தேடுதல்

திருஅவை நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவை நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருஅவையின் உயர்மட்ட நீதிபதிகளுக்கான திருத்தந்தையின் உரை

குடும்ப பந்த உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, அவர்கள் இருவரையும் உயிரூட்டி ஒன்றிணைக்க வேண்டியது அவசியம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்

ஜனவரி 27, வியாழனன்று திருப்பீடத்தில், ரோமன் ரோட்டா (Roman Rota) எனப்படும் திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான திருஅவையின் நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவைரையும் வாழ்த்தி வரவேற்று தனது உரையை தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வாழ்வில் திருஅவையின் நீதிபணிகள் குறித்த மூன்று விடயங்களைத் தனது சிந்தனைகளாக அவர்களோடுப் பகிர்ந்துகொண்டார்.  

முதலாவதாக,  குடும்ப வாழ்வில் ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஒன்றாக பயணிப்பது பற்றிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை,  திருஅவை  நீதிமன்றங்களில் திருமண வழக்குகளில் பங்கேற்கும் கணவன் மனைவி ஆகியோரின்  குடும்ப பந்த உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி  ஒரே ஒற்றுமையில் அவர்களை உயிரூட்டி ஒன்றிணைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எடுத்துரைத்தார்

வாழ்க்கைத் துணைவர்களிடையே மன்னிப்பு, மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும், அதற்கேற்றவாறு திருமண நெருக்கடி நேரங்களில் ஏற்படும் வெற்றிடங்கள், நம்பகத்தன்மையற்ற நிலை, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமை போன்ற திருமண முறிவுக்கு இட்டுச்செல்லும் சூழல்களை எதிர்கொள்வதில் சாத்தியமான நிலைகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இருவருக்கிடையே ஏற்படும் வீண் விவாதங்கள், வெட்டிப்பேச்சுகள், பிரிவுகளை வளர்க்கும் சூழல்கள் ஆகிய தருணங்களில், இருவருடைய தனிப்பட்ட நோக்கங்களும் கனவுகளும் சிதைந்துவிடாமல் உண்மைத்தன்மையில் அவர்கள் நிலைத்து வாழ வழிகாட்ட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததார் திருத்தந்தை.

இரண்டாவதாக, இருவருக்குமான திருமண  பந்தத்தில் வழிகாட்டுவதில், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து செவிமடுக்கும் பயிற்சி மிக முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது அவர்களின் நோக்கத்தையும், பிரச்னைகளுக்கான காரணகாரியங்களையும் ஆழமாக அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

உண்மையில் இரக்கம் என்பது நீதியின் முழுமை, மற்றும் கடவுளின் வார்த்தைகளில் ஒளிரும் வெளிப்பாடு  என்பதை உணர்த்தவர்களாய்  உங்களில் ஒவ்வொருவரும் திறந்த மனதோடு விருப்புவெறுப்பின்றி இருவர் பக்கமும் செவிமடுத்து இருவரும் விரும்பி ஏற்கக்கூடிய தீர்வு ஒன்றை காண முயல வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மூன்றாவது விடயமாக, தெளிந்து தேர்தல் குறித்துப் பேசிய திருத்தந்தை, இணைந்து பயணித்தலும், செவிமடுத்தலும் தெளிந்து தேர்தல் என்னும் உயரிய பண்பை  அடிப்டையாகக் கொண்டவை என்று எடுத்துக்காட்டியதுடன், இந்த வழியில் மட்டுமே தனிப்பட்ட திருமண முறையற்ற தன்மை தொடர்பான சட்டங்கள் பலனளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்

இறுதியாக, இந்த நீதிச் சேவையில், உங்கள் திருஅவையின் பணியை  நம்பிக்கையுடனும் புதுப்பிக்கப்பட்ட உழைப்புடனும் தொடர்ந்தாற்ற உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 January 2022, 15:01