தேடுதல்

கிரேக்க நாட்டில் புலம் பெயர்ந்தோரை சந்தித்த திருத்தந்தை (16.04.2016) கிரேக்க நாட்டில் புலம் பெயர்ந்தோரை சந்தித்த திருத்தந்தை (16.04.2016) 

டிசம்பர் முதல் வாரத்தில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம்

சைப்ரஸ், மற்றும் கிரேக்க திருப்பயணத்தின்போது, புலம்பெயர்ந்தோரையும், குடிபெயர்ந்தோரையும், இளையோரையும் சந்திக்க உள்ள திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் 6ம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ் மற்றும் கிரேக்க நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

டிசம்பர் மாதம் 2ம் தேதி, உரோம் Fiumicino விமானத்தளத்திலிருந்து உள்ளூர் நேரம் 11 மணிக்கு, தன் பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை, சைப்ரஸ் தலைநகர் Nicosiaவுக்கு அருகில் உள்ள Larnaca விமானத்தளத்திற்கு, பிற்பகல் உள்ளூர் நேரம் 3 மணிக்குச் சென்றடைகிறார்.

அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்வுகளுக்குப்பின், அருள்நிறை மரியே மாரனைட் வழிபாட்டுமுறை பெருங்கோவிலில், அருள்பணியாளர்கள், துறவறத்தார், திருத்தொண்டர்கள், வேதியர், கத்தோலிக்க இயக்கங்கள் ஆகியோரை முதலில் சந்திக்கும் திருத்தந்தை, அன்று மாலையே அரசுத்தலைவரையும், அரசு அதிகாரிகளையும், அரசியல் தூதர்களையும் சந்திப்பார்.

டிசம்பர் 3ம் தேதி, சைப்ரசின் ஆர்த்தடாக்ஸ் பேராயர், இரண்டாம் கிரிஸோஸ்தோமோஸ் அவர்களைச் சென்று சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிக்கோசியாவின் ஆர்த்தடாக்ஸ் பெருங்கோவிலில் ஆயர் மாமன்றத்தை சந்திப்பதுடன், தலைநகர் GSP அரங்கில் திருப்பலி நிறைவேற்றி, அன்று மாலையே, குடியேற்றதாரருடன், கிறிஸ்தவ சபைகளின் செபவழிபாட்டிலும் கலந்துகொள்வார்.

டிசம்பர் 4ம் தேதி சனிக்கிழமையன்று, சைப்ரஸ் நாட்டிலிருந்து விடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து கிரேக்க நாடுச் சென்று, அரசுத்தலைவர், பிரதமர், அரசு அதிகாரிகள், அரசியல் தூதர்கள், ஆகியோரைச் சந்தித்தபின், கிரேக்கத்தின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் ஹெரோனிமோஸ் அவர்களையும் சந்திப்பார்.

அன்று மாலையே கிரேக்கத்தின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், குருமட மாணவர்கள், வேதியர் ஆகியோரை சந்தித்து உரை வழங்கியபின், அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபைப் பிரதிநிதிகளைத் தனியாகச் சந்தித்து உரையாடுவார்.

டிசம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலையில் புலம் பெயர்ந்தோரை சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் நிகழ்த்தும் திருத்தந்தை, அன்று மாலை திருப்பலியை தலைநகர் ஏதன்ஸில் நிகழ்த்தியபின், தன்னை திருப்பீடத் தூதரகத்தில் மரியாதை நிமித்தம் சந்திக்க வரும் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் ஹெரோணிமோசை சந்தித்து உரையாடுவார்.

தன் திருத்தூதுப்பயணத்தின் இறுதி நாளான டிசம்பர் 6, திங்கள்கிழமை, பாராளுமன்றத் தலைவரை திருப்பீடத் தூதரகத்தில் சந்தித்தபின், தலைநகரின், Maroussi எனுமிடத்தில் உள்ள புனித Dionysius பள்ளியில் இளையோரை சந்திப்பதுடன், தன் பயணத்திட்டங்களை நிறைவுச் செய்து, அன்று காலையே உரோம் நகர் திரும்புவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2021, 14:21