தேடுதல்

சைப்பிரசில் திருத்தந்தை பிரான்சிஸ் சைப்பிரசில் திருத்தந்தை பிரான்சிஸ் 

சைப்பிரசில் திருத்தந்தை பிரான்சிஸ்

சைப்பிரசு தீவின் இலார்னாக்கா நகரில் பேரரசர் 6ம் லியோ அவர்களால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயத்தில், புனித இலசாரின் கல்லறை உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, டிசம்பர் 02, இவ்வியாழன் உரோம் நேரம் காலை பத்து மணியளவில், அதாவது இந்திய-இலங்கை நேரம் இவ்வியாழன் பிற்பகல் இரண்டரை மணியளவில் துவக்கினார். அதற்கு முன்னர், அவ்வில்லத்தில்,சிரியா, காங்கோ, சொமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 12 புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார். இவர்கள் 2016ம் ஆண்டில் லெஸ்போஸ் தீவிலிருந்து இத்தாலிக்கு அழைத்துவரப்பட்டவர்கள். இத்தாலி தவிர மற்ற நாடுகளுக்கு திருத்தூதுப் பயணத்தைத் துவக்குவதற்கு முன்னரும், அப்பயணத்தை முடித்துத் திரும்பும் வழியிலும், உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில் குடியிருக்கும் மரியாவின் (Salus Populi Romani) அதாவது, உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியாவின் திருப்படத்தின் முன்பாகச் செபிப்பதை, திருத்தந்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். டிசம்பர் 01, இப்புதன் மாலையிலும் அந்தப் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவின் திருவடிகளில் மலர்க்கொத்தைச் சமர்ப்பித்து சைப்பிரசு, கிரேக்கம் ஆகிய இரு நாடுகளை அவ்வன்னையின் பாதுகாவலில் அர்ப்பணித்து செபித்தார்.

இவ்வியாழன் முற்பகல் 11 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்ற வழியில், ஃபியூமிச்சினோ பங்குத்தளத்தின் தூதர்களின் புனித மரியா ஆலயத்தில் லொரேத்தோ அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாகச் சிறிதுநேரம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பங்குத்தளம் உதவிவரும் ஏறத்தாழ 15 புலம்பெயர்ந்தோரையும் அந்த ஆலயத்தில் திருத்தந்தை சந்தித்தார். அதற்குப்பின்னர், அவ்விமான நிலையத்திற்குச் சென்று, A320 ITA விமானத்தில், சைப்பிரசு நாட்டிற்குப் புறப்பட்ட திருத்தந்தை, இத்தாலி, மற்றும், கிரேக்க நாட்டு அரசுத்தலைவர்களுக்கு நல்வாழ்த்தையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்ப மறக்கவில்லை. இத்திருத்தூதுப் பயணம்பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குவதற்காக விமானத்தில் தன்னோடு பயணம் மேற்கொள்ளும் பன்னாட்டு செய்தியாளர்களையும் திருத்தந்தை வாழ்த்தினார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு சைப்பிரசு நாட்டின், இலார்னாக்கா (Larnaca) நகரின் பன்னாட்டு விமானத்தளத்தை, திருத்தந்தை சென்றடைந்தபோது, உள்ளூர் நேரம் மாலை மூன்று மணியாக இருந்தது.

சைப்பிரசுக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்
சைப்பிரசுக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்

இலார்னாக்கா

சைப்பிரசு தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள இலார்னாக்கா நகரம், அத்தீவு நாட்டின் நிகோசியா மற்றும், லிமாசோல் (Nicosia, Limassol) ஆகிய இரு நகரங்களுக்குப்பின் மூன்றாவது பெரிய நகரமாகும். முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவத்திற்கு மாறிய இலார்னாக்கா நகரின் முதல் ஆயராக, இயேசுவின் நண்பரான புனித இலாசர் பணியாற்றியுள்ளார். அந்நகரில் பேரரசர் 6ம் லியோ அவர்களால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயத்தில், புனித இலசாரின் கல்லறையும் உள்ளது. பெத்தானியாவில் இயேசு உயிர்ப்பித்த, இறந்த இலாசரே இவர். இந்நகரிலுள்ள உப்பு ஏரி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இலார்னாக்கா பன்னாட்டு விமானத்தளத்தில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, சைப்பிரசின் நாடாளுமன்றத் தலைவர், விமானப்படிகளில் நின்று திருத்தந்தையை வரவேற்றார். மரபு ஆடைகளை அணிந்திருந்த இரு சிறார், திருத்தந்தையிடம் மலர்கள் கொடுத்து வாழ்த்தி ஆசீர் பெற்றனர். இந்நிகழ்வுக்குப்பின்னர், அங்கிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும், தலைநகர் நிகோசியாவுக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. நிகோசியாவின் அருள்நிறை மரியே மாரனைட் கத்தோலிக்க பேராலயத்தில் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், திருத்தொண்டர்கள், வேதியர்கள், பல்வேறு பக்த சபையினர் போன்ற அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு உரையொன்றும் திருத்தந்தை ஆற்றினார். வழிபாடாக நடைபெற்ற இச்சந்திப்புக்குப்பின், நிகோசியாவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை சென்று வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, அரசுத்தலைவரைச் சந்திப்பது, அத்தீவு நாட்டின் அரசு, தூதரக மற்றும், பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுவது, இத்திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளன. சைப்பிரசு குடியரசு

டிசம்பர் 2, இவ்வியாழன், 3 இவ்வெள்ளி ஆகிய இருநாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் சைப்பிரசு தீவு நாடு, மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாடு, அக்கடல் பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய தீவு மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றாவது இடத்தில் உள்ளது. சைப்பிரசு குடியரசு என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் இந்நாடு, துருக்கி நாட்டிற்கு தெற்கே, சிரியாவுக்கு மேற்கே, இஸ்ரேல், லெபனோன் ஆகிய நாடுகளுக்கு வடமேற்கே, எகிப்துக்கு வடக்கே, கிரேக்க நாட்டிற்கு தென்கிழக்கே அமைந்துள்ளது. சைப்பிரசு குடியரசின் தலைநகர் நிகோசியா. இப்பகுதியில் கி.மு. பத்தாம் மில்லென்யத்திலேயே மனிதர் வாழத் தொடங்கியுள்ளனர். இந்நாட்டின் புவியியல் அமைப்பால், அசீரியர், எகிப்தியர், பாரசீகர், உரோமானியர், அரேபியர், பிரெஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற பலராலும் இந்நாடு தொடர்ந்து ஆக்ரமிக்கப்பட்டு வந்தது. கி.மு.333ம் ஆண்டில், மாசிடோனியாவின் பேரரசர் பெரிய அலெக்சாந்தர், அத்தீவை ஆக்ரமித்திருந்தார். 1571ம் ஆண்டு முதல் 1878ம் ஆண்டுவரை, மூன்று நூற்றாண்டுகளுக்கு ஒட்டமான்கள் இத்தீவை ஆட்சிசெய்தனர். இறுதியாக, 1878ம் ஆண்டின் சைப்பிரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாடு பிரித்தானியாவின் நிர்வாகத்தின்கீழ் வந்தது. பின்னர், இத்தீவு, 1914ம் ஆண்டில் பிரித்தானியாவுடன் இணைக்கப்பட்டது.

1960ம் ஆண்டின் நிலவரப்படி, சைப்பிரசில் 77 விழுக்காட்டினர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்களும், 18 விழுக்காட்டினர் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். 1974ம் ஆண்டிலிருந்து, சைப்பிரசின் வடபகுதியின் மூன்று பாகம், துருக்கி சைப்பிரசு இன அரசாலும், தென்பகுதியின் மூன்றில் இரண்டு பாகம், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கிரேக்க சைப்பிரசு இனத்தவராலும் ஆளப்பட்டு வருகிறது. இவ்விரு பகுதிகளையும் பிரிக்கும் "பச்சைக் கோட்டை (Green Line)", ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிப் படைகள் கண்காணித்து வருகின்றன. மேலும், சைப்பிரசின் வட பகுதி துருக்கியின்கீழ் இருப்பது, உலகளாவிய சமுதாயத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆயினும், இவ்விரு பகுதிகளையும் ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. இந்தப் பிரிவினைகளைத் தவிர, இந்த மத்தியதரைக் கடல் தீவில் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை பூதாகாரம் எடுத்துள்ளது. இதனால் சைப்பிரசு தீவின் திருப்பீடத் தூதர் பேராயர் Tito Yllana அவர்கள், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம்பற்றிக் கூறுகையில், திருத்தந்தை ஒரு தீவு நாட்டிற்கு வருகிறார் என்று சொல்வதைவிட, கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு நாட்டிற்கு, அங்கு வாழ்கின்ற மக்களைச் சந்திக்க வருகின்றார் என்று சொல்வதே பொருத்தமானது என்று கூறியுள்ளார். மத்தியதரைக் கடல் பகுதியில் பெரிய சுற்றுலாத் தளமாகவும் அமைந்துள்ள சைப்பிரசு, மனித வளர்ச்சி குறியீட்டிலும் உயர்ந்து நிற்கிறது. சைப்பிரசு குடியரசு, 1961ம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகள் அமைப்பிலும், 2004ம் ஆண்டு மே முதல் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்துள்ளது.

சைப்பிரசில் கிறிஸ்தவம்

இலனார்க்கா விமானத்தளத்தில் திருத்தந்தை
இலனார்க்கா விமானத்தளத்தில் திருத்தந்தை

சைப்பிரசில் ஏறத்தாழ எண்பது விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 18   விழுக்காட்டினர் சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள். எஞ்சியுள்ள 2 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களும், இந்துக்களும், புத்தமதத்தினருமாக உள்ளனர். தற்போது ஏறத்தாழ பத்தாயிரம் கத்தோலிக்கர் உள்ளனர். இத்தீவு நாட்டில்தான், புனித பூமி மற்றும் அந்தியோக்கியாவிற்கு அடுத்து, நற்செய்தி அறிவிக்கப்பட்டது. திருத்தூதர்களின் திருஅவை என கருதப்படும் சைப்பிரசு திருஅவை, புனித பவுல் மற்றும் புனித பர்னபாஸ் ஆகிய இரு பெரும் நற்செய்தி அறிவிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. கி.பி. 46ம் ஆண்டில், புனித பர்னபாஸ் சைப்பிரசுக்குச் சென்றார். இவர் சைப்பிரசு நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டவர். கி.பி. 61ம் ஆண்டில் இவர் மறைசாட்சியாக மரித்தார். இவரே சைப்பிரசு திருஅவையின் நிறுவனர் என கருதப்படுகிறார். பின்னர் புனித பர்னபாசோடு, புனித மாற்குவும்  அங்குச் சென்று நற்செய்தியை அறிவித்துள்ளார். இத்தீவு நாட்டில், 2010ம் ஆண்டில் அப்போதைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார். அவரது அடிச்சுவடைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று சைப்பிரசில் தன் திருத்தூதுப்பயணத்தைத் துவக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 15:20