தேடுதல்

டோங்காவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு டோங்காவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு  

டோங்கா பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்காக திருத்தந்தையின் செபம்

எரிமலை வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் திருப்பயணிகளோடு இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 19, இப்புதனன்று மறைக்கல்வியுரையை வழங்கியபின், டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சமீப நாட்களில் தண்ணீருக்கடியில் எரிமலை வெடித்ததால் பெரும் பொருள் சேதத்தை ஏற்படுத்திய டோங்கா தீவுகளின் மக்கள்மீது தனது எண்ணங்கள் செல்வதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனும் தான் ஆன்மீக ரீதியில் நெருக்கமாக இருப்பதுடன், அவர்களின் துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க கடவுளிடம் மன்றாடுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஜனவரி 15, கடந்த சனிக்கிழமையன்று தண்ணீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், Tonga பகுதி முழுவதும் கடுமையான பதிப்பைச் சந்தித்துள்ளது என்றும்  கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக, தீவுக்கூட்டத்திற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க சில வாரங்கள் ஆகும் என்றும், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பணியாற்ற கொண்டுவரப்பட்ட மீட்புக்குழுவினர், சுனாமியாகக் கருதப்படும் கோவிட் தொற்று நோய் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

இதற்கிடையில், ‘மனிதாபிமான ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ள யுனிசெப்பின் (UNICEF) பசிபிக் பகுதியின் பிரதிநிதி ஜொனாதன் வீட்ச் (Jonathan Veitch)  அவர்கள், அத்தியாவசிய தேவைகளான நீர் மற்றும் சுகாதார கருவிகளை உடனடியாக விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2022, 15:56