தேடுதல்

சைப்பிரசு குடியரசின் அரசுத்தலைவர் Nikos Anastasiadīs அவர்களுடன் திருத்தந்தை சைப்பிரசு குடியரசின் அரசுத்தலைவர் Nikos Anastasiadīs அவர்களுடன் திருத்தந்தை 

சைப்பிரசு அரசுத்தலைவர், அதிகாரிகளுக்கு திருத்தந்தையின் உரை

திருத்தந்தை : சைப்ரசில் நற்செய்தியைக் கொணர்ந்த, புனிதர்கள் பவுல், பர்னபா, மற்றும் மாற்கு சென்ற வழித்தடங்களில் நானும் செல்ல வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்கிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சைப்பிரசு குடியரசுத் தலைவர் அவர்களே, அரசு அதிகாரிகளே, அரசியல் தூதர்களே, மத, மற்றும் சமுதாயத் தலைவர்களே, சமுதாய, மற்றும் கலை உலகின் பிரதிநிதிகளே, உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். கடலை தன் எல்லைகளாகக் கொண்டு, ஐரோப்பாவின் கிழக்கு வாசலாகவும், மத்தியதரைக் கடலின் மேற்கு வாசலாகவும் விளங்கும் இந்நாடு, திறந்த கதவுகளைக் கொண்டதாக, அனைவரையும் ஒன்றிணைக்கும் துறைமுகமாக, கலாச்சாரங்களின் சந்திப்புச் சாலையாக, அனைவரையும் வரவேற்கும் உயரிய மக்களைக் கொண்டதாக உள்ளது என பாராட்டி, தன் முதல் உரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நாட்டின் முதல் அரசுத்தலைவராகப் பணியாற்றிய பேராயர் Makarios அவர்களுக்கு நம் வணக்கத்தை முதலில் செலுத்தினோம், அது முறையானதும்கூட. இவ்வேளையில், கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இந்த இடத்தில் இருந்துகொண்டு, துவக்க காலத்தில் இந்நாட்டில் நற்செய்தி அறிவித்தவர்களைக் குறித்து எண்ணிப்பார்க்கிறேன். குறிப்பாக, துவக்கக் காலங்களில் இங்கு நற்செய்தியைக் கொணர்ந்த, புனிதர்கள் பவுல், பர்னபா, மற்றும் மாற்கு சென்ற வழித்தடங்களில் நானும் செல்ல வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்கிறேன். துவக்க கால கிறிஸ்தவர்கள், ஓர் அழகின் செய்தியை, மலைப்போதனையில் இயேசு வழங்கிய நற்பேறுகளின் புதுமை நிலையை அனைவருக்கும் வழங்கி, பல இதயங்களை வென்றதுடன், பலரின் விடுதலைக்கும் வித்திட்டுள்ளனர். இதனால் இந்நாடு, அனைத்துக் கண்டங்களிலும் அழகின் தூதுவராக செயல்படும் கடமையைக் கொண்டுள்ளது.

இந்நாட்டில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தோர் குறித்து இப்போது எண்ணிப் பார்க்கிறேன். விகிதாச்சாரப்படிப் பார்த்தோமானால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள எந்த ஒரு நாட்டையும்விட இங்குள்ள புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகம். கடலில் ஒரு முத்துபோல் இருக்கும் இந்த நாடு, முத்து உருவாவதில் எதிர்நோக்கும் அனைத்துப் படிகளையும் அனுபவித்து முத்தாய் உயர்ந்துள்ளது. தான் உருவாக்கப்பட்ட பாதையில் துயர்களை அனுபவித்துள்ளது, மற்றும் பொறுமையுடன் செயல்பட்டுள்ளது.

இந்நாட்டில், எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் இனத்தவர்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், கல்வி, மற்றும் பிறரன்புப் பணிகளில் இந்நாட்டில் சேவையாற்றும் கத்தோலிக்க நிறுவனங்கள் ஆற்றிவருபவைகளுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியது குறித்தும் எண்ணிப்பார்க்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று, மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவரும் இந்நாடு, சமுதாய மீட்புப்பணிகளில், இலஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும், மனித மாண்புக்கு ஆதரவான பணிகளிலும், குறிப்பாக, மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துவதற்கு எதிரானப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி காண்பதாக. அண்மைய பல ஆண்டுகளில் இந்நாடு அனுபவித்தத் துன்பங்களை நினைத்துப் பார்க்கிறேன். தங்கள் சொந்த நாடுகளுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லமுடியா ஒருநிலையை இவர்கள் அனுபவித்ததை எண்ணிப் பார்க்கிறேன். இந்நாட்டின் அமைதிக்கு நான் இறைவேண்டல் செய்கிறேன். அமைதியின் பாதையான, கலந்துரையாடல் இங்கு நிலவட்டும். இது, பொறுமையை எதிர்பார்க்கும் ஒரு பாதையெனினும், இதுவே ஒப்புரவை நோக்கிய ஒரே பாதை. இவ்வேளையில், மதத்தலைவர்களிடையே இந்நாட்டில் பேச்சுவார்த்தைகளை உருவாக்க உழைத்துவரும் சுவீடன் நாட்டு தூதரகத்திற்கு என் பாராட்டுக்களை வெளியிடுகிறேன். இந்த நாடு, மத்தியதரைக்கடல் பகுதியில் அமைதியின் தொழில்கூடமாக விளங்குவதாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2021, 15:32