தேடுதல்

நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் 

அண்மைய திருத்தூதுப்பயணம் குறித்த எண்ணப் பகிர்வு

திருத்தந்தை : புலம்பெயரும் மக்களின் துயர்நிலைகளைக் கண்டு பாராமுகமாகவோ, வாய்மூடியாகவோ நாம் செயல்படமுடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

அமல அன்னை பெருவிழவையொட்டி, புதன்கிழமையன்று, நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், தான், அண்மையில், சைப்பிரசு, மற்றும் கிரேக்க நாடுகளில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் குறித்த எண்ணங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளோடு தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இந்நாடுகளின் மக்களுக்கும், அரசு மற்றும் மதத்தலைவர்களுக்கும், தனக்காக செபித்த அனைவருக்கும், நன்றியை வெளியிடுவதாக, முதலில் தெரிவித்தார்.

மத்தியதரைக் கடலின் முத்தாக விளங்கும் சைப்பிரசு தீவு, பிரிவினைக் காயத்தைத் தாங்கியதாக உள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு நாட்டின் மக்களில் தான் உடன்பிறந்த உணர்வுநிலையைக் கண்டதாகவும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை சகோதரர் கிறிசோஸ்தமோஸ் அவர்களுடன் தாய்த் திருஅவை குறித்து உரையாடியபோது பகிரப்பட்டவை, தன்னை மிகவும் கவர்ந்தததாகவும், இந்நாடு, தொடர்ந்து, ஏழைகள், கைவிடப்பட்டோர், மற்றும், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடாக செயல்படவேண்டும் என ஆவல் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.

புலம்பெயரும் மக்களின் துயர்நிலைகளைக் கண்டு, நாம், பாராமுகமாகவோ, வாய்மூடியாகவோ செயல்படமுடியாது என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவைப் போன்று, சைப்பிரசு நாட்டிலும், மக்களின் துயர்களை, அவர்களின் கண்களில் காணமுடிந்தது என குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கைவிடப்பட்ட மக்களின் கண்களை உற்றுநோக்குங்கள், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளில் காணப்படும் துயர்களை உற்றுநோக்கும்போது, உங்கள் உள்ளத்தில் இரக்கம் பிறக்கட்டும், நம் பாராமுகம் மறையட்டும், என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

சைப்பிரசு போலவே, கிரேக்கத்திலும் உடன்பிறந்த நிலையுடன்கூடிய வரவேற்பைப் பெற்றதுடன், அந்நாட்டின் வரலாற்று மேன்மை, அந்நாட்டின் மனிதாபிமான உணர்வுகள், குடியாட்சி, ஞானம், மற்றும் விசுவாசம் ஆகியவை ஐரோப்பாவில் எழுப்பிய தாக்கம் போன்றவைகளால் கவரப்பட்டேன் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  கிரேக்கத்தின் கத்தோலிக்க சமுதாயத்தையும், இளையோரையும், ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை 2ம் எரோணிமுஸ் அவர்களையும் சந்தித்தது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

கிரேக்க நாட்டில் இத்திருப்பயணத்தின்போது, இறைவனால் விதைக்கப்பட்ட இந்த சந்திப்பின் விதைகள், ஆழமாக வேரூன்றி நல்ல பலன்களைத் தரவேண்டும் என செபிக்குமாறு உங்களிடம் விண்ணப்பிக்கிறேன், எனவும் தன் மூவேளை செபஉரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், டிசம்பர் 8ம் தேதி, புதனன்று, புனித யோசேப்பு ஆண்டு, அகில உலக திருஅவையில் நிறைவுறுவது குறித்தும், டிசம்பர் 10ம் தேதி, லொரேட்டோ யூபிலி நிறைவுக்கு வருவது குறித்தும் நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நிகழ்வுகளின் அருள், நம் வாழ்விலும், நம் சமுதாயங்களின் வாழ்விலும் பொழியப்பட்டு, தொடர்ந்து செயலாற்றுவதாக எனவும் வேண்டி, தன் மூவேளை செபவுரையை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 13:41