தேடுதல்

'திருத்தந்தையை ஒரு கிறிஸ்தவராக்கினேன்' என்ற நூல் 'திருத்தந்தையை ஒரு கிறிஸ்தவராக்கினேன்' என்ற நூல் 

'திருத்தந்தையை ஒரு கிறிஸ்தவராக்கினேன்,' என்ற தலைப்பில் நூல்

திருத்தந்தை : சலேசிய அருள்பணி Pozzoliயிடம், நான் இயேசு சபையில் சேர விரும்புவதாகக் கூறியபோது, என் விருப்பத்தை மதித்து, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1936ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குழந்தையாக இருந்தபோது அவருக்கு திருமுழுக்கு வழங்கிய சலேசிய சபை அருள்பணி Enrico Pozzoli அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல், திருத்தந்தையின் அணிந்துரையுடன் இவ்வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.

'திருத்தந்தையை ஒரு கிறிஸ்தவராக்கினேன்,' என்ற தலைப்பில், நவம்பர் மாதம் 10ம் தேதி, புதன்கிழமையிலிருந்து இத்தாலியின் பல்வேறு நகர்களில் வெளியிடப்படவிருக்கும் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு திருமுமுழுக்கு வழங்கியது மட்டுமல்ல, தான் இயேசுசபை நவதுறவறத்தில் சேர்வதிலும், அருள்பணி Enrico Pozzoli காட்டிய ஆர்வத்தை விவரித்துள்ளார்.

Ferruccio Pallavera என்பவரால் எழுதப்பட்டுள்ள இந்நூலின் அணிந்துரையில், தனக்கு திருமுழுக்கு வழங்கிய அருள்பணி Pozzoli அவர்களைப்பற்றி கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னிடம் உதவி என ஓடிவந்த அனைத்து மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிவந்த இந்த அருள்பணியாளர், அனைவரின் பாராட்டையும் பெற்றவராக இருந்தார் என கூறியுள்ளார்.

சலேசிய அருள்பணி Pozzoli அவர்கள், மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் செவிமடுத்தவர் மட்டுமல்ல, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் சோர்வின்றி செயல்பட்டவர் என்று திருத்தந்தை எழுதிய அணிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தான் அருள்பணியாளராக விரும்பியதை 1955ம் ஆண்டு தன் பெற்றோரிடம் கூறியபோது, தன் தாய் தன்னிடம் அது குறித்து ஆழமாக சிந்தித்து முடிவெடுக்கும்படியாகவும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு செல்லும்படியாகவும் கூறியதாக அப்புத்தக அணிந்துரையில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தன் வலது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அதன் மேல்பகுதி நீக்கப்பட்ட பெரிய அறுவைச் சிகிச்சைக்குப்பின், அருள்பணி Pozzoliயைச் சந்தித்து தன் தேவ அழைத்தல் குறித்து உரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சலேசிய அருள்பணி Pozzoliயிடம், தான் இயேசு சபையில் சேர விரும்புவதாகக் கூறியபோது, தன் விருப்பத்தை அவர் மதித்து, அது குறித்து  இயேசுசபையில் விசாரித்து அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ததாகவும், அச்சபையில் சேர்வதற்கு முன்பிருந்த நான்கு மாத  இடைவெளியின்போது, தனக்கு சலேசிய இல்லத்தில் இடம் ஏற்பாடுச் செய்து, தன் அறுவைச் சிகிச்சை பாதிப்புகளிலிருந்து ஓய்வெடுக்க உதவியதாகவும், அருள்பணி Pozzoli குறித்து பெருமையாக எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணி  Enrico Pozzoli பற்றிய இந்நூல், நவம்பர் 10, புதன்கிழமையன்று, இத்தாலியின் Asti நகரில் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் அங்குள்ள குருமடத்திலும், 12ம் தேதி வெள்ளிக்கிழமையன்று, உரோம் நகர் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, மற்றும் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் Lorenzo Guerini, சலேசிய துறவு சபை அதிபர் Angel Fernandez Artime அவர்கள் முன்னிலையிலும்,  14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, இத்தாலிய லொம்பார்தி மாநிலத்தின் Senna Lodigianaவிலும், 16ம் தேதி Lodi நகரில், அதன்ஆயர், மற்றும் L’Osservatore Romano இயக்குனர், Andrea Monda அவர்களின் முன்னிலையிலும் வெளியிடப்படும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2021, 11:31