தேடுதல்

ஏதென்ஸ் புனித தியோனிசியு பேராலயத்தில் கத்தோலிக்கர் சந்திப்பு

வளர்ந்துவரும் உலகப்போக்கு மற்றும், புலம்பெயர்வோர் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆர்த்தடாக்ஸ் சபையினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் மறைப்பணியாற்றுவது பெரும் சவாலே

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 04, இச்சனிக்கிழமை மாலையில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையினரைச் சந்தித்தபின்னர், உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் இரவு 8.45 மணிக்கு, ஏதென்ஸ் நகரின் புனித தியோனிசியு பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், மற்றும், வேதியர்களோடு சேர்ந்து வழிபாடு ஒன்றில் திருத்தந்தை கலந்துகொண்டார். இவ்வழிபாட்டில் ஏதென்ஸ் ஆயர் பேரவையின் தலைவரும், அந்நகரின் முன்னாள் பேராயருமான Sevastiano Rossolatos அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து, கிரேக்க நாட்டின் Tinos தீவில் மறைப்பணியாற்றும் அர்ஜென்டீனா நாட்டு அருள்சகோதரி ஒருவரும், பொதுநிலை விசுவாசி ஒருவரும் தங்களின் சான்று வாழ்வைத் திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டனர். வளர்ந்துவரும் உலகப்போக்கு மற்றும், புலம்பெயர்வோர் பிரச்சனைகளுக்கு மத்தியில், ஆர்த்தடாக்ஸ் சபையினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் மறைப்பணியாற்றுவதில் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை, அவ்விருவரும் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். பின்னர் திருத்தந்தையும் ஏதென்ஸ் சிறுபான்மை கத்தோலிக்க சமுதாயத்திற்கு உரையாற்றினார். இச்சந்திப்பில் திருத்தந்தை புனித தியோனிசியு அவர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறு, கத்தோலிக்கரை ஊக்கப்படுத்தினார்.

புனித தியோனிசியு பேராலயத்தில் கத்தோலிக்கர் சந்திப்பு
புனித தியோனிசியு பேராலயத்தில் கத்தோலிக்கர் சந்திப்பு

புனித தியோனிசியு

திருத்தூதர் புனித பவுல் ஏதென்ஸ் நகரின் அரயோப்பாகு மன்றத்தில் உரையாற்றியபோது, அம்மன்றத்தின் உறுப்பினராக இருந்த புனித தியோனிசியு அவர்கள், அவ்வுரையைக் கேட்டு மனம் மாறியவர் (தி.பணி17,34). அரயோப்பாகு என்பது, ஏதென்ஸ் நகரின் புகழ்பெற்ற மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். உச்ச நீதிமன்றமாகச் செயல்பட்ட அரயோப்பாகு மன்றம், ஒரு காலத்தில், அரசரின் ஆலோசகர்கள் அவையாக இருந்தது. திருத்தந்தை, புனித தியோனிசியு பேராலயத்தில் கத்தோலிக்கரைச் சந்தித்து திரும்பிய வழியில், ஏதென்ஸ் நகரின் வடமேற்கே அமைந்துள்ள அக்ரோபோலிசை(Acropolis)யும் வாகனத்தில் இருந்துகொண்டே இரசித்தார். அக்ரோபோலிஸ் என்பது, பண்டைக் காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. மதம் தொடர்பான கட்டடங்களும், குடிமக்களின் பொதுக் கட்டடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. ஏதென்ஸ் கத்தோலிக்கரைச் சந்தித்தபின்னர், அந்நகரின் திருப்பீடத் தூதரகம் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க நாட்டில் பணியாற்றும் இயேசு சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இத்துடன் இச்சனிக்கிழமை பயண நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

இயேசு சபை பிரதிநிதிகள் சந்திப்பு
இயேசு சபை பிரதிநிதிகள் சந்திப்பு

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2021, 14:26