தேடுதல்

ஏதென்சு நகரில் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை ஏதென்சு நகரில் இளையோரைச் சந்தித்த திருத்தந்தை 

கிரேக்க கல்விக்கூடத்தில் இளையோருக்கு திருத்தந்தை உரை

மன்னிப்பு என்ற இந்த வியத்தகுச் செயலில் நாம் இறைவனின் அன்புநிறை முகத்தையும், இதயத்தில் அமைதியையும் கண்டுகொள்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

டிசம்பர் 6, இத்திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏதென்சு நகரில், Ursuline அருள்சகோதரிகள் நடத்திவரும் புனித தியோனிசியு பள்ளியில் இளையோரைச் சந்தித்தார். அவ்வேளையில், திருத்தந்தை வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு இளையோரே, நீங்கள் அனுப்பியிருந்த சான்றுபகர்தல்களை நான் ஏற்கனவே வாசித்தேன். நான் உங்களின் சான்றுபகர்தல்களால் அதிகம் கவரப்பட்டேன். முதலில், விசுவாசம் குறித்து அடிக்கடி சந்தேகம் எழுவதாக கூறுவதை இங்கு விளக்க ஆவல்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில், சந்தேகங்கள் எழுவது குறித்து அஞ்சாதீர்கள். அது விசுவாசக் குறைவின் வெளிப்பாடு அல்ல, மாறாக, விசுவாசத்திற்கு அது ஊட்டச்சத்து. தவறாக புரிந்துகொள்ளப்படும்போது, வாழ்வில் சிரமங்கள் ஏற்படும்போது, தனிமையில் இருக்கும்போது, ஏமாற்றங்களை சந்திக்கும்போது, நம் இதயங்களின் கதவுகளை சந்தேகங்கள் தட்டிப்பார்க்கின்றன. இது ஒரு சோதனை. இந்த சோதனைகள் தூர விலக்கிவைக்கப்பட வேண்டும்.

இப்போது நாம் என்ன செய்யவேண்டுமெனில், நம் துவக்கப்புள்ளிக்குச் செல்லவேண்டும். ஆச்சரியத்தையும், பெரும் வியப்பையும் தந்த விசுவாசத் துவக்கத்திற்குச் செல்லவேண்டும். நாம் கடவுளின் அன்புநிறை குழந்தைகள் என்ற உணர்வைத் தந்த அந்த இடத்திற்கு நாம் திரும்பவேண்டும். வியத்தகு முறையில் அவர் நம்மைப் படைத்தார் (தி.பா. 139:14) என விவிலியம் உரைக்கிறது.

நாம் ஆற்றிய ஒரு செயல் குறித்து நாம் வருந்தும்போது, இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆம், மன்னிப்பு குறித்த ஆச்சரியம். மன்னிப்பு என்ற இந்த வியத்தகுச் செயலில் நாம் இறைவனின் அன்புநிறை முகத்தையும், இதயத்தில் அமைதியையும் கண்டுகொள்கிறோம்.  நம் சோம்பலும், அச்சமும், வெட்கமும், மன்னிப்பு எனும் புதையலிலிருந்து நம்மை விலக்கி வைக்காதிருக்கட்டும். 

கிரேக்க நாட்டின் Delphi கோவிலில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளான, 'உன்னையே நீ அறிவாய்' என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்த புகழ்வாய்ந்த வார்த்தைகள், இன்றும் ஏற்புடையதாக உள்ளன. உங்களுடைய மதிப்பு என்பது, நீங்கள் எப்படியுள்ளீர்கள் என்பதைப் பொருத்ததேயன்றி, நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது அல்ல.  இதனால்தான் நாம் நம் விசுவாசத்தின் ஆச்சரியம், மற்றும் வியத்தகு நிலை குறித்து மனம் மகிழவேண்டும். இந்த மகிழ்வைப் பெறுவதற்கு தடையாக இருப்பவைகளை நாம் தூர விலக்கிவைக்க வேண்டும். இறைவனின் படைப்பை, நண்பர்களை, இறைமன்னிப்பை, உடன்வாழ் மக்களின் முகங்களை வியந்து நோக்குங்கள். நம் மனங்களைத் திறந்து கடவுளுடன் உரையாடும்போது, நம் கவலைகளை அவருடன் பகிரும்போது, அவரைக் குறித்து நாம் மேலும் அறிய வருகிறோம்.

வாழ்வைப் பணியாக நோக்குங்கள். மற்றவர்களுக்கு பணிபுரிவது என்பது, உண்மை மகிழ்ச்சிக்குரிய வழி. வரலாற்றில் புதியன படைப்பதற்கு இது ஒரு வழி. ஒன்றிணைந்து செயலாற்றுவதையும், பகிர்வதில் மகிழ்வையும், பணிபுரிவதில் ஆர்வத்தையும்  வளர்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த செப்டம்பரில் நான் ஸ்லோவாக்கியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற பாதுகைகளை இளையோர் தாங்கிவந்ததைக் காணமுடிந்தது. அனைவரையும் உடன்பிறந்த உணர்வுடன் நடத்துவதையும், உடன்பிறந்த நிலைகுறித்து கனவு காண்பதையும் இது உணர்த்துகிறது. நம்மைக்குறித்து நாம் அறிந்துகொள்ள, நமக்கு, மற்றவர்கள் ஒரு பாதையாக உள்ளார்கள்.

சிரியா நாட்டுப் போரினால் கொல்லப்பட இருந்த ஆபத்துக்களைத் தாண்டி, எண்ணற்ற துயர்கள் மத்தியில், கடல்வழி பயணம் மேற்கொண்டு, கிரேக்க நாட்டை வந்தடைந்த Aboudன் சோகக்கதை நம் அனைவரின் உள்ளங்களையும் தொட்டுள்ளது. இன்றைய நிலைகளின் உண்மை எடுத்துக்காட்டு இது.

வாழ்வில், நாம் கரைகளில் அமர்ந்துகொண்டு, புதியன வருவதற்காக காத்திருக்க முடியாது. நம் மீட்பு என்பது, நம் கனவுகளுடன் துணிச்சலாக கடலில் இறங்கி துடுப்புப் போடுவதைச் சார்ந்துள்ளது. ஆகவே, அச்சத்தால் முடங்கிவிட வேண்டாம். பெரிதாகக் கனவுகாணுங்கள், அதுவும் ஒன்றிணைந்து கனவுகாணுங்கள். நம்பிக்கையின் உறுதிப்பாட்டிற்கு உரமூட்டுங்கள். ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்லுங்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2021, 14:13