தேடுதல்

Auschwitz-Birkenau வதை முகாம் Auschwitz-Birkenau வதை முகாம்  

மனித மாண்பு மீண்டும் சிதைக்கப்படாத எதிர்காலத்தை உருவாக்க

கல்வியாளர்களும், குடும்பங்களும், மனித வரலாற்றில் நிகழ்ந்த இருண்ட பக்கத்தின் கொடூரங்கள் பற்றிய விழிப்புணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 27 வியாழன் அன்று சர்வதேச நாத்சி படுகொலைகள் நினைவு தினத்தை உலகம் சிறப்பித்துவரும் நிலையில், நாத்சி ஆட்சியின் கைகளில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள், குறிப்பாக யூதர்கள் பற்றி இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டுமாறு குடும்பங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கல் வலியுறுத்தினார்.

ஜனவரி 26, இப்புதனன்று தனது புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், ஷோவா (Shoah) என்றும் அழைக்கப்படும் நாத்சி படுகொலைகளை நினைவு கூருவதற்கு உலகம் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் எனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோளை விடுத்தார்.

1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி ஆஷ்விச்-பிர்கெனாவ் (Auschwitz-Birkenau) படுகொலை முகாமிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டதன் நினைவாக, சர்வதேச நாத்சி படுகொலை நினைவு தினம் ஜனவரி 27, வியாழனன்று அனுசரிக்கப்படுகிறது.

மில்லியன் கணக்கான யூதர்கள், பல்வேறு நாட்டவர்கள் மற்றும் மத நம்பிக்கையாளர்கள் கொன்றழிக்கப்பட்டதை உலகம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பாவின் ஏறத்தாழ 6 மில்லியன் யூதர்கள், அல்லது கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு யூத மக்கள், நாத்சி ஆட்சியின் கைகளில் இனப்படுகொலை செய்யப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார்.  

அனைவருமே, அதிலும் குறிப்பாக கல்வியாளர்களும், குடும்பங்களும், மனித வரலாற்றில் நிகழ்ந்த இந்த இருண்ட பக்கத்தின் கொடூரங்கள் பற்றிய விழிப்புணர்வை, இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, அப்போதுதான் மனித மாண்பு மீண்டும் ஒருமுறை மிதிக்கப்படாத எதிர்காலத்தை உருவாக்க முடியும்" என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு, கத்தோலிக்க அருளப்பணியாளர் புனித மாக்சிமிலியன் கோல்பேயும், அவருடன் கொல்லப்பட்ட 1.1 மில்லியன் மக்களும் வாழ்ந்த Auschwitz-Birkenau வதை முகாமின் எஞ்சியிருக்கும் பகுதிகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் பார்வையிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எந்த வார்த்தையும் பேசவில்லை, ஆனால், முகாமில் இருந்து மீட்கப்பட்டு உயிருடன் வாழும் சிலரை மட்டுமே சந்தித்தார். அப்போது அங்கிருந்த வரவேற்பறை நன்மதிப்பு புத்தகம் ஒன்றில், "ஆண்டவரே, உமது மக்கள்மேல் இரக்கமாயிரும். ஆண்டவரே, இவ்வளவு கொடுமைகளையும் மன்னியுங்கள்!” என்று எழுதினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2022, 15:09