தேடுதல்

 நிகோசியாவின் அருள்நிறை மரியே பேராலயத்தில் திருத்தந்தை நிகோசியாவின் அருள்நிறை மரியே பேராலயத்தில் திருத்தந்தை  

திருத்தந்தை செல்லவிருக்கும் கிரேக்க நாடுபற்றிய ஒரு முன்தூது

திருத்தந்தையின் 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம், "கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல், புலம்பெயர்ந்தோர்" ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் 2001ம் ஆண்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, 1291 ஆண்டுகளுக்குப்பின் ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தை, கிரேக்க நாட்டிற்கு மேற்கொண்ட முதல் திருத்தூதுப்பயணம் என்று கூறப்பட்டது. அத்திருத்தந்தைக்குப்பின், டிசம்பர் 4, வருகிற சனிக்கிழமை முதல் 6, திங்கள் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டில் இப்பயணத்தை மேற்கொள்வது, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும், கத்தோலிக்கருக்கும் இடையே நல்லுறவை கூடுதலாக வளர்க்கும் என நம்பலாம். பால்கன் தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள கிரேக்க நாட்டின் நிலப்பகுதியில் ஐந்தில் ஒன்று தீவுகளால் ஆனது.  இந்நாட்டிலுள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் ஏறத்தாழ 170ல் மனிதர் யாரும் வாழவில்லை. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளன. கடவுள் ஒரு சல்லடை வழியாக மண்ணைப் பரப்பினார் எனவும், கற்களாகிய மாறிய அவை கிரேக்க நாட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன எனவும், கிரேக்க புராணக்கதை ஒன்று சொல்லப்படுகிறது. இந்நாட்டிற்கு கிழக்கிலும் தெற்கிலும் ஏஜியன் கடலும், மேற்கே அயோனியன் கடலும் உள்ளன. இந்நாடு, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. பைசான்டைன் பேரரசின் பழமையான மரபுகளுக்குச் சொந்தமான இந்நாட்டை, ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளாக, துருக்கியர்களான ஒட்டமான்கள் ஆட்சிசெய்து வந்தனர். இந்நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ், 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதிப் பகுதியில் மிக வேகமாக விரிவடைந்தது. தற்போது இந்நகரில் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர்.  

[ Photo Embed: நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை] 

கிரேக்க மொழி

மேற்கத்திய கலாச்சாரத்தில் மிக ஆழமான தாக்கத்தைக் கொண்டிருக்கும் கிரேக்க நாட்டு மொழி,  ஏறத்தாழ 6,746 ஆண்டுகள் வரலாறுகொண்ட தொன்மையான மொழியாகும். இது மிகப் பழமையான இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றாகும். உலகில் மனிதன் முதலில் தோன்றியதாகச் சொல்லப்படும் ஆப்ரிக்க கண்டத்தில், மனிதன் பேசிய மொழி கிரேக்கம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இம்மொழியில் 74 நுற்றாண்டுகளாக எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. பழங்காலத்தில், மத்தியதரைக் கடல் உலகிலும் அதற்கு அப்பால் இருந்த பல இடங்களிலும், கிரேக்க மொழி, ஓர் இணைப்பு மொழியாகப் பேசப்பட்டது. கிரேக்க மொழியின் வேர்கள், பெரும்பாலும் பிற மொழிகளுக்கு புதிய சொற்களைத் தருகின்றன. கிரேக்கமும் இலத்தீனும், பன்னாட்டு அறிவியல் சொற்களுக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கன.

கிரேக்க அறிஞர்கள்

மெய்யியலைக் குறிக்கும் Philosophy என்ற சொல், கிரேக்க மொழியிலிருந்து பிறந்தது. கிரேக்க மொழியில் Philos என்றால், விரும்புபவர் என்று பொருள். Sophia என்றால் அறிவு, ஞானம் என்று பொருள். அறிவின் விருப்பம் Philosophy எனப்பட்டது. மெய்யியல், மேற்கத்திய மெய்யியல், கிழக்கத்திய மெய்யியல் என இருவகைப்படுத்ப்பட்டது. மேற்கத்திய மெய்யியல் கிரேக்க நாட்டில் தோன்றியது. கிழக்கத்திய மெய்யியல், இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தது. கிரேக்க நாடு, உலகின் தலைசிறந்த மெய்யியல் அறிஞாரகள் பிறந்த பூமி. உலகத்தின் முதல் மெய்யியல் அறிஞர் என்று போற்றப்படும் சாக்ரடீஸ், ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற மெய்யியல் அறிஞர் ஆவார். மேலும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் பிறப்பிடமான கிரேக்க நாட்டை (கிரீஸ்) கௌரவிக்கும் வகையில், ஒலிம்பிக் விளையாட்டு நிறைவு விழாவின்போது, ஒலிம்பிக் கொடி மற்றும், அவ்விளையாட்டு நடைபெறும் நாட்டின் தேசியக் கொடியுடன், கிரேக்க நாட்டின் தேசியக் கொடியும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்படுகின்றன. கிரேக்க நாட்டு மக்கள் மத்தியில் உறுதியான குழும உணர்வு உள்ளது என்றும், கிராம வாழ்க்கை மிகுந்த நல்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

கிரேக்க நாட்டை ஒட்டமான் முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகள் ஆட்சிசெய்தபோதும், இந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். கத்தோலிக்கர் பெரும்பாலும் ஏத்தென்ஸ் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் வாழ்ந்த யூதர்கள், இரண்டாம் உலகப் போரில் நாத்சி படுகொலைகளில் ஏறத்தாழ எல்லாருமே அழிக்கப்பட்டுவிட்டனர். தற்போது இந்நாட்டில் 93 விழுக்காட்டு கிரேக்க நாட்டினரும், 4 விழுக்காட்டு அல்பேனியர்களும் வாழ்ந்து வருகின்றனர். 86 விழுக்காடு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினரும், 1 விழுக்காடு கத்தோலிக்கரும் உள்ளனர். இவ்வளவு சிறப்புமிக்க கிரேக்க நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை, கிரேக்கத் தீவான லெஸ்போசுக்கு மீண்டும் செல்லவுள்ளார். அத்தீவிற்கு 2016ம் ஆண்டில் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணத்தை முடித்துத் திரும்பும்போது, தன்னோடு 12 புலம்பெயர்ந்தோரையும் இத்தாலிக்கு அழைத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "கிறிஸ்தவ ஒன்றிப்பு, பல்சமய உரையாடல், புலம்பெயர்ந்தோர்" ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் திருத்தந்தையின் இந்த 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் தன் நோக்கத்தை நிறைவேற்றும் என நம்புவோம். சைப்பிரசு தீவு நாட்டில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, 4ம் தேதி சனிக்கிழமை காலையில், கிரேக்க நாட்டிற்குச் செல்வார், திருத்தந்தை. அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, 6ம் தேதி வருகிற திங்கள் பகல் 12.35 மணியளவில் திருத்தந்தை உரோம் வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2021, 15:31