தேடுதல்

லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர் சந்திப்பு

கிரேக்க நாட்டு லெஸ்போஸ் தீவின் தலைநகரமான மைத்திலின், ஏஜியன் வடபகுதியின் தலைநகரமும், நிர்வாக மையமுமாகும். கி.மு. 11ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஏஜியன் பல்கலைக்கழகத்தின் தலைமையகமும் இங்கு உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 05, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, ஏதென்ஸ் திருப்பீடத் தூதரகத்திலிருந்து காரில் புறப்பட்டு, அந்நகரின் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கிருந்து 55 நிமிடங்கள் விமானப்பயணம் மேற்கொண்டு, மைத்திலின் (Mytilene) என்ற நகருக்குச் சென்றார், திருத்தந்தை. மைத்திலின் என்பது, கிரேக்க நாட்டு லெஸ்போஸ் தீவின் தலைநகரமாகும். இந்நகரம், ஏஜியன் வடபகுதியின் தலைநகரமும், நிர்வாக மையமுமாகும். கிறிஸ்துவுக்குமுன் 11ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஏஜியன் பல்கலைக்கழகத்தின் தலைமையகமும், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சபை ஆயரின் தலைமை இல்லமும் இங்கு உள்ளது. இந்நகரின் விமானத்தளத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள, மைத்திலின் புலம்பெயர்ந்தோர் வரவேற்பு (Reception and Identification Centre) மையத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு கிரேக்க நாட்டு அரசுத்தலைவரும், ஆர்த்தடாக்ஸ் சபை ஆயரும் திருத்தந்தையை வரவேற்றனர். இந்த மைத்திலின் மையத்தில்தான் அப்பகுதிக்கு வருகின்ற புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட்டு, அவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை
லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம், Moria என்று அழைக்கப்படுகிறது. இம்முகாம், 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, ஐரோப்பாவில் மிகப் பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. Moria கிராமத்திற்கு சற்று அருகிலுள்ள இடத்தையே, 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புலம்பெயர்ந்தோர் மையம், திருத்தந்தையின் வருகைக்குப்பின், முழுமையாக அழிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மையத்தில் நடைபெற்ற சந்திப்பில், காங்கோ சனநாயக குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டியான் என்ற புலம்பெயர்ந்தோரும், லெஸ்போசில் தன்னார்வப் பணியாற்றும் Len என்ற கத்தோலிக்கரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். லெஸ்போஸ் தீவில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த ஆப்ரிக்க கிறிஸ்தவர்கள், திருத்தந்தைக்கு மடல் ஒன்றையும் அனுப்பியுள்ளனர். இவ்விடத்திற்கு வருகின்ற கடல்பயணத்தில் தாங்கள் அடைந்த துயரங்களை எடுத்துரைத்து, தற்போது நன்றாக கவனிக்கப்பட்டு வருவதாக, அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிரேக்க நாட்டினர், மிகத் தாராளமனதோடு புலம்பெயர்ந்தோரை வரவேற்பதற்கு தன் நன்றியையும் திருத்தந்தை தெரிவித்தார். பின்னர் அந்த மையத்திலேயே ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையாற்றி, அனைவரையும் ஆசீர்வதித்து, அங்கிருந்து மீண்டும் விமானப் பயணம் மேற்கொண்டு ஏதென்ஸ் நகரை அடைந்து, திருப்பீடத் தூதரகம் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர்
லெஸ்போஸ் தீவில் புலம்பெயர்ந்தோர்

அங்கு மதிய உணவருந்தி ஓய்வும் எடுத்துக்கொண்டார். இஞ்ஞாயிறு மாலையில் ஏதென்ஸ் நகரின் 'Megaron இசை அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றல், திருப்பீடத் தூதரகத்தில் முதுபெரும்தந்தை 2ம் எரோணிமுஸ் அவர்களை மரியாதைநிமித்தம் சந்தித்தல் ஆகியவை பயணத்திட்டத்தில் உள்ளன. டிசம்பர் 06, இத்திங்கள் காலையில், திருப்பீடத் தூதரகத்தில், நாடாளுமன்றத் தலைவரைச் சந்தித்தல், ஊர்சுலைன் அருள்சகோதரிகளின் புனித தியோனிசியு பள்ளியில் இளையோரைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை முடித்து உரோம் நகருக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின்  35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2021, 14:15