் 25வது பொது அமர்விற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

திருப்பீடத்தின் தொல்லியல் துறை (Archaeology), மற்றும் Cultorum Martyrum ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாண்டிற்கான கூட்டம், பிரபலமான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான Giovanni Battista de Rossi அவர்களின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இவர் நவீன கிறிஸ்தவ தொல்பொருளியலின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.

 கலாச்சாரத்திற்கான திருப்பீடத்தின் ஆட்சி மன்றக்குழு, மற்றும் கல்விக்கழகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குழு அமைப்பின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi அவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள தனது கடிதத்தில், சிறப்புத் துறைகளில் மட்டுமல்லாமல், இறையியல் மற்றும் கிறிஸ்தவத்தின் வரலாறு கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களிலும், கிறிஸ்தவ தொல்பொருள் ஆய்வை மேம்படுத்துவதற்கும் டி ரோஸ்ஸியின் எடுத்துக்காட்டான வாழ்வு மீண்டும் முன்மொழியப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹங்கேரிய கல்விக்கழகத்தின் உறுப்பினரான பேராசிரியர் Gyözö Vörös அவர்களின் வழிகாட்டுதலில் The Machaerus Archaeological Excavations என்ற ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டு தங்கப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் கிறிஸ்தவ நினைவுச் சின்னங்கள் பற்றிய தொல்பொருள் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அடையாளமாக, Dr. Domenico Benoci, Dr. Gabriele Castiglia ஆகிய இருவருக்கும் இணைந்து வெள்ளிப்பதக்கங்களை வழங்குவதாகவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

உரோம் நகரின் முதல் கிறிஸ்தவ சமூகங்களின் வாழ்க்கையை அனைத்து சாத்தியமான ஆதாரங்கள் மூலமாக கண்டறிந்து, சிறப்பாக அறிய உதவும் வகையில், கிறிஸ்தவ தொல்லியல் துறையில் அறிவியல் ஒழுக்கத்தை வளர்ப்பதில் de Rossiயின் அசாதாரண அர்ப்பணிப்பு, ஆர்வம், மற்றும் தொழிலை சிறப்பாக நினைவுகூர்ந்து பாராட்டினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2022, 16:33