தேடுதல்

சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் சபையின்  பேரவை சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் சபையின் பேரவை 

சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லத்தில் திருத்தந்தை

"வரலாறு மற்றும், நம்பிக்கையின் முத்தான சைப்பிரசில், திருப்பயணியாக, முழு ஒன்றிப்பைநோக்கி நடைபயிலவும், ஆறுதலின் உடன்பிறப்புச் செய்தி மற்றும், நம்பிக்கையின் உயிருள்ள சான்றை உலகுக்கு வழங்கவும், தாழ்ச்சி மற்றும், துணிச்சலை கடவுளிடம் இறைஞ்சுகிறேன்

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 03, இவ்வெள்ளி, புனித பிரான்சிஸ் சவேரியார் திருநாள். இந்நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள். இன்னாளில், உள்ளூர் நேரம் காலை 8.20 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் முற்பகல் 11.50 மணிக்கு, நிகோசியா நகரிலுள்ள, சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லத்திற்கு காரில் சென்றார் திருத்தந்தை. சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராயர் முதுபெரும்தந்தை 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், அவ்வில்லத்தின் நுழைவாயிலில் நின்று திருத்தந்தையை வரவேற்றார். அவரைத் தனியே சந்தித்து கலந்துரையாடிய பின்னர், அவ்வில்லத்தின் விருந்தினர் புத்தகத்திலும் திருத்தந்தை கையெழுத்திட்டார். இருவரும் பரிசுப்பொருள்களையும் பரிமாறிக்கொண்டனர்.  

விருந்தினர் புத்தகத்தில்...

"வரலாறு மற்றும், நம்பிக்கையின் முத்தான சைப்பிரசில், திருப்பயணியாக, முழு ஒன்றிப்பைநோக்கி நடைபயிலவும், திருத்தூதர்களின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, ஆறுதலின் உடன்பிறப்புச் செய்தி மற்றும், நம்பிக்கையின் உயிருள்ள சான்றை உலகுக்கு வழங்கவும், தாழ்ச்சி மற்றும், துணிச்சலை கடவுளிடம் இறைஞ்சுகிறேன். மக்கள் மத்தியில் அன்னை திருஅவை பற்றி பேசுவதற்காக, முதுபெரும்தந்தையே, உங்களுக்கு நன்றி. மேய்ப்பர்களாக, இந்தப் பாதையே நம்மை ஒன்றிணைக்கிறது. இந்தப் பாதையில் முன்னோக்கிச் செல்வோம். உரையாடல் பற்றிப் பேசுவதற்கு மிக்க நன்றி. நாம் எப்போதும் உரையாடல் பாதையிலேயே நடக்கவேண்டும். இப்பாதை, கடினமானது. மேலும் அது, பொறுமை, உறுதி, மற்றும், துணிவு மிக்கதாகும்."இரண்டாம் வருகை, மற்றும், பொறுமை' (கிரேக்கத்தில்)". இவ்வாறு திருத்தந்தை அந்த புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

அதற்குப் பின்னர், திருத்தூதர் ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராலயத்தில், அச்சபையின் பேரவையினரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில், முதுபெரும்தந்தை 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.  

முதுபெரும்தந்தையின் உரை

புனிதர்கள் மற்றும், மறைசாட்சிகள் நிறைந்த சைப்பிரசுக்கு தங்களை வரவேற்கிறேன் என்று உரையைத் தொடங்கிய முதுபெரும்தந்தை அவர்கள், கி.பி. 45ம் ஆண்டில் இத்தீவிற்கு திருத்தூதர்கள் வந்து நற்செய்தி அறிவித்ததிலிருந்து, இன்றுவரை பலனுள்ள கிரிஸ்தவப் பாதையில் சைப்பிரசு திருஅவை சென்றுகொண்டிருக்கிறது என்றும், 1974ம் ஆண்டில் துருக்கி சைப்பிரசைத் தாக்கி, எமது தாயகத்தின் 38 விழுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றியபோது ஆண்டவரின் திருத்தலங்கள் அவமதிக்கப்பட்டன, தீயிட்டு கொளுத்தப்பட்டன, குடிமக்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறினார். அன்றிலிருந்து, சைப்பிரசு இன ஒழிப்பு என்ற நடவடிக்கையில், 2 இலட்சம் கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று கூறி, இத்தகைய சூழலில் திருத்தந்தையின் ஆதரவு தங்களுக்குத் தேவை என்று எடுத்துரைத்தார். முதுபெரும்தந்தையின் உரைக்குப்பின் திருத்தந்தையும் உரையாற்றினார். முதுபெரும்தந்தை 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் இறுதி வழியனுப்பும் திருப்பலியிலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணி நிகழ்விலும் கலந்துகொண்டவர். இவர், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2010ம் ஆண்டில் சைப்பிரசுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோதும் அவரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து மற்றும், 12ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதும், திருத்தூதர் புனித யோவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதுமான இந்த பேராலயத்தில் நடைபெற்ற சந்திப்புக்குப்பின், GSP எனப்படும், அந்நகரின் திறந்தவெளி அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

GSP திறந்தவெளி அரங்கத்தில் திருப்பலி

GSP திறந்தவெளி அரங்கத்தில் திருப்பலி
GSP திறந்தவெளி அரங்கத்தில் திருப்பலி

புனித பிரான்சிஸ் சவேரியார் நினைவாக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், முதலில், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபால்லா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன்பின்னர் திருப்பலி ஆரம்பமானது. சைப்பிரசு அரசுத்தலைவர் உட்பட, ஏறத்தாழ பத்தாயிரம் பேர் கலந்துகொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார்.

திருத்தந்தையின் நன்றியுரை

இத்திருப்பலியின் இறுதியில், அதில் பங்குபெற்ற சைப்பிரசு அரசுத்தலைவருக்கும், மற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சைப்பிரசில், புனித பூமி என்ற சூழலை நான் உணர்ந்தேன். இங்கு வருகின்ற திருப்பயணிகளை பல்வேறு கிறிஸ்தவ மரபுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. வருங்காலத்தை நம்பிக்கை மற்றும், திறந்தமனதோடு எதிர்பார்க்கின்ற கிறிஸ்தவ சமூகங்களைச் சந்திப்பது ஊக்கமூட்டுகிறது. சிறந்ததோர் வாழ்வைத் தேடிவரும் புலம்பெயர்ந்தோரை சிறப்பாக நினைக்கின்றேன். இந்த திருத்தூதுப் பயணத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. எனக்காகச் செபியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக மற்றும், அன்னை மரியா உங்களைப் பாதுகாப்பாராக. நன்றி. இவ்வாறு திருத்தந்தை நன்றி கூறினார்.

இத்திருப்பலியை நிறைவுசெய்து திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தி ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அத்தூதரகத்தில், சைப்பிரசின் யூதமத ரபி அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தார்.

யூதமத ரபி, திருத்தந்தை சந்திப்பு
யூதமத ரபி, திருத்தந்தை சந்திப்பு

டிசம்பர் 03, இவ்வெள்ளி பிற்பகலில், திருச்சிலுவை ஆலயத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து வழிபாடு ஒன்றை நிறைவேற்றினார். இதுவே சைப்பிரசு திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் இறுதி நிகழ்வாகும். டிசம்பர் 4, இச்சனிக்கிழமை காலையில் சைப்பிரசு நாட்டினருக்கு நன்றி சொல்லி, கிரேக்க நாட்டிற்குச் செல்வார் திருத்தந்தை. அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, டிசம்பர் 06, வருகிற திங்களன்று வத்திக்கான் வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வரும்.   

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2021, 14:38