தேடுதல்

ஹெய்ட்டி நாட்டில் எரிவாயு கொண்டுசென்ற வாகனம் வெடித்ததில்...... ஹெய்ட்டி நாட்டில் எரிவாயு கொண்டுசென்ற வாகனம் வெடித்ததில்...... 

ஹெய்ட்டி எரிவாயு வாகன வெடிப்பில் பலியானவர்களுக்கு செபம்

நல்ல, சமய உணர்வுமிக்க ஹெய்ட்டி மக்கள், துன்பத்திற்குமேல் துன்பத்தை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர், அவர்களுக்காகச் செபிப்போம் - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான்

துன்பத்திற்குமேல் துன்பத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் ஹெய்ட்டி நாட்டு மக்களுக்காக, இறைவேண்டல் செய்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 15, இப்புதன் காலையில் வழங்கிய மறைக்கல்வியுரைக்குப்பின் கேட்டுக்கொண்டார்.

புனித யோசேப்பின் அமைதியான வாழ்வு குறித்து, மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர், இவ்வாறு ஹெய்ட்டி நாட்டுக்காகச் செபிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை, கடந்த சில மணி நேரங்களில், ஹெய்ட்டி நாட்டின் வடபகுதியிலுள்ள கேப்-ஹெய்ட்டியென் நகரில் எரிவாயு கொண்டுசென்ற வாகனம் வெடித்ததில், சிறார் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

நல்ல, சமய உணர்வுமிக்க ஹெய்ட்டி மக்கள் அதிகம் துன்புறுகிறார்கள், அவர்களுக்காகச் செபிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, இவ்விபத்து இடம்பெற்ற நகர மக்கள், அதில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களோடு தன் அருகாமையை வெளிப்படுத்தினார். 

எரிவாயுவைக் கொண்டுசென்ற பெரிய வாகனம் ஒன்று, டிசம்பர் 14, இத்திங்களன்று கேப்-ஹெய்ட்டியென் நகரில் வெடித்ததில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், பலர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த வாகனம் தொழில்நுட்பக் கோளாறால் கேப்-ஹெய்ட்டியென் நகரில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதிலிருந்து கசிந்த எரிவாயுவை, மக்கள் சேகரித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அது வெடித்தது என்றும் அந்நகரில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள், பழுதுபார்க்க முடியாத அளவுக்குச் சேதமாகியுள்ளன என்றும் செய்திகள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2021, 14:37